முழு ஊரடங்கு அமலில் உள்ள பகுதிகளில் 5ந்தேதிவரை நீடிப்பு

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 20:52

சென்னை

30.6.20ந்தேதியோடு முடிவரைய உள்ள ஊரடங்கு 5.7.20ந்தேதி வரை நீடிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு திங்கள் இரவு வெளியிட்ட 12 பக்க அறிவிப்பின் சுருக்கம் வருமாறு:

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய  உள்ள ஊரடங்கு உத்தரவு,  31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. அந்த உத்தரவு கீழ்க்காணும் மாற்றங்களுடன் தமிழகத்தில் அமல் செய்யப்படும்.

பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், 

திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், 

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும், 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நோய்த்தொற்று அதிகம் உள்ளதை கருத்தில் கொண்டு, 12 நாட்களுக்கு அமல்படுத்திய முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் 

மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாரங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 24.6.2020 அதிகாலை 00 மணி முதல் 30.6.2020 இரவு 12 மணி வரை 7 நாட்களுக்கு அமல் படுத்திய முழு ஊரடங்கு 5.7.2020 வரை தொடரும்.

19.6.2020க்கு முன்னர் சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும். 

அதேபோல் மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும்.

ஞாயிறுகளில் முழு ஊரடங்கு

          5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.

வழிபாட்டு தலங்கள்

கிராமப்புரங்களில் உள்ள சிறிய திருக்கோயில்கள், அதாவது 10,000 ரூபாய்க்கும் குறைவாக ஆண்டு வருமானம் உள்ள திருக்கோயில்களிலும், சிறிய மசூதிகளிலும், தர்காக்களிலும், தேவாலயங்களிலும் மட்டும் பொதுமக்கள் தரிசனம் அனுமதிக்கப்படும்.  இத்தகு வழிபாட்டுத்தலங்களில் சமூக இடைவெளி மற்றும் பிற நோய் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

தேநீர்க் கடைகள், உணவகங்களில் அமர்ந்து உணவு அருந்த அனுமதி அளிக்கப்படுவதோடு, 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது. எனினும், உணவகங்களில் குளிர் சாதன வசதி இருப்பினும், அவை இயக்கப்படக் கூடாது.

டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி

பொது பேருந்து ரயில், விமான பயணங்களுக்கான தடை தொடர்கிறது. 

வாடகை டாக்ஸி வாகனங்கள் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஆட்டோக்கள் இரண்டு பயணிகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.  சைக்கிள் ரிக்ஷாவும் அனுமதிக்கப்படுகிறது.

நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்று அதிகரிப்பதால் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது.  இதனால் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்.  எனவே, பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.