அகிலன் படைப்பில் கிராமமும் நகரமும்

பதிவு செய்த நாள் : 26 ஜூன் 2020

வாழ்க்கைதான் எழுத்தின் விளைநிலம் ; வாழ்க்கைதான் எழுத்தின் எதிரொலி . சில நேரங்களில் எழுத்தின் எதிரொலியாகவும் வாழ்க்கை ! எழுத்தின் பரிமாணங்கள் வாழ்க்கைப் போக்கின்  பல கோணங்களுக்கேற்ப அமைகிறது .

1922 ஜூன் 27
அகிலன் பிறந்தநாள்

அகிலன் தமது  " எழுத்தும் வாழ்க்கையும் " நூலில் கூறுகிறார் : " வாழ்க்கை எழுத்துக் கலைஞனை உருவாக்குகிறது ; எழுத்துக்கலைஞன் வாழ்க்கையை உருவாக்குகிறான்.

வாழ்க்கையே அவனுக்கு மூலப்பொருளைத் தருகிறது . அந்த மூலப்பொருளைக் கொண்ட புதிய ஒன்றைப் படைத்து அதை அவன் அந்த வாழ்க்கைக்கே திருப்பித் தருகிறான்."  ஆக,  அகிலனின் எழுத்தில் வாழுமிடம், பின்புலமாகவும் வாழும் மனிதர் படைப்பின் பாடுபொருளாகவும்.

1922 ஜூன் 27 அகிலன் பிறந்தநாள்.  சொந்த ஊர்  புதுக்கோட்டை அருகில் பெருங்களூர் எனும் சிறிய கிராமம்.   கிராமத்தில் பிறந்து, சிற்றூர்களில் வளர்ந்து,

சிறு நகர் திருச்சியிலும், சென்னை மாநகரிலும்  வாழ்ந்தார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், ரஷ்யா, மலேசிய சிங்கை, இலங்கை இங்கும் சென்று வந்து  அம் மண்ணையும் மனிதரையும் எழுத்தில் வடித்தவர்.

அகிலனின் தந்தை சமஸ்தானத்தின் ராஜ விசுவாசி, அரசு ஊழியர். கோயில் கணக்கப்பிள்ளை,  காட்டிலாகா, கலால், வரிவசூல்,

கிராம முன்சீப்  ஆக  பனையப்பட்டி, புதுப்பட்டி  சிறூர்களில்  பணி. சிறுவனாக இருந்த அகிலன் இவ்வூர்களிலும் புதுக்கோட்டை, மற்றும்  தாயின் சொந்த ஊரான கரூரிலும் வாழ்ந்தவர் . கரூரில்  அப்போது வருடம் முழுவதும் சிறு அளவிலேனும் ஓடிய அமராவதி, தென்னந்தோப்பு, மாரியம்மன்  திருவிழா, ஆடிப்பெருக்கு, கார்த்திகை, மார்கழி, பொங்கல் பண்டிகைகள் என்று இயற்கையோடு இயைந்த வாழ்க்கை .

புதுக்கோட்டை  மற்றும் அதைச் சுற்றிய வாழ்கை ஆங்கிலேயே விசுவாச சமஸ்தான வாழ்க்கை ; அதற்கு நேர்மாறான சுதந்திரப் போர்க்காற்று வீசிய கரூர் ! அமாவாசை தோறும்  ரயிலடியை அடுத்த ஆற்றங்கரையில் இரவில் பொதுக்கூட்டம்.  தேசியக் கவி  ராமலிங்கம் பிள்ளையின் தேசிய முழக்கம், 1934ல் காந்தியைக் கரூரில் கண்ட தேசத் தியாகத்தின் தரிசனம் !   சிறுவயதிலேயே, கலையுணர்ச்சியின் வித்தும் தேசிய உணர்ச்சியின் வித்தும்  கரூர்  அகிலனுக்கு அளித்த செல்வங்கள்.

பெருங்களூர் கோயில், குளத்தங்கரை, வயல்வெளி, பாம்புப் புற்றுக்கள், திருவிழாக்கள், மக்கள் நிலை எல்லாமே பாவை விளக்கில் புதுப்பட்டியாக வடிவம் கொண்டது. புதுக்கோட்டை கண்ணபுரமானது !  ' இன்ப நினைவு, கமலம், பாவை விளக்கில்,  செங்கமலமாக !  அப்போது புதுக்கோட்டை சமஸ்தானத்தில், நிலவிய அந்நிய அரசின் அபிமானம், சாதிகள்,

சம்பிரதாயங்கள், பொட்டுக்கட்டும் அநீதி  இவைகள் தூள் தூளாக உடைக்கப்பெற வேண்டும் என்கிற ஆவேசக் கனல் அகிலனிடம்  எழுந்து அது  பாவைவிளக்கில்  மிகச் சிறப்பான இடத்தில்  செங்கமலத்தின் மூலமும் பிற நிகழ்வுகள் மூலமும் வெளிப்பட்டது . " பெண் " நாவலில்  கனகம் 'கிராமத்துச் சேரியில் ' அம்மை நோய்   பரவிய போது அங்கு ஓடிச் சென்று  சிகிச்சைகள், உதவிகள் செய்தவள் - இறந்து போகிறாள் !      

வளர்ந்தார் அகிலன். 1944 இல்  திருமணம்.  நெல்லையில் ரெயில்வே மெயில் சர்வீஸில்  பணிப்  பயிற்சிக்கு வரச் சொல்லி ஆணை  செல்கிறார்.  சந்திரவிலாஸில் ஜாகை . தாமிரபரணியில் குளியல். மருதமர நிழற் சாலை .

  அருகிலேயே அலுவலகம்.  திருநெல்வேலி -திருவனந்தபுரம் மெயிலில்  ஓடும் ரயிலில் தபால் பிரிக்கும் பணி. செங்கோட்டைக்கும் புனலூருக்கும் இடையில் பேரெழில் காட்சிகள்  !  ஆரியங்காவு, தென்மலை ஸ்டேஷன்கள் மனோரம்மியமான சூழலில் ! குகைப் பாதை, காட்டு மலர் மணம், சில்லென்ற குளிர்க்காற்று.  தென்காசி, குற்றாலம் இங்கும் அகிலன் தம் பணிக்காலத்தில் அலைந்து திரிகிறார்  .  சுகி சுப்பிரமணியன் குற்றாலம் வந்தபோது,

அகிலனை அழைத்துக்கொண்டு டி கே சியைக்  காணச் சென்றார் . அகிலனிடம்  டி கே சி  கேட்ட முதல் கேள்வி : " என்ன,

போஸ்ட்மாஸ்டர்வாள், இங்கேயே தென்காசியிலிருந்து கொண்டு, என்னை வந்து பார்க்கக்கூடாதென்று ஒளிந்துகொண்டீர்களா ?" அப்போது நாட்டுக்குச்  சரியாக அறிமுகமாகாத நிலையில் டி கே சி, அகிலனைப்  பற்றித் தெரிந்து கொண்டது அகிலனுக்கு வியப்பு.

அகிலனுக்குள் கற்பனை வித்துக்களை ஊன்றிய புனிதமான இடம் இது என்று குற்றாலம், தென்காசியைக் குறிப்பிடு கிறார் அகிலனே .

பாவை விளக்கு நாவலில்    டி கே சி,  மாணிக்கவாசகமாக உருப்பெற்றார் !  குற்றாலம், தென்காசி எல்லாம் மிக அழகாக அந்நாவலில்  வந்தது .  

அதேசமயம் குற்றாலம், ஒகேனக்கல், கொடைக்கானல், ஏற்காடு இங்கெல்லாம் இயற்கையின் கொடையான மரங்கள் தன்னல வேட்டைக்காக வெட்டிச் சாய்க்கப் பெறுவது கண்டு அகிலன், மேக சஞ்சாரம் ,

துணைவி, நடுக்காட்டில் நள்ளிரவில் போன்ற சிறுகதைகளில் பொங்கியெழுகிறார் .  ரயில் பணி  அனுபவங்களிடையே கண்ட காட்சிகளும் கிராமமும் நகரமும்   தணியுமா ?, பெரிய மீன் ,  பிள்ளைவரம் ,

நாதனுள்ளிருக்கையில்   எனப்   பல கதைகளில் இடம்பிடித்தன .  

திருச்சி நகர் பிச்சைக்காரர்கள் முதல் பலவகைப்பட்ட மனிதர்களும் அகிலனின் படைப்புகளில் முக்கியமான பத்திரங்களாகப் பிறவி எடுத்தனர் ! மூன்று வேளை, பசி, மனிதர்கள், எல்லோருக்கும் பெய்த மழை, இப்படி பல .

தருமமிகு சென்னையில் அகிலன் தமது இறுதிநாட்கள் வரை 30 ஆண்டுகள் வசித்துள்ளார் . பற்பல அனுபவம்.

 நகரின் அகப் புறச்சூழல் , மனிதரின் வாழ்நிலை வெளிப்பாடு , அவர்தம் குணங்கள் இவையெல்லாம் அகிலனின் நாவல்களான பொன்மலர்,

எங்கேபோகிறோம் ? சித்திரப்பாவை, வானமா பூமியா ஆகிய நாவல்களில் மிகத் துல்லியமாகவும் ஆழமாகவும், அழகாகவும் காணக்கிடைக்கின்றது. நகரத்தில் ,

மனித வாழ்க்கை , கல்வி ,  திரை , எழுத்து ,

அரசியல் ,  பொது வாழ்வு ,  பணியிடம் என்று மிகப் பரவலான வாழ்வனுபவம் பெற்றார் அகிலன்  . அன்பு , பாசம் ,

அக்கறை , அரவணைப்பு , ஏமாற்று , திருட்டு ,  துரோகம் , நயவஞ்சகம் இப்படிப் பல்வேறு குணம் கொண்ட மனிதர்களின் உறவும் நட்பும்  எல்லாம் அகிலனின் சிறுகதைகளாக !  இப்படி ஒரு மனிதர் , சத்திய ஆவேசம் , வாழப்பிறந்தவன் , பசு பசி பாசம்   , அந்த ஒரு நாள்  போன்றவை திரை , நாடக மேடை   மனிதர்களின் நசுங்கல் வாழ்வை நயமாகக் கூறின .  மந்தையில் ஒரு மனிதன் , செல்லப்பிள்ளைகள் ,

சாதி இரண்டொழிய , குழந்தையின் கேள்வி போன்றவை  நகரம் சார்ந்த கல்வி ,

இளைய தலைமுறைப் போக்கைக் கூறின  .

புகழும் விளம்பரமும் , மழைக்கு ஒதுங்கிய இடத்தில் , டாக்ஸி ட்ரைவர் , வேலை தேடிப்போனவன் போன்றவை சாமான்யர்களின் வாழ்நிலையைக் கூறுபவற்றுள் சில . ஏழைப்பங்காளர் , மன்னாதி மன்னர்கள் , ஊர்வலம் போன்றவை அரசியல் பிரதிபலிப்புகள் . அகிலன் தமது , பெண் , பாவை விளக்கு , புதுவெள்ளம் ,

பொன்மலர் , சித்திரப்பாவை  மற்றும் இறுதி நாவலான வானமா பூமியா ? ஆகிய படைப்புகளில் நகரமயமாதல் , கிராமம் நசுக்கப்படுதல்    இவற்றால் மனிதனின் குணங்கள் , நோக்குநிலைகள்  நடைமுறையிலும் சித்தாந்த ரீதியிலும் எவ்வளவு சிதலமடைகிறது என்றும்  மிக அக்கறையுடன் சுவையாகவும் சிந்திக்கத் தூண்டும் வகையிலும் எழுதியுள்ளார் .    

"நகரம் கிராமத்தைத் தின்றுவிட்டது ; செல்வம் உழைப்பைத் தின்றுவிட்டது ;

இதைப்பார்த்தால் எலும்புக்கூட்டைப் பார்ப்பதுபோல் தோன்றவில்லையா ? " என்று தணிகாசலத்திடம் மாணிக்கவாசகம் கேட்பது  , இன்று   நம்முன்  அகிலனின் கேள்வியன்றோ ?    

சென்னைநகரில் எண்பதுகளில் தலைதூக்கிய தீராத பிரச்சனையான வீட்டுப் பிரச்சினையை அகிலனின் " வானமா , பூமியா ? மிக நுணுக்கமாகக் கூறுகிறது . அரசியல் ,

பொருளாதார , உணர்வுப் போக்கினைத் துல்லியமாகக் கூறும் நாவலாக நிறைந்தது இந்நாவல்  !    தனது முதல் படைப்பான   " அவன் ஏழை "சிறுகதையில் கிராமப்புற சிறுவனின் பசியின் கொடுமையைப் பேசிய அகிலன்,

தனது இறுதிப் படைப்பான  " வானமா  பூமியா ? "வில் நகரத்தின் வீட்டுப் பிரச்சனையில் முடிக்கிறார் தமது எழுத்துப் பயணத்தை!

எழுத்தாளர் அகிலன் கண்ணன்


கட்டுரையாளர்: எழுத்தாளர் அகிலன் கண்ணன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation