ஊரடங்கு வேண்டாம், கட்டுப்பாடுகள், கூடுதல் சோதனைகள் தேவை – மருத்துவக் குழு பரிந்துரை

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 18:10

சென்னை கூ

சென்னையில் கொரோனா பாதித்த பகுதிகளில் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால்போதும், பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரிக்க வேண்டும் என்று  தமிழ்நாடு அரசுக்கு மருத்துவ நிபுணர்குழு இன்று பரிந்துரை செய்தது. கொரோனா என்ற கொசுவை ஒழிக்க ஊரடங்கு என்ற கோடாரியை பயன்படுத்த தேவையில்லை எனவும்  மருத்துவ நிபுணர்கள் இன்று கூறியுள்ளனர். முழு ஊரடங்கு குறித்து தனது முடிவை தமிழக அரசு விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு இன்று இரவு உத்தரவிட்டுள்ளது.

 கொரோனா தொற்றை தடுக்க தேவையான ஆலோசனை மற்றும் பரிந்துரைகளை வழங்கும் வகையில்  தமிழக அரசால் அமைக்கப்பட்ட  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் துணை இயக்குனர் பிரதீப் கவுர் தலைமையில் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார், தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையின் போது வெளிஇடங்களில் இருந்த  சில நிபுணர்களுடன் காணொலி வாயிலாகவும் முதலமைச்சர் கருத்துக்களை கேட்டறிந்தார்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் பிரதீப் கவுர் நிருபர்களுக்கு அளித்த பேட்டிவிவரம்:

கொரோனா பரவலைத் தடுக்க பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு ஏழாவதுமு றையாக தமிழக முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எங்கள் தரப்பில் சில பரிந்துரைகளை முன் வைத்துள்ளோம். பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது நல்ல விஷயம். தினமும் 32 ஆயிரம் அளவில் சோதனைகள் அதிகரித்துள்ளன ஆரம்ப நிலையிலேயே நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்க முடியும் என்பதால் தான் பரிசோதனைகளை அதிகரிக்கக் கோரினோம், அதன் மூலம் நோய்த் தொற்றுள்ளவர்களைக் காப்பாற்றவும்  சரியான சிகிச்சை அளிக்கவும் முடியும், இதுவரை நாம் சென்னையை மட்டுமே பேசி வருகிறோம், ஆனால், கடைசி 2 வாரங்களைப் பார்க்கும்போது மாவட்டங்களில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

நோய்த் தொற்று இரட்டிப்பாகும் நாட்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே, சென்னையில் மேற்கொண்ட முயற்சிகளை மற்ற மாவட்டங்களிலும் மேற்கொள்ள பரிந்துரைத்துள்ளோம்,

இதில்  சென்னையில் மிக அதிக இடங்களில் காய்ச்சல் முகாம்கள்  நடத்தி நோய்த் தொற்றுக்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடிந்தது இந்த முயற்சியை மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம். ஆகவே, உங்கள் பகுதியில் இதுபோன்ற அறிகுறி, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல், சுவை உணர்வு இல்லாமல் இருப்பது இதுபோன்ற ஏதாவது ஒருஅறிகுறி இருந்தால் உடனடியாக முகாமுக்கு வந்துவிட வேண்டும். சிலர் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து அச்சப்படுகிறார்கள். சென்னையில் நோய்த் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும் தொற்று இரட்டிப்பாகும் நாட்கள் அதிகரித்துள்ளன. இது நல்ல விஷயம். எத்தனை நாளில் நோய்த் தொற்று அதிகரிப்பதற்கு நாம் அதிக அளவிலான தொற்றுள்ளவர்களைக் கண்டறிந்துள்ளோம். அது நல்ல விஷயம் பரிசோதனையை தொடர வேண்டும் அதன் மூலம் இறப்பு எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.

பொது ஊரடங்கை  நீட்டிக்க பரிந்துரைக்கவில்லை.

பொது ஊரடங்கை மேலும் நீட்டிக்க நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு தீர்வல்ல. சென்னையில் முழு ஊரடங்கு காரணமாக இரட்டிப்பு எண்ணிக்கை அறிய முடிந்தது. நோய்த்தொற்றுப் பரவுதல் குறைந்தது. இதற்காக ஊரடங்கைத் தொடர முடியாது சில விஷயங்களை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. நாங்களும் பரிந்துரைக்கிறோம். நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால் ஒரு மாவட்டத்தைக் கையிலெடுத்து அதில் ஒரு ஏரியாவை எடுத்து நோய்த்தொற்று, சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தரவுகளைக் கையிலெடுத்து, ஒரு மாவட்டத்தின் நிலையைக் கணக்கிடுகிறோம். அதையெல்லாம் வைத்து எந்தப் பகுதியில் நிலைமை சரியில்லை என்பதைக் கணக்கிட்டு அந்தப் பகுதியில் கட்டுப்பாட்டை அதிகப்படுத்தி அங்குள்ள மக்களுக்கு அதிக அளவில் சிகிச்சை அளித்து சரி செய்ய முயல்கிறோம்.

ஆகவே நாங்கள் சொல்லும் இன்னொரு பரிந்துரை பொதுப் போக்குவரத்து காரணமாக தொற்று அதிகரித்துள்ளதை நிறைய மாவட்டங்களில் கண்டறிந்துள்ளோம். ஆகவே பொதுப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதேபோன்று பொதுமக்கள் ஒன்று கூடுவதை அனுமதிக்கக்கூடாது.

ரேபிட் சோதனை நமக்குத் தேவை இல்லை. பிசிஆர் சோதனைகள் மட்டும் போதும். தொற்று இருப்பதாக அறிகுறி அறிந்தால் பிசிஆர் சோதனை போதும். இவ்வாறு பிரதீப் கவுர் தெரிவித்தார்.தொடர்ந்து

ராமசுப்ரமணியன் கூறியதாவது

மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர் ராமசுப்ரமணியன் கூறியதாவது.

முதல் விஷயம், கொரோனா பாதித்தவர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும் அச்சப்பட வேண்டாம். அறிகுறி தென்பட்டதும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். பரிசோதனைக்கும், முடிவுகள் வரவும் காலம் ஆனாலும் அதுவரை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். கடந்த இரண்டு வாரத்தில் மருத்துவத்துறையில் சிகிச்சை முறைகளில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, அவற்றை தொகுத்து, சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்படும். ஆனால், பொது மக்கள் ஒத்துழைப்பு கிடைத்தால்தான் கொரோனா தொற்றை ஒழிக்கமுடியும். ஆனால், கொரோனாவைக் கட்டுப்படுத்த பொது முடக்கத்தையே தொடரமுடியாது. இன்னும் 6 மாத காலத்துக்கு  ஊரடங்கை நீட்டிக்க முடியாது. ஊரடங்கு என்பது மிகப்பெரிய ஆயுதம்.

உதாரணமாக ஊரடங்கு மூலம் கொரோனாவை ஒழிப்பது என்பது கோடரியைக் கொண்டு கொசுவை அடிப்பதற்கு ஒப்பாகும். எனவே பொது முடக்கத்தையே நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது. பொது மக்கள் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு, அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

குகநாதன் கூறுகையில்

மருத்துவக் குழுவை சேர்ந்த குகநாதன் தமிழகத்தில் 80 சதவீத பேருக்கு லேசான அறிகுறிகளுடன்தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனா சிகிச்சைக்கு அமெரிக்காவில் இருந்துகூட மருந்துகளை வரவழைத்துள்ளோம். தேவையான படுக்கை வசதிகளை அரசு செய்துள்ளது. மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொது முடக்கத்தால் பாதிப்பு இரட்டிப்பாகும்  வேகம் குறைந்திருப்பது நல்ல அறிகுறி. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.


ஜூலை 31வரை ஊரடங்கு நீட்டிப்பு  - அரசு உத்தரவு

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் தற்போது 30.6.2020 முடிவடைய  உள்ள ஊரடங்கு உத்தரவு,  31.7.2020 நள்ளிரவு 12 மணி வரை தமிழ்நாடு முழுவதும் மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.  

மதுரை மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 24.6.2020க்கு முன்னர் இப்பகுதிகளில் இருந்த ஊரடங்கின் நிலையே 6.7.2020 அதிகாலை 00 மணி முதல் 31.7.2020 நள்ளிரவு 12.00 மணிவரை தொடரும்.

        ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காய்கறி/பழக்கடைகளைப் போன்று, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளிடம் இருந்து முறையான வியாபார அனுமதி பெற்ற மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்றும் முட்டை விற்பனை கடைகள் சமூக இடைவெளி நடைமுறைகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு:

5.7.2020, 12.7.2020, 19.7.2020 மற்றும் 26.7.2020 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்.

திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இறுதி ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகள்:

·திருமண நிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.
·இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 50 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

பொது பேருந்து போக்குவரத்து :

மாநிலத்தில் மாவட்டங்களுக்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 1.7.2020 முதல் 15.7.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.

அரசு அமல் படுத்திவரும் ஊரடங்கு மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் தீவிர பரிசோதனை மூலம் நோய்த்தொற்று அதிகரிக்கும் வேகம் குறைந்திருந்தாலும், நோய்த்தொற்று அதிகரிப்பதால் மக்களைக் காக்க தற்போதுள்ள ஊரடங்கு நடைமுறையை மேலும் தொடர வேண்டிய நிலையில் அரசு உள்ளது. 

 இதனால் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்.  எனவே, பொது மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.