டிவி சிப்ஸ்(29.06.2020)

பதிவு செய்த நாள் : 29 ஜூன் 2020

 அமோக   வரவேற்பு!

      கணேஷ்  வெங்கட்ராமனும்   டிவி  காம்பியர் + நடிகை  நிஷாவும் காதல் திருமணம் புரிந்து கொண்டவர்கள்.   பல  மாதங்களுக்கு  முன்  இருவருக்கும்  ஒரு பெண் குழந்தை பிறந்தது.   அதை தொடர்ந்து  நிஷா நடிப்பதில்லை,  காம்பியரிங்  பண்ணுவதில்லை.  

         அவ்வப்போது  அவர்கள் இருவரும்   தாங்கள்  குழந்தையுடன் இருப்பது போல  போட்டோக்களை வெளியிடுவது  வழக்கம்.  அவ்வகையில்,  அண்மையில் ‘தந்தையர் தின’த்தன்று    தன் மகளை  கணேஷ் முதுகில் உட்கார வைத்து யானை போல வலம் வருவது போலவும்,  குழந்தை  கீழே விழாதபடி குழந்தையின் கைகளை  நிஷா  பத்திரமாக பிடித்து கொண்டு இருப்பது  போலவும்  வீடியோ  எடுத்து  அதை இன்ஸ்டாகிராமில்  பதிவிட்டுள்ளனர்.  அந்த வீடியோவுக்கு  அமோக  வரவேற்பு  கிடைத்திருக்கிறது.

 

ரோஜா’வில்   யாஷிகா   ஆனந்த்?

 ‘ரோஜா’வில்  புதிதாக  யாஷிகா ஆனந்த் நடிக்க  ஆரம்பித்திருப்பதாக  தகவல் கசிகிறது.  

        இந்த சீரியலில்  பிரியங்கா ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அப்படிப்பட்ட  நிலையில், யாஷிகாவுக்கு  எந்த மாதிரியான கேரக்டர்?

        யாஷிகாவின் கேரக்டர்  மிகவும் முக்கியமானதாக இருக்குமாம். அதே சமயத்தில்,  ஹீரோயின் உட்பட  எந்த கேரக்டர்களுக்கும்   ஆர்டிஸ்டுகள்  மாற்றப்படவில்லையாம். அவருக்கு  ஹீரோவின் கேர்ள்பிரண்ட் கேரக்டரா  அல்லது  நெகட்டிவ் கேரக்டரா   என்பது   அடுத்த  மாதம்  மீண்டும்           ஷூட்டிங் ஆரம்பமான   பிறகே  தெரியவருமாம்.  

              யாஷிகா  நடிக்கும் முதல் சீரியல் இது.  சினிமாவில்   ஏற்கனவே அவர் ‘கவலை  வேண்டாம்,’ ‘துருவங்கள்  பதினாறு,’ ‘பாடம்,’  ‘இருட்டு  அறையில்  முரட்டு  குத்து,’ ‘மணியார்  குடும்பம்,’ ‘நோட்டா’  போன்ற  படங்களில்  நடித்தவர் என்பதும்,  ‘பிக்  பாஸ்’  2வது  சீசனில்   போட்டியாளராக  பங்கேற்றவர் என்பதும் நினைவுகூரத்தக்கது.


 நடிப்பா,   வேணாம்  சாமி!

  

   பிரபல  பெப்சி  குளிர்பான  நிறுவனம்  ஸ்பான்சர் செய்ய,  ‘உங்கள்  சாய்ஸ்’   நேயர்கள்   தொலைபேசியில் தொடர்பு கொண்டு  அவர்கள்                                  விரும்பும்  சினிமா பாடல்களை ஒளிபரப்பும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்,  உமா  மகேஸ்வரி.  சன் டிவியில்  1994ல்  ஆரம்பித்து  சுமார் 15 ஆண்டுகளுக்கும் அதிகமாக அதை வழங்கி வந்த பெருமை அவருக்கு  உண்டு.   நிகழ்ச்சியில் எப்போதும் சிரித்த முகத்தோடு நேயர்களிடம் மிகவும் கனிவாக  உரையாடி மகிழ்வார்,  அதன் மூலம்  நேயர்களையும் மகிழ்விப்பார். அப்படி ’ நேயர்களின்  நிகழ்ச்சி  தொகுப்பாள’ராக விளங்கிய அவர்,  நாளடைவில்  ‘பெப்சி  உமா’  என்றே அன்புடன்  அழைக்கப்பட்டு  வருகிறார்.

           நிகழ்ச்சி  தொகுப்பில் அவருக்கு  இருந்த ஆர்வம்,   நடிப்பில் சுத்தமாக இருந்ததில்லை.    அதனால்தான்   ‘முத்து’ படத்தில்  நடிக்கும்படி  ரஜினியே  கூப்பிட்டும்  உமா  மறுத்துவிட்டார்.  அதே  போல்   பாலிவுட்  நடிகர்  ஷா  ருக்  கானும்  ஒரு இந்தி  படத்தில்  நடிக்குமாறு அழைத்திருக்கிறார்.  அதையும்   மறுத்திருக்கிறார்.   அவ்வளவு  ஏன்?  சச்சின் தெண்டுல்கர்  கூட ஒரு விளம்பரப்படத்திற்காக  கூப்பிட்டு பார்த்தார்.  ஊஹும்!  அவர் போகவில்லையே!


 கோவிட்   டெஸ்ட்   எடுத்திருந்தால்தான்   அட்மிஷன்!

‘பிக்  பாஸ்’   ரசிகர்களுக்கோர்  நற்செய்தி!

         அதன்   4வது  சீசனை   அவர்கள்   இன்னும்   சில  மாதங்களில்  கண்டு களிக்கலாம் போல!   அதாவது  வருகிற  செப்டம்பரில்  ஷூட்டிங்  ஆரம்பமாகலாம் என தெரிகிறது.  மேலும்,  கமல்  ஒரு அரசியல்வாதியாகி விட்டதால்,  அவர்  இனி  ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில்  பங்கேற்க வாய்ப்பில்லை என்று  3வது சீசனிலேயே  பேச்சு  அடிபட்டது.  ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லாதது போல் தெரிகிறது.  எனவே,  4வது  சீசனையும்   மக்கள் நீதி மய்ய கட்சி  தலைவரே  ‘உங்களில்  நான்,’  ‘அகத்தின் வழியே  அகத்துக்குள் செல்வோம்’  என்கிற தன்னுடைய  வழக்கமான வார்த்தைகளை  பிரயோகித்து    ஹோஸ்ட் பண்ணுவார்  என்பது உறுதியாக சொல்லப்படுகிறது.

             சென்ற  வாரத்திலேயே  ‘பிக் பாஸ்’  4வது சீசன் ஷூட்டிங்  ஆரம்பித்திருக்க  வேண்டியதாம்.  ஆனால், கொரோனாவால்  அது தள்ளி போய் விட்டதாம்.  அப்புறம் அடுத்த மாதம் ஆரம்பிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்ததாம்.  அதுவும்  சாத்தியமாகும்  சூழ்நிலை  இல்லாததால்தான்  வருகிற செப்டம்பரில்  ஷூட்டிங் நடத்த  தயாரிப்பு நிறுவனம்  தயார் நிலையில் உள்ளதாம்.  தமிழக  அரசு விதித்திருக்கும்  நிபந்தனைகளின்படியே  ஷூட்டிங் நடத்தப்படுமாம்.  அது  மட்டுமல்ல,  கோவிட்  டெஸ்ட்  எடுத்திருந்தால்தான் போட்டியாளர்கள்  நிகழ்ச்சியிலேயே  பங்கேற்க முடியுமாம்.     அதுவே அவர்களுக்கான  முதல்  நிபந்தனையாம்.  அதன்பின்,  ‘பிக்  பாஸ்’  வீட்டுக்குள்  போட்டியாளர்கள்  கடைப்பிடிக்க வேண்டிய சமூக  இடைவெளி  உட்பட  பல  ஸ்பெஷல்  நிபந்தனைகளும்  இருக்குமாம்.


’கொரோனா’   நர்ஸ்  ஜூலி!  அமெரிக்க  நிறுவனம்  சான்றிதழ்!

 ஜல்லிக்கட்டு  நடத்துவதற்கு  தடை விதிக்கப்பட்டிருந்த  போது  தடையை  விலக்கக் கோரி சென்னை  மெரீனா பீச்சில்   போராடியவர்களில், மரியா  ஜூலியானா  என்கிற   ஜூலியும்  ஒருவர்.   அதில்  அவர் பிரபலம் அடைந்ததை  தொடர்ந்து   ‘பிக்  பாஸ்’  அவரை  பயன்படுத்திக் கொண்டது.  ஆனால்,  அந்த நிகழ்ச்சி  மூலமாக   அவர்  பலருடைய  கோபங்களுக்கு  ஆளானார்,  அதன் பிறகு   பல  கஷ்டங்களை சந்தித்தார்.   இந்நிலையில்,  நேற்று தன் பிறந்த நாளை கொண்டாடிய அவர்,  அது தொடர்பான  ஒரு  வீடியோவையும்  ரிலீஸ்  பண்ணியிருந்தார்.  அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தாலும்,  சில   பேர்  கிண்டலும் பண்ணியிருந்தனர்.  வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு  தன்    நன்றிகளை  பகிர்ந்து  கொண்டார்.  

        இப்போது  அவர்  ‘அம்மன்’  கேரக்டரில்  ‘அம்மன்  தாயி’ உட்பட சில  படங்களில்  நடித்துக் கொண்டிருக்கிறார்.  

        அடிப்படையில்,  ஜூலி ஒரு நர்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிக்க  வந்த பிறகு,  நர்ஸ்  தொழிலிலிருந்து  தன்னை  விடுவித்துக் கொண்டார். “நர்ஸ்  தொழிலை  நீ  ஏன் விட்டுவிட்டாய்  என்று எல்லோரும் என்னை  கேட்கிறார்கள்.   அது ஒரு புனிதமான  தொழில்.  அதை செய்வதற்கு முழு அர்ப்பணம்  தேவை.  எனவே, மற்ற தொழில்களை போல ஒரு  பிரீலான்சராக அதை செய்ய  முடியாது.  ஒரே  சமயத்தில்  நடிப்பு,  நர்சிங்    இரண்டையும்   பண்ணுவது  நடக்காத  காரியம்.  ஏனென்றால்,   ஷூட்டிங்கிலிருந்து  நான் மிகவும்   லேட்டாக கிளம்ப வேண்டியது வரும்.  நோயாளிகள்  எனக்காக காத்து கொண்டிருப்பார்கள்.  நோயாளிகள்  வாழ்க்கையில்  நான் ரிஸ்க் எடுக்க  விரும்பவில்லை!” என்று  விளக்கம் தருகிறார்.  

         இதனிடையே  ஜூலி   நர்சிங்  கோர்ஸ்  பயின்ற  அமெரிக்காவை  சார்ந்த புளோரிடா போர்ட்  ஆப்  நர்சிங்,  அவர்   கொரோனா  தொற்றுநோயாளிகளுக்கே  சேவை  செய்யலாம்  என அங்கீகாரம் அளித்து ஒரு  சான்றிதழை   அவருக்கு  வழங்கியிருக்கிறது.