நாளை இந்திய-சீன படைத் தளபதிகள் 3வது சுற்றுப் பேச்சு

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 19:59

புதுடெல்லி

நாளை செவ்வாய்க்கிழமை இந்திய-சீன படைத் தளபதிகளின் 3வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்தத் தகவலை புதுடெல்லியில் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ள இந்திய குழுவுக்கு லெப்டினட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமை  வகிக்கிறார்.

இரண்டாவது சுற்று இந்திய சீன பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட இந்திய ராணுவ படை தளபதிகளின் அணிக்கு  ஹரிந்தர் சிங்தான் தலைமை   வகித்தார்.

சீன  தரப்பில் சீன மேஜர் ஜெனரல் லியூ லீன் சீன அதிகாரிகள் குழுவுக்கு தலைமை வகித்து பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கிறார்.

முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை ஜூன் 6ம் தேதியும் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஜூன் 22ம் தேதியும் நடைபெற்றன,

முதல் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்ற பிறகு ஜூன் 15ஆம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ ராணுவம் தாக்குதல் நடத்தி 20 பேரை கொன்றது.

ஜூன் 22ஆம் தேதி இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்த பொழுது இரு தரப்பும் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 2.5 கிலோ மீட்டர் தூரம் பின்வாங்கிச் செல்ல வேண்டும் என்று உடன்பாடு எட்டப்பட்டது.

 ஆனால் இரண்டு தரப்பிலும் இந்த முடிவை அமல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது .

எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம் நிறைந்த ஐந்து அல்லது ஆறு இடங்களில் இன்னும் இந்திய வீரர்களும் சீன வீரர்களும் கை எட்டும்தூரத்தில்தான் உள்ளனர்.

 இந்தப் பின்னணியில் மூன்றாவது சுற்றுப் பேச்சு செவ்வாயன்று நடைபெற உள்ளது.

படைத்தலைவர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையால் பெரும் மாற்றங்கள் ஏற்படாவிட்டாலும் இருதரப்பு உறவில் தொடர்புக்கான வாய்ப்பு தொடர்ந்து கிடைக்கிறது . அதனால் படைத்தலைவர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையை இருதரப்பும் கைவிடாமல் பின்பற்றுகிறார்கள் என கூறப்படுகிறது.

.