உலகத்துக்கு வெளிச்சமாயிருங்கள்

பதிவு செய்த நாள் : 28 ஜூன் 2020 13:37

இன்று உலகில் வெளிச்சத்துக்கு வரவேண்டிய விஷயங்கள் ஏராளம் ஏராளம். தனிமனிதன், குடும்பம், சமூகம், பணியிடம், அரசியல் என எல்லா நிலைகளிலும் ரகசியங்களே அதிகம். இது அநேகம் தவறுகளுக்கு இட்டுச் செல்லும். நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கும். ரகசியமான பேச்சு அல்லது செயல் எதுவாக இருந்தாலும் அது மறைவிடத்தில் அல்லது ஒளிப்பிடத்தில் தான் நிகழும்; நிகழ்த்தப்படும். ஒளிப்பிடம் என்பது இருட்டுக்குச் சமம். வெளிச்சம் இல்லாதவரை இருளில் நிகழும் எதையும் மற்றவர்கள் பார்க்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. தவறுகளில் பெரும்பாலானவை நிகழ்வது இருட்டில் தான். இருட்டு பயத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும். ஆனால் வெளிச்சம் அல்லது ஒளி எல்லாவற்றையும் வெளியரங்கமாக்கிவிடும். 

வெளிச்சம் வந்து விட்டால் எதுவும் மறைந்திருக்காது. வெளிச்சம் மகிழ்ச்சிக்கு அடையாளமாகும். விழாக்காலங்களிலும், சிறப்பு நிகழ்வுகளின் போதும் விளக்குகளால் அலங்காரம் செய்வது உலகம் முழுவதும் உள்ள வழக்கம். வெளிச்சம் அழகானது. பயத்தை நீக்கி தைரியத்தைத் தருவது. குழப்பங்களையும் தடுமாற்றத்தையும் தவிர்த்துத் தெளிவை உருவாக்குவது.  தவறுகளைப் படம்பிடித்துக் காட்டுவது. வெளிச்சம் நம்பிக்கையின் திறவுகோல். வெளிச்சத்தில் செய்யப்படும் செயல்கள் நற்செயல்களாக இருக்கும்.  ஒரு மனிதன் ஒளியுள்ள வாழ்க்கை வாழ்வதே பயனுள்ளது ஆகும். எனவே தான் இயேசு, ’நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள் ’ என்கிறார். இயேசு தனது மலைப்பொழிவின் போது,  ’நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின் மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடி வைக்காமல், விளக்குத்தண்டின் மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டில் உள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். 

இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ (மத்:5.14-16) என்றார். இந்தப் பகுதி பல உண்மைகளைக் கற்றுத் தருகிறது. ஒருவன் பிறருக்கு வெளிச்சம் கொடுக்க வேண்டுமானால் தன்னில் தானே ஒளியுள்ளவனாய் இருக்க வேண்டும். அப்போதுதான் அவனது வெளிச்சம்  மற்றவர்கள் முன்பாகப் பிரகாசிக்கும். மலையின் மேலிருக்கிற பட்டணம் மறைந்திருக்காது. அதுபோலவே ஒளியுள்ள வாழ்க்கையில் ஒளிவு மறைவுகள் இருக்காது. அது ஒரு தெளிந்த நீரோடை போலவும், திறந்த புத்தகம் போலவும் இருக்கும். அப்படிப்பட்ட வாழ்க்கை உடைய மனிதன் நற்செயல்கள் மட்டுமே செய்வான். அவனது செயல்கள் தான் அவனையும் ஒளியுள்ளவனாக்கி மற்றவைகளுக்கும் வெளிச்சம் கொடுக்கும். விளக்கு மூடி வைத்தால் பயன் தராது. விளக்குத்தண்டின் மேல் வைக்கப்பட வேண்டும். ஆம் வெளிச்சம் கொடுக்கும் மனிதன் மறைவிடங்களில் அல்ல உயர்ந்த இடங்களில் இருக்கும் தகுதி பெற்றவன். அப்போது தான் அவனது வெளிச்சத்தால் பிறர் பயனடைய முடியும். வெளிச்சத்தில் வாழ்வோம், வெளிச்சமாயிருப்போம். நமது வெளிச்சத்தால் இந்த உலகமே வெளிச்சமாகட்டும்.

சுகிர்தா பஸ்மத், பேராசிரியை, நாகர்கோவில்