கராச்சியில் உள்ள பங்கு விற்பனை நிலையம் மீது திடீர் தாக்குதல்: 6 பேர் பலி

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020 13:39

கராச்சி

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள பங்கு விற்பனை நிலையம் மீது திங்களன்று 4 பேர் திடீரென்று தாக்குதல் நடத்தினர். பங்கு விற்பனை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்திய 4 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு பேரும் துப்பாக்கி சூட்டில் பலி ஆனார்கள்.

திங்கள்கிழமை காலை கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்கு விற்பனை நிலையம் அருகே சில்வர் கரோல்லா கார் ஒன்று வந்து நின்றது அந்த காரில் இருந்து 4 பேர் இறங்கினார்கள், அவர்கள் கையெறி குண்டுகளை பாகிஸ்தான் பங்கு விற்பனை நிலையம் மீது வீசினார்கள். கையெறி குண்டுகள் பாகிஸ்தான் பங்கு விற்பனை நிலையத்தில் விழுந்து வெடித்ததும் அங்கு காவலுக்கு இருந்த வீரர்கள் காரில் வந்து இறங்கி குண்டு வீசியவர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார்கள். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சிறிது நேரத்தில் பாகிஸ்தான் பங்கு விற்பனை நிலையம் மீது தாக்குதல் நடத்திய 4 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் குண்டு பாய்ந்து அந்தப் பகுதியைச் சேர்ந்த இருவரும் கொல்லப்பட்டனர் இந்தத் தகவலை கராச்சி நகர காவல்துறை தலைவர் குலாம்நபி மேமன் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பங்கு விற்பனை நிலையம் உள்ள வளாகத்தில் பாகிஸ்தானின் முக்கியமான பல வங்கிகளும் உள்ளன.

பங்கு விற்பனை நிலைய காவல் பணியில் இருந்தவர்கள் விழிப்புடன் இருந்து உடனடியாக இந்தத் தாக்குதல் நடத்தியதால் கூடுதல் சேதம் மற்றும் இழப்புகள் தவிர்க்கப்பட்டன.

இந்த தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.

தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு படையினரும் புலனாய்வு பிரிவினரும் தற்பொழுது ஆய்வு நடத்தி வருகின்றனர்.