இந்தியாவில் 20,000 பேருக்கு தற்காலிக வேலைவாய்ப்பு : அமேசான் இந்தியா தகவல்

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 17:10

ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் இந்தியா தன் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்க தனது வாடிக்கையாளர் சேவை (Customer service) அமைப்பில் 20,000 தற்காலிக வேலை வாய்ப்புகளை வழங்க போவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து அமேசான் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய 20,000 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.  ஐதராபாத், புனே, கோயம்புத்தூர், நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூரு, இந்தூர், போபால் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் தற்காலிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த புதிய வேலைவாய்ப்பை பெறுவோர் மின்னஞ்சல், சாட்டிங், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி மூலம் வாடிக்கையாளர் சேவைகளை வழங்க வேண்டும்.

இந்த பதவிகளுக்கு குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு அல்லது கன்னடம் என எதோ ஒரு மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இந்த தற்காலிக பணியாளர்கள் அவர்களின் செயல்திறன் மற்றும் வணிகத் தேவைகளின் அடிப்படையில், இந்த ஆண்டின் இறுதியில் நிரந்தர பணியாளர்களாக மாற்றப்பட வாய்ப்புள்ளது என்று அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

"வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக வாடிக்கையாளர் சேவை அமைப்பு முழுவதும் புதிய வேலைவாய்ப்புகளை உருவக்குவதற்கான தேவைகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம். இந்தியா மற்றும் உலக நாடுகளில் விடுமுறை காலங்கள் தொடங்குவதால் அடுத்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் தேவை மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்" என்று அமேசான் இந்தியா இயக்குனர் (வாடிக்கையாளர் சேவை) அக்‌ஷய் பிரபு கூறினார்.

இந்த தற்காலிக வேலைவாய்ப்புகள் இன்றைய பிரச்சனையான காலக்கட்டத்தில் பணியாளர்களுக்கு வேலை பாதுகாப்பையும் வாழ்வாதாரத்தையும் வழங்கும் என்றும் அக்‌ஷய் பிரபு தெரிவித்தார்.

கடந்த மே மாதம், அமேசான் இந்தியா நிறுவனம் தனது கிடங்கு மற்றும் விநியோக பிரிவில் 50,000 வேலைவாய்ப்புகளை வழங்க போவதாக அறிவித்தது குறுப்பிடத்தக்கது.