பள்ளிகளுக்கு மாற்றா ஆன்லைன் கல்வி ? - சுதாங்கன்.

பதிவு செய்த நாள் : 28 ஜூன் 2020

கொரானா தொற்று நோய் கல்வியாண்டை பாழ்படுத்திவிட்டது.வகுப்புக்கள் இல்லை. பரீட்சைகள் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிள்ளைகளுக்கு பாடங்கள் போய்விடக்கூடாதே என்பதற்காக  இந்தியா முழுவது பல பள்ளிகள், இணைய வகுப்புக்கள் அதாவது ஆன்லைன் வகுப்புக்களைத் துவங்கிவிட்டார்கள்.  தன் கையிலிருக்கு கருவிகள், அதாவது கணினி, அல்லது நவீன கைபேசிகள் மூலமாக  ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களில் கலந்து கொள்ளலாம். 

மகாராஷ்டிர மாநிலம் பால வகுப்புக்களிலிருந்து, இரண்டாம் வகுப்பு வரை ஆன்லைன் கலவியை தடை செய்திருக்கிறது.  கர்நாடகாவும், மத்திய பிரதேசமும் இதை ஐந்தாம் வகுப்பு வரை தடையை விரிவுபடுத்தியிருக்கிறார்கள்.

இந்த மாதிரி ஆன்லைன் வகுப்புக்களினால் என்னவெல்லாம் பிரச்னை வரும் என்பதை இந்தியா முழுவதும் கல்வியாளர்கள் விவாதிக்கத் தொடங்கிவிட்டார்கள். கணினித்திரையையோ, அல்லது கைபேசியையே வெகுநேரம் குழந்தைகள் பார்த்துக்கொண்டிருப்பது அவர்களது விழிகளுக்கு உகந்ததா?  அதே சமயம் இந்த வகுப்புக்கள் இல்லாவிட்டாலும் கூட பெரும்பாலான நடுத்தர வீட்டுக் குழந்தைகள் தொலைக்காட்சி, கணினி, கைபேசியில்தான் பெரும்பாலும் மூழ்கியிருக்கிறார்கள்.  கொரானா தொற்று நோய் வருவதற்கு முன்பே பெரும்பாலான குழந்தைகள்  இந்த கருவிகளுக்குள்  மூழ்கிக்கிடக்கிறார்கள்.  பல குழந்தைகள் எட்டு மணி நேரம் வரை அதிலேயே மூழ்கிவிடுகிறார்கள்.  அதே நேரத்தில் பல வசதி உள்ள பள்ளிகள் குழந்தைகளை ஆக்கபூர்வமான செயல்பாடுகளில் ஈடுபடுத்த  ஒவியம், கைத்தொழில், சமையலறைப் பயிற்சி எல்லாம் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  இன்னும் சில பள்ளிகள் குழந்தைகளுக்கு கதை சொல்கிறார்கள். சில சமயங்களில்  இந்த வகுப்புக்களின் போது குழந்தைகளை அந்த ஆசிரியர்கள் செய்வதையே செய்யச் சொல்கிறார்கள். அதனால் அந்த குழந்தை அதில் முழு ஈடுபாட்டுடன் தன்னை அதில் ஐக்கியப்படுத்திக் கொள்கிறது.

 இந்த ஊரடங்கு நாட்களில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் குழந்தைகளை இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாவிட்டால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி தடைப்படும். குழந்தைகளின் மூளை என்பது ஒவ்வொரு நாளும் வளர்ந்து கொண்டிருக்கிறது.  அதனால் நாம் ஒரு நாளைக் கூட வீணடிக்க முடியாது. அவர்கள் மூளைக்கு வேலை கொடுத்து அவர்கள் சிந்தனைகளை தொடர்ந்து தூண்டிவிடவேண்டும்.  இது பள்ளிகளின் தரப்பு வாதம்.

அதே சமயம் தொடர்ந்து குழந்தைகள் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தால் அது அவர்களுக்கு தீங்கானது.  அது ஆரோக்கியமான கற்பித்தல் ஆகாது.  இப்படி திரையைப் பார்த்து கல்வி கற்பதனால் குழந்தைகளின் உடல்நலம் மட்டுமல்லாம், அவர்கள் ஒதுங்கிப்போய் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.  பள்ளியில் இருப்பது போல் அவர்களுக்கு வகுப்புத் சினேகிதங்கள் இல்லை.  இந்த மாதிரியான கற்பித்தலின் ஆசிரியர்களின் பங்கு என்பது மிக குறைவானது.  வகுப்பறையில் கிடைக்கும் ஆசிரியர்களின் நேரடி மேற்பார்வை, வழிகாட்டுதல் அவர்களுக்கு இருக்காது.

 வீட்டிலிருந்து திரையைப் பார்த்து கற்கும்போது வீட்டிலிருக்கும் பெற்றோர்களாலும் எல்லோராலும் உடனிருந்து வழிகாட்டுதல் சாத்தியமில்லை.  பல பெற்றோர்களுக்கு அதற்கான பொறுமையும் இருக்காது. இவையெலாம் கற்றலை கண்டிப்பாக பாதிக்கும்.

அதே சமயம், அரசாங்க மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு இணைய தள, கணினி, கைபேசி வசதி இருக்காது.  சில குடும்பங்களில் தொழில்நுட்ப வசதிகள் இருக்கலாம், குடும்பத்தில் எல்லோருக்கும் கொடுக்கும் வசதிகள் இருக்காது.  மேலும், இப்போது தம்பதியர்கள் இருவரும் வேலைக்குப் போகிறவர்களாக இருந்தால் அவர்களின் சொந்த கணினி, கைபேசி என்பது அவர்கள் வீட்டிலிருந்து  அலுவலக வேலைப் பார்ப்பதற்கு தேவையானதாக இருக்கும்.  அதனால் ஒவ்வொரு வீட்டிலும் பல இணைய இணைப்பு கருவிகள் தேவைப்படும்.   பெரும்பாலான மக்களுக்கு இது சாத்தியமேயில்லை.

தொடர்ந்து திரையைப் பார்த்துக் கொண்டிருந்தால் அது குழந்தைகளின் பார்வையை பாதிக்கும். அதனால் நிரந்தர பார்வை பாதிப்பு ஏற்படவும் வாய்ப்பு உண்டு.  திரையை பார்த்து குழந்தைகள் கற்கும்போது அவர்களுக்குள் ஒரு சோம்பல் உருவாகும். அது அவர்களின் சுயசிந்தனை திறனை வெகுவாக பாதிக்கும்.  பெரும்பாலான வீடுகளில் குழந்தைகளை சாப்பிட வைப்பதற்கும், சில நேரங்களில் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்கவும் குழந்தை கையில் ஒரு கைபேசியைக் கொடுத்து அதில் கிடைக்கும் வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட வைக்கிறார்கள்.  இதனால் குழந்தைகளுக்கு பல உளக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

 ஒரு விஷயத்தை மத்திய மாநில கல்வித்துறைகள் முழுமையாக மறந்துவிட்டன. பள்ளிகளை எப்படி பாதுகாப்பான பகுதியாக மாற்றுவது என்பது பற்றி யாரும் சிந்திக்கவேயில்லை.  நோய் தொற்றுக்கள் குழந்தைகளை தாக்காமல் எப்படி பாதுகாப்பான இடமாக மாற்றுவது  என யோசித்து நடவடிக்கை எடுத்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப பெற்றோர்களுக்கு ஆர்வம் வரும்.  உடனடியாக ஆன்லைன் கல்வி முறைக்கு மாறுவது என்பது இந்தியாவில் அத்தனை எளிதல்ல.

வெளிநாடுகளில் இந்த நோய் தொற்று தாக்குதலுக்குப் பிறகு பள்ளிகளை படிப்படியாக திறக்கிறார்கள். ஆனால் அந்த சூழலை நாம் இந்தியாவுக்கு பொருத்திப் பார்க்க முடியாது.  வெளிநாட்டு பள்ளிகளில்  பல முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்கிறார்கள்.  உதாரணமாக ஒவ்வொர் வகுப்பிலும், ஒவ்வொரு குழந்தைக்கும் டிஷ்யூ பேப்பர் முதல் கொண்டு தயார் செய்து வைத்திருக்கிறார்கள். அந்த மாதிரி வசதிகளை இந்திய பள்ளிகளில் ஏற்படுத்த முடியுமா ?  

 கல்வி என்பது திரையின் மூலமாக பாடங்களை திணிப்பதல்ல.  கற்றல் என்பது வகுப்பில் சக சினேகிதர்கள், ஆசிரியர்களோடு ஒரு சமூக தொடர்பின் மூலமாக ஏற்படுகிறது.  இப்போது ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கிவிட்டதால் இவையெல்லாம் பறிபோய்விட்டது.

கொரானா நோய்தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் பள்ளிகளை திறந்து, குழந்தைகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கலாம் என்பதைப் பற்றி கல்வித்துறை யோசிக்க வேண்டும். ஆரம்ப பள்ளி குழந்தைகளை வகுப்பறையில் முககவசம் அணிந்து  வெகுநேரம் வைத்திருக்க் முடியாது.பெரும்பாலான பள்ளிகளில் சுகாதாரமான பராமரிப்பு இருக்காது. அதில் பல பள்ளிகள் கவனம் செலுத்துவதும் கிடையாது. 

 இந்தியாவில் பெரும்பான்மை மக்களுக்கு தொழில்நுட்ப வசதிகள் கிடையாது. இந்த தருணத்தில், எப்படி பள்ளிகளில் படிப்படியாக, ஆரோக்கியமான சுற்றுப்புறத்தை எப்படி உருவாக்குவது?  

மாணவர்களின் மொத்த எண்ணிக்கையை இரண்டாக பிரித்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் பிள்ளைகளை எண்ணிக்கையில் இரண்டாக பிரித்து வகுப்புக்கள் நடத்துவது பற்றி சிந்திக்கலாம். இப்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதால் பல குடும்பங்களில் பெற்றோர்களுக்குள் உறவுகள் சிக்கலாகி வருகிறது. சிக்கலகள் அதிகரித்து வருகிறது. சமூகத் தொடர்பில்லாமல், உடலுக்கான விளையாட்டுக்கள் இல்லாமல் குழந்தைகள் இருந்தால் அது அவர்களின் மனநலனை சின்ன வயதில் அதிகமாக பாதிக்கும். அதனால் பல குழந்தைகளுக்கு பண்புக் கோளாறுகள் வரவும் வாய்ப்புண்டு.

  பெரும்பான்மை இந்திய மக்களிடம் தொழில்நுட்ப வசதிகள் கிடையாது. டில்லியில் வாழ்ந்த பல புலம் பெயர்ந்த குடும்பங்கள் இப்போது தங்கள் சொந்த ஊருக்கே திரும்பிவிட்டார்கள். டெல்லியில் அவர்கள் தங்கள் குழந்தைகள் படித்த பள்ளி நிர்வாகங்களுக்கு தகவல் தொடர்புக்கென தந்த தொலைபேசி எண்கள் இப்பொழுது அவர்களிடம் இருப்பதாக கூற முடியாது. அரசு பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு கொடுக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணில் தங்கள் மாணவர்களை அழைக்கிறார்கள்.  அந்த குடும்பங்களையோ, குழந்தைகளையே தொடர்பு கொள்ள இயலவில்லை. அவர்கள் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்கள். இந்த மாதிரி குழந்தைகளுக்கு ஆன் லைன் கல்வி கிடைப்பதில்லை. சொந்த ஊருக்கு போனவர்கள் தாங்கள் வாழ்ந்த இடத்திற்கு திரும்பி வருவார்களா என்பதை உறுதியாக யாராலும் கூற முடியாது. ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புக்களுக்கான பலவிதமான கற்றல் முறைப் படிவங்களை தயாரிக்கிறார்கள். ஆனால்  எத்தனை  குழந்தைகள், மாணவர்கள் இதனால் பயனடைந்திருக்கிறார்கள் ? நாம் நாட்டு கொள்கை அறிவிப்புக்களே ஒதுக்கபட்ட, வசதிக்குறைவான குழந்தைகளின் கல்வியைப் போற்றி யோசிக்கவில்லை.  அவர்கள் கவனம் முழுவதும் சில வசதிகள் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி பற்றியே அமைந்துள்ளது.. பள்ளிகளும் அதில்தான் கவனம் செலுத்துகிறது.

 அதே சமயம், இப்போதுள்ள ஆன்லைன் கல்வியை நிறுத்தினாலும், தொழில்நுட்ப வசதிகள் கொண்ட குழந்தைகளும் தங்கள் பாடங்களை இழக்க வேண்டிவரும். ஆன்லைன் வகுப்புக்களை ஒரேயடியாக நிறுத்துவது என்பது இதற்கு தீர்வாக இருக்காது.  தொழில்நுட்ப வசதி கிடைக்காத பிள்ளைகளுக்கு இந்த வசதிகளை எப்படி கொண்டு போய் சேர்ப்பது என்பது பற்றி யோசிக்க வேண்டும்.  சில அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இதற்கான முயற்சியில் தீவிரமாக இறங்கியிருகிறது.  அவர்கள் வசதி  இல்லாத வீட்டுப் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன், கணினி போன்றவைகளை தங்களால் இயன்றவரை கொடுக்க முயன்று கொண்டிருக்கிறார்கள்.

 இப்போது இந்தியா உட்பட உலகம் முழுவதின் , இந்தியா உட்பட அதன் கவனமும் பொது சுகாதாரத்தில்தான் இருக்கிறது.  இந்திய நாட்டில் நமது பொது சுகாதாரம் எந்த இக்கட்டான சூழலையும் சந்திக்கும் திறனுடன்  இல்லை என்பதை நான் கண்கூடாகக் கண்ட உண்மை.

கல்வித்துறையில் பள்ளிச் சுகாதார சூழலை, சுற்றுப்புறத்தைப் பற்றி நாம் சிந்தித்ததே இல்லை.  இந்த மாதிரி சூழலில் கூட பள்ளிகளை மூட அவசியமில்லாத நிலையைக் கொண்டுவரவேண்டும்.  பள்ளிகளில் பாதுகாப்பான சுகாதார சூழல் என்பது அவசியம். ஆசிரியர்கள் பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

இப்போது ஆன்லைன் கல்வி வசதி பெற முடியாத குழந்தைகள் பள்ளிப்படிப்பை நிறுத்திவிடும் நிலையும் உருவாகலாம். இது நமது கல்விக்கான அடிப்படை உரிமைகளையே பறித்துவிடும்.

 உதாரணமாக நூறு மாணவர்கள் என்றால் அவர்களை ஐம்பதாக பிரித்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் பள்ளிக்கு வரவழைக்கலாம்.  இதனால் வகுப்புக்களில் நெரிசல் குறையும். பள்ளி வளாகத்தை சுத்தம் செய்யவும் போதிய அவகாசம் கிடைக்கும்.  தினமும் மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் இவர்களுக்கு உடல் வெப்ப நிலையை (  temperature)  தினமும் பார்ப்பதை கட்டாயமாக்க வேண்டும்.  வீட்டுக்கு சுமந்து செல்ல புத்தக பளு இருக்கக் கூடாது.  சமூக இடைவெளி என்பதை கட்டாயமாக மாணவர்களும், ஆசிரியர்களும் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

எல்லாவற்றையும் விட, ஒதுக்கப்பட்ட, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத குடும்பக்  குழந்தைகளின் கல்வியில் உடனடி கவனம் செலுத்துவே சிறந்த மாற்றாக இருக்க முடியும்.


கட்டுரையாளர்: சுதாங்கன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation