சீன பொருட்களை இந்தியா புறக்கணிக்க முடியுமா?

பதிவு செய்த நாள் : 27 ஜூன் 2020

இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள எல்லைப் பகுதியான லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் ஜூன் 15ந்தேதி மோதிக்கொண்டார்கள். இதில் இந்தியாவின் தரப்பில் 20க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. எதிர் தரப்பான சீனாவின் 30க்கும் மேற்பட்ட வீரர்கள் மடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் இரு நாட்டு எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் நிலவிவருகிறது. இந்தியா மற்றும் சீனா இப்பிரச்னைகளை பேச்சு வார்த்தைகளின் மூலமாக தீர்த்துக்கொள்வதாக அறிவித்துள்ளன. இருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகள் முன்புபோல இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியதே.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால், இந்தியா, சீனாவுக்கு வர்த்தக ரீதியாக பதிலடிகொடுக்க வேண்டுமென்றும், சீன பொருட்களை புறக்கணிக்க செய்ய வேண்டுமென்று நாடு முழுவதிலும் உணர்ச்சிக் குரல்கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன.

வட இந்திய மக்கள் தங்கள் வீட்டிலுள்ள சீனப் பொருட்களை வெளியேகொண்டு வந்து சாலைகளில் போட்டு உடைத்தும் எதிர்த்தும் போராட்டங்களின் வாயிலாக தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

சில இடங்களில் சீன அதிபரின் படங்களையும் உருவபொம்மைகளையும் எரித்துள்ளனர். வணிக சங்கங்கள் சீனப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென கோரிக்கைகளை¬ முன் வைத்துள்ளன. மத்திய அரசு சீனாவுடனான வர்த்தக உறகளை குறைத்துக்கொள்ள திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

இந்தியாவால் சீனப் பொருட்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடியுமா? நம்மோடு எந்தளவிற்கு சீனப் பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன என்பதை முழுமையாக விவரிக்கிறார் பொருளாதார நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன்.

"இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நடைபெறும் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரங்களை பார்த்தாலே தலை சுற்றும். 2019 மற்றும் 2020 ஆண்டுகளில் இந்தியா, சீனாவுக்கு ஏற்றுமதி செய்தது 1.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள். நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 5.3 சதவிகிதம். ஆனால் சீனாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்த பொருள்களின் மதிப்பு ரூ. 4.4 லட்சம் கோடி ரூபாய். இந்தியாவின் இறக்குமதியில் சீனாவின் பங்கு 14.09 சதவிகிதம்.

இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் ஏற்றுமதியை கணக்கிட்டால் சீனா, இந்தியாவிடமிருந்து கூடுதலாக 3.3 லட்ச கோடி ரூபாய் சம்பாதிக்கிறது.

இந்தியா, சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களில் முக்கியமானவை பெட்ரோலியப் பொருட்கள், மசாலா பொருள்கள், இரும்புத் தாதுவகைகள்.பருத்தி போன்றவையாகும். இதுவே சீனாவிடமிருந்து இந்தியா இறக்குமதி செய்வது கம்ப்யூட்டர், மருத்துவப் பொருட்கள், தொழிற்சாலை உபகரணங்கள், டெலிகாம் சாதனங்கள், எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் மற்றும் பொருட்களாகும்.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவே அதிக்கம் செலுத்துகிறது. இந்தியாவில் விற்கும் ஸ்மார்ட் போன்களில் 75 சதவிகிதத்திற்கு மேல் சீன நிறுவனங்களின் தயாரிப்பு ஆகும். குறிப்பாக ஷாவ்மி என்ற ஒரு சீன நிறுவனம் 30 சதவிகிதத்திற்கு மேல் விற்கிறது.

ஸ்மார்ட் போன்கள் பொறுத்தவரை இந்தியர்கள் பட்ஜெட் போன்களைதான் விரும்புகிறார்கள். இதை பூர்த்தி செய்வது ஷாவ்மி, விவோ, ஓப்போ, ரியல்மீ போன்ற நிறுவனங்களாகும். இவை அனைத்துமே சீனாவையே சேர்ந்தவை. இந்த பிராண்டுகளுக்கு எதிராக போட்டியிடும் இந்திய நிறுவனங்கள் எதுவுமில்லை என்றே சொல்லலாம். ஓரளவுக்கு சுமாரான ஸ்மார்ட்போன்களைதான் இந்திய நிறுவனங்களான லாவா, மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரிக்கின்றன.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்கள் தவிர எல்ஜி, சாம்சங், அசுஸ் போன்ற பிற சர்வதேச நிறுவனங்களும் கடும் போட்டியில் உள்ளன. இதில் கொரிய நிறுவனமான சாம்சங் போன்களை இந்தியர்கள் அதிகமாக பயன்படுத்துக்கிறார்கள். இந்நிறுவனமே சீன நிறுவனங்களோடு போட்டியிட்டு கொண்டிருக்கின்றது. ஆனால் சமீப காலமாக சீன நிறுவனங்களோடு போட்டியிட முடியாமல் சாம்சங் தத்தளித்து கொண்டிருக்கிறது.

2019ம் ஆண்டின் துவகத்தில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் 25 சதவிகிதம் பெற்றிருந்தது. இப்போதோ 16 சதவிகிதமாக குறுகிபோய் உள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்கள் கோலோச்சுவதற்கு முக்கிய காரணம் அதன் விலை. சீனப் பொருட்கள் மீது முன்பு ஒரு குற்றச்சாட்டு உண்டு. அது தரம் குறைந்தது என்று. ஆனால் இப்போது அத்தகைய குற்றசாட்டுகள் எதுவுமில்லை. 4ஜி பிரிவில் அவை பலம் பொருந்திய நிறுவனங்களாக திகழ்கின்றன. மேலும் புதிய புதிய தொழிற்நுட்பங்களையும் ஏற்கனவே உள்ள தொழில்நுட்பங்களையும் தொடர்ந்து  மேம்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் தங்கள் போன்களை சீனாவில் தயாரிக்கின்றன. ஆப்பிள் தொழிற்நுட்பங்களை திருடி அதில் கொஞ்சம் மாற்றம் செய்து தாங்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களில் எளிதாக சீனக் கம்பெனிகள் புகுத்திவிடுகின்றன என்ற புகார் சீனா மீது கூறப்படுகின்றது. அறிவுசார் சொத்துகள் திருட்டில் சீனா ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது.

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 75 சதவிகிதத்திற்கு மேல் சீன நிறுவனங்களிடமே உள்ளன. அப்படியிருக்க இந்நிறுவனங்களை புறக்கணிக்க முடியாத சூழல்தான் இந்தியாவில் நிலவுகிறது. இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ் ஆரம்பத்தில் சீனாவிடமிருந்து செல்போன்களை இறக்குமதி செய்து பெயர் மட்டுமே மாற்றி விற்பனை செய்துக்கொண்டிருந்தது. சீன நிறுவனமான ஷாவ்மி இந்தியாவிலே நிறுவனத்தை துவங்கி இந்தியர்களை பணியமர்த்தி போன்களை தயாரித்துக்கொண்டிருக்கிறது. சில முக்கிய உதிரி பாகங்கள் மட்டுமே சீனாவில் தயாரித்து வருகிறது. ஸ்மார்ட்போன் சந்தையை பொறுத்த வரையில்.

இப்போது சீன தயாரிப்புகளைப் புறக்கணிப்பது என்பது நேரடியாக நம்மையே பாதிக்கும் சூழலாகத்தான் இருக்கிறது.

தொலைத்தொடர்பு உபகரணங்கள்

தொலைத்தொடர்ப்பு உபகரணங்களைக் கூட சீனாவிடமிருந்தே அதிகளவில் இந்தியா இறக்குமதி செய்கிறது. இதில் கிட்டத்தட்ட 25 சதவிகிதத்திற்கு மேல் சீன நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்திய டெலிகாம் 4ஜி தொழிற்நுட்பதிலிருந்து 5ஜி நுட்பத்திற்கு மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு தேவைப்படும் உபகரணங்களில் ஏபிஎல், வாவே போன்ற சீன நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படியிருக்க இதில் சீன நிறுவனங்களை புறகணிக்க முடியுமா என்றால் முடியும். ஆனால் அதற்கு 10 முதல் 15 சதவிகிதத்திற்கு மேல் கூடுத்தலாக செலவழிக்க வேண்டிவரும். சீன நிறுவனங்களோடு போட்ட ஒப்பந்தங்களை ரத்துசெய்துவிட்டு உடனே அமெரிக்கா, ஐரோப்பிய நிறுவனங்ளோடு புது ஒப்பந்தங்களை போடவேண்டியிருக்கும்.

தற்போதுதான் பிஎஸ்என்எல் 4ஜிக்கு  மாறிக்கொண்டிருக்கிறது. இதற்கு தேவைப்படும் உபகரணங்களை சீன நிறுவனங்களிடமிருந்துதான் வாங்குகிறது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் சீன எல்லைப்பிரச்னைக்கு பிறகு அந்த உபகரணங்களை பயன்படுத்தவேண்டாம் என சொல்லியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. அது உண்மையாகும் பட்சத்தில் சீனாவின் இறுக்கம் தொலைத்தொடர்புத் துறையில் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வடைய ஆரம்பிக்கலாம்.

இன்டர்நெட் ஆப்ஸ்

சீன ஆப்கள் எத்தனையோ இந்தியாவில் பழக்கத்தில் இருந்தாலும், டிக் டாக் மற்றும் ஹாலோ ஆப்களில்தான் இந்தியர்கள் அடிமையாகி கிடக்கின்றனர். இந்த ஆப்கள் இந்தியாவிலுள்ள தகவல்களை திருடி சீன அரசாங்கத்திற்கு கொடுக்கின்றன என்ற திருட்டு புகாரும் உணடு. இந்த ஆப்களை பெரும்பாலோர் பயன்படுத்துகிறார்கள் என்றாலும், இது மிகவும் இன்றியமையாதது கிடையாது. இதற்கு மாற்றாக எத்தனையோ ஆப்கள் உள்ளன. இது வேண்டாம் என எண்ணி புறக்கணிக்க முடிவுசெய்துவிட்டால் தாராளமாக இதற்கு செயல் வடிவம் கொடுத்திட இயலும். ஆனால் டிக் டாக் மோகத்தில் மூழ்கி கிடப்பவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது கொஞ்சம் கஷ்டம்தான்.

இந்தியாவின் உளவு அமைப்புகள் சீனாவின் 52 செயலிகளைத் தடை செய்யவேண்டும் இல்லையெனில் இந்த செயலிகளை பயன்படுத்தும்போது மக்கள் உஷ்ராக இருக்கவேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் கசிகின்றன. இந்த பரிந்துரைகளை மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

சமீபக் காலமாக டி.வி., சந்தையிலும் சீன நிறுவனங்கள் கோலோச்ச துவங்கி இருக்கின்றன. இந்திய சந்தையில் விற்பனையாகும் ஸ்மார்ட் டிவியில் சீன நிறுவனங்களின் பங்கு 45 சதவீதமாகும். எப்படி ஸ்மார்ட்போன்களில் சீன நிறுவனங்கள் ஆட்சி செலுத்துகினறனவோ அதேபோல் மிக விரைவில் ஸ்மார்ட் டிவியையும் பிடிக்கப்போகிறது. ஓனிடா, பிபிஎல் போன்ற இந்திய நிறுவனங்கள் அவற்றோடு போட்டியிட முடியாத நிலையில்தான் உள்ளன. தரத்திலும் விலையிலும் சீன நிறுவனங்கள் மிக முன்னணியில் இருக்கின்றன. இவற்றிற்கு மாற்றாக சர்வதேச நிறுவனங்களான சாம்சங்., எல்ஜி., சோனி., போன்றவை இருந்தாலும் இவற்றின் விலை சீன நிறுவனங்களின் விலையைவிட 10 முதல் 15 சதவிகிதம் அதிகமாக இருக்கின்றன.

சோலார் பேனல்

சீனப் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டுமென முடிவெடுத்தால் அடுத்து அடிவாங்கப் போவது, சூரிய மின்சக்தி உற்பத்தித் துறைகள்தான். இவற்றிற்கான உபகரணங்களில் 90 சதவிகிதம் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த உபகரணங்கள் நம் நாட்டில் உற்பத்தியாகவில்லை என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். இதில் சீனாவுக்கு மாற்று தேடவேண்டுமென்றால் இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

இந்திய பார்மா துறை சீனாவையே நம்பி உள்ளன. மருந்தை தயாரிக்க வேண்டிய மூலப்பொருட்களை சீனாவிடமிருந்தே இறக்குமதி செய்கிறோம். இவற்றுக்கு மாற்று தேடுவது மிகவும் கடினம்.

வாடிக்கையாளரைக் குறைசொல்ல முடியுமா?

இந்திய, சீன எல்லைப் பிரச்னைக்கு பிறகு சீனப் பொருட்களை வைத்திருப்பவர்களை கேவலமாகப் பார்க்கும் நிலை உருவாகி இருக்கிறது. யாருக்கும் சீனப் பொருட்களை வாங்வேண்டுமென்ற ஆசை கிடையாது. தங்கள் பாக்கெட்டுக்கு பங்கம் விளைவிக்காதப் பொருட்களை யார் தயாரித்தாலும் அதை வாங்க மக்கள் தயராக இருக்கிறார்கள். அதை சீன நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன. இதேபோல் இந்திய நிறுவனங்கள் வளரவேண்டுமென்றால் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவு தேவைபடும்.

இன்னோரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியதுள்ளது. சீன தயாரிப்புகளை முற்றிலும் தவிர்க்க இயலுமா. ஆப்பிள் போனை வாங்குகிறோம். அது அமெரிக்கா கம்பனிதான். அதில் சந்தேகமில்லை. ஆனால் அதற்கு தேவைப்படும் உதிரிப் பாகங்கள் சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆப்பிள் வாங்கும்போது ஒரு குறிப்பிட்ட தொகை சீனாவிற்கு செல்லும். இதே நிலைதான். போயிங் விமானத்திலும் இருக்கிறது. சீன நிறுவனம்தான் போயிங்க்கு உதிரிப்பாகங்களை தயாரித்து கொடுக்கிறது. இந்தியாவில் பயன்படும் விமானங்களில் பெரும்பாலும் போயிங் விமானங்களே. போயிங் சீன நிறுவனங்களோடு தொடர்பில் இருப்பதால் போயிங்கை தவிர்க்க முடியுமா? இங்கு துவங்கியுள்ள சீன நிறுவனங்கள் நமது நிலை என்ன என்று இன்னும் முடிவாகவில்லை.

மேலும், பல முக்கிய இந்திய டிஜிட்டல் ஸ்டார்ட்-அப்களிலும் சீனா முதலீடுகள் செய்துள்ளன சீன நிறுவனங்கள். இம்முதலீடுகள் 100 கோடி டாலருக்கும் அதிகமானவை. இவை அனைத்துமே இந்தியர்களால் தொடங்கப்பட்டவை, இவை தொடர்பாக நமது அணுகுமுறை என்ன?

சீனா விஷயத்தில் எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற நிலையை எடுக்க முடியாத சூழல்தான் நிலவுகிறது. அகில இந்திய வணிகர் சங்கம் 3 ஆயிரம் சீனப் பொருட்களை தவிர்க்குமாறு வணிகர்களுக்கு அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக உள் நாட்டிலே சரி செய்துக்கொள்ள முடியும் என நினைக்கிறது. இதன் மூலம் 2021 முடிவில் ஒரு லட்சம் கோடி ரூபாயை சீனாவுக்கு தாரை வார்க்காமல் தவிர்க்கலாம்.

இந்திய சீன எல்லையில் பிரச்னை ஏற்பட்டவுடன் இங்கு சிலர் சீனப் பொருட்களை உடைத்தெறியுங்கள் என போராடக்குரல் எழுப்பினர். இதற்கு சிலர் செவி சாய்க்கவே வில்லை. செவி சாய்த்தவர்கள் தங்கள் வீட்டிலுள்ள சீனப் பொருட்களான டிவி., மோபைல் போன்றவையை தெருவில் கொண்டு வந்து உடைத்தார்கள். அதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டனர். போராட்டக்குரலால் பொருளாதாரத்துறையில் சாதிப்பது மிகவும் குறைவாகத் தான் இருக்கும். நாம் சீனப் பொருட்களை போட்டு உடைத்ததால் நமக்கு எந்த பலனும் விளையப் போவதில்லை. அதற்கான பணம் எப்போதோ சீனாவிற்கு சென்று இருக்கும். கடைசியில் இழப்பு நமக்குத்தான்.

நாம் சீனாவை சார்ந்திருக்கும் அளவுக்கு சீனா நம்மை சார்ந்திருக்கவில்லை. நம் இறக்குமதியில் சீனாவின் பங்கு 14 சதவிகிதமாக இருக்கிறது. நம் ஏற்றுமதியில் சீனாவிற்கு ஐந்து சதவிகிதற்கும் குறைவாகவே ஏற்றுமதியை செய்கிறோம். சீனாவின் ஏற்றுமதியில் அமெரிக்காதான் முக்கிய பங்கு வகுக்கிறது. ஆகையால் சீனாவுக்கு நாம் ஒரு பொருட்டே அல்ல. இருந்தாலும், ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் சந்தை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதை இழக்க சீனா தயாராக இல்லை.

ஆனால் வாடிகையாளர் என்ற முறையில் உடனே சீனாவுக்கு இந்தியர்கள் கதவை அடைக்கலாம். ஒருபுறம் பொதுமக்கள் இயக்கங்கள் வலுவடைய வேண்டும். அரசும் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். இப்படி தனது ஆய்வுரைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பொருளாதார நிபுணர் சொக்கலிங்கம் பழனியப்பன்.கட்டுரையாளர்: பேட்டி: குட்டிக்கண்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation