சீனப்பொருள் வேண்டாம் என்றால் இந்திய உற்பத்தி வலுவடைய வேண்டும்: மாருதி தலைவர் கருத்து

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 14:59

புதுடெல்லி

சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை நாம் புறக்கணிக்க வேண்டும் என்ற முழக்கத்துக்கு பதிலாக நாம் நமது உற்பத்தித் துறையை வலுப்பெறச் செய்ய வேண்டும் என்று மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்க்கவா இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

ஒரு பொருளை வெளிநாட்டிலிருந்து தொடர்ச்சியாக ஆண்டுக்கணக்கில் இறக்குமதி செய்தால் அந்த பொருளின் விலை தானாக உயர்ந்து விடுகிறது என்று பார்க்கவா கூறினார். அதற்கு காரணம் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்து வருவது தான். பத்தாண்டுகளில் இறக்குமதி செய்யப்படும் ஒரு பொருளின் விலை 60 முதல் 70 சதவீதம் உயர்ந்து விடுகிறது எனவும் பார்க்கவா தெரிவித்தார்.

சில பொருள்களைப் பொருத்தமட்டில் அவற்றை இறக்குமதி செய்வதைத் தவிர உற்பத்தியாளர்களுக்கு வேறு வழி இருப்பதில்லை. ஏனென்றால் தேவைப்படும் அந்த குறிப்பிட்ட பொருள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.  சில நேரங்களில் அவை உற்பத்தி செய்யப்படுவதில்லை. அல்லது போதுமான எண்ணிக்கையில் இந்தியாவில் அவை உற்பத்தி செய்யப்படுவதில்லை .

சில சந்தர்ப்பங்களில் இந்தியாவில் தேவைப்படும் பொருள் உற்பத்தி செய்யப்பட்டாலும். போதுமான எண்ணிக்கையில் கிடைத்தாலும் அதன் விலை அதிகமாக இருக்கும்.

 அத்தகைய சந்தர்ப்பங்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்கி அவற்றைப் பயன்படுத்தினால் ஒட்டுமொத்தமாக பொருளின் விலை உயர வாய்ப்பு ஏற்படுகிறது. அதனால் இறக்குமதி பொருட்களை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது என்று பார்க்கவா தெரிவித்தார்.

பொதுவாக எந்த ஒரு நிறுவனமும் வெளிநாட்டிலிருந்து பொருளை இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை.வேறு வழி இல்லாத காரணத்தினால் தான் இறக்குமதி செய்ய தீர்மானிக்கிறார்கள். சில பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என்று கோஷம் எழுப்பப்படுகிறது. இந்த கோஷங்களை எழுப்புவோர் உணர்வையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது,

ஆனால் பிரச்சனை என்னவென்றால் நாம் அதேபொருளை இந்தியாவில் உற்பத்தி செய்தால் அதன் விலை போட்டியிடும் அளவில் இருக்கவேண்டும். தரமும் உயர்வானதாக கிடைக்க வேண்டும். இவ்வாறு உயர்ந்த தரம். குறைவான விலையில் பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய முடியும் பொழுது எந்தக் கம்பெனியும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய விரும்பாது என பார்க்கவா உறுதியாக கூறினார்.

சீனாவில் இருந்து மோட்டார் வாகன உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்யக்கூடாது என்று கருத்து பற்றி பேசும்பொழுது மக்களின் மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்திய - சீன எல்லையில் நடந்த சம்பவங்கள் இத்தகைய உணர்வுக்கு காரணமாக உள்ளன. எனவே சீன மோட்டார் வாகன உதிரி பொருட்களை வாங்க வேண்டாம் என்ற கருத்து இந்த நேரத்தில் இயல்பானதாகவே உள்ளது.இத்தகைய சந்தர்ப்பங்கள் இதற்கு முன்பும் பலமுறை தோன்றியுள்ளது. சில நேரங்களில் பாகிஸ்தானிடமிருந்து நாம் பொருள்களை இறக்குமதி செய்யக்கூடாது என்று புறப்பட்டது.இப்பொழுது சீனாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யக்கூடாது என்று வலியுறுத்தப்படுகிறது.

இந்த பிரச்சனை குறித்து இந்திய அரசு ஆழமாகவும் தொலைநோக்குப் பார்வையுடனும் சிந்தித்து கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.

ஒரு பொருளை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்தினால் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படுமா? ஒட்டுமொத்தமாக பொருளாதார நலனுக்கு இறக்குமதி  ஏற்றதா இல்லை, இறக்குமதியை தவிர்ப்பது நல்லதா? என்று அரசு சிந்தித்து முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

சர்ச்சைக்குரிய ஒரு பொருள் மிகவும் முக்கியமானது அல்ல என்றால் அது பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை . அந்த பொருளின் இறக்குமதியை நிறுத்தி விடலாம். ஆனால் அது மிக முக்கியமான பொருளாக இருக்கும் பட்சத்தில் அப்படிச்செய்ய முடியாது.

இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு ஒரு பொருளை உற்பத்தி செய்தாலும் அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு உற்பத்தி செய்தாலும் இறுதியில் அந்த பொருளை நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தந்து வாங்கிக் கொள்ளப் போவது நம்முடைய மக்கள் தான். அவர்கள் வாங்கக் கூடிய நிலையில் பொருளின் விலை இருக்குமா? மக்களின் பொருளாதார நலனை நாம் நிர்ணயிக்கும் விலை பாதிக்குமா?

ஒரு காருக்கு தேவையான 2 சதவீத உதிரிபாகங்கள் வெளிநாட்டிலிருந்து குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. அந்த பாகங்களை இறக்குமதி செய்யாவிட்டால் காரை நாம் உற்பத்தி செய்ய முடியாது. அந்த நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதியை நாம் தடை செய்தால் அல்லது நிறுத்திவிட்டால் கார் உற்பத்தி பாதிக்கப்படும். இத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்படுவது யார் ? இந்தியா பாதிக்கப்படுகிறதா அல்லது வேறு நாடுகள் பாதிக்கப்படுமா?

கார் உற்பத்தி நிறுத்தப்படுவதால் வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு பாதிக்கப்படும்?  விற்பனையாளர்களை பொருத்தமட்டில் எத்தனை பேர் பாதிக்கப்படுவார்கள்? அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் பாதிக்குமா? எவ்வளவு இழப்பு ஏற்படும்? இவை எல்லாம் அரசு கணக்கு எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று மாருதி கார் உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் பார்க்கவா தெரிவித்தார்.