பதற்றம் தணிக்குமா பேச்சு வார்த்தை?

பதிவு செய்த நாள் : 25 ஜூன் 2020

இந்திய சீன எல்லையில் ஜூன் 15ல் இடம் பெற்ற இரு தரப்பு மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டார்கள். கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பின் இப்போதுதான் சீன தரப்பில் 55 வீரர்கள் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 இதைத் தொடர்ந்து இரு தரப்பு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தைகள் நடத்திக்கொண்டிருக்கிறர்கள்.  தினமும் பத்து மணி நேரத்திற்கு மேல் இந்த பேச்சு வார்த்தை தொடர்கிறது.

 பேச்சு வார்த்தைகளின் நடுவில் இரு தரப்பினருக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, இரண்டு ராணுவங்களுமே தங்கள் ராணுவத்தை பதற்றப் பகுதிகளிலிருந்து திரும்ப பெற்றுக்கொள்வதாக உடன்பாடு ஏற்பட்டதாக தகவல்கள் வந்தது.

 ஆனால்  ஜூன் 25ந்தேதி வேறு மாதிரி செய்திகள் வந்திருக்கிறது. செயற்கைகோள்கள் எடுத்த படங்களில் மீண்டும் சீன ராணுவம் அதே பகுதியில் நிரந்தர முகாம்கள் அமைக்கத் துவங்கிவிட்டது. அந்த இடத்திலிருந்துதான் சீனப் படைகள் ஜூன் 15 இந்திய படைகளால் விரட்டியடிக்கப்பட்டது. தங்கள் கண்காணிப்பு முகாம்களால் துப்பாக்கிகளுடன் இந்திய எல்லைக் கோட்டுப்பகுதிகள் அதே கல்வான் பள்ளதாக்கில் லடாக்கிற்கு கிழக்கே இந்த முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது.

கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் இன்னும் பதட்டம் நீடிக்கிறது. டெப்சாங் சமவெளியில் சீனா மீண்டும் தனது ராணுவ இடங்களுக்கு வந்துவிட்டது. அதே போல் பாங்கான் டிசோவிலுள்ள இந்திய பகுதிகளில் அவர்கள் ராணுவம் ஆக்ரமிக்கத் துவங்கிவிட்டது.  சீனாவில் மக்கள் விடுதலை ராணுவம் எளிதில் தனது நிலைப்பாட்டை இந்திய எல்லைகளிலிருந்து விட்டுக்கொடுப்பதாக தோன்றவில்லை.  இந்திய ராணுவ தலைமை அதிகாரி  எம்.எம். நரவானே இப்போது அந்த பகுதிகளை பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார். ` ஜூன் 15 மோதலுக்கு இந்தியா தான் காரணம்’ என்று சீன இப்போது  மீண்டும் வலியுறுத்துகிறது.

எல்லைகளில் பதற்றம் துவங்கிய நாளிலிருந்து இந்திய சீன அரசுகள் அரசியல் மற்றும் தூதரக ரீதியில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இரு தரப்பினருமே  துருப்புக்களை வாபஸ் வாங்குவதாகவே சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால் சீனா இந்த துருப்புக்களை திரும்பப்பெறுகிற விஷயத்தில் சீனாவை முழுமையாக நம்பத்தயாராக இல்லை.

 அதே சமயம் சீனாவின் அதிகாரபூர்வமான பதற்றம், மோதல் என்பது தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்குமே நன்மை தராது. உலகமே கொரானா நோய் தொற்றை சமாளிக்க முடியாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் மோதல் என்பது நிச்சய்ம் தவிர்க்க வேண்டியது கட்டாயம்.  பூகோள அரசியல் என்பது இப்போது உலகம் முழுவது முற்றிலுமாக மாறிவிட்டது. போரை உலகத்தில் எந்த நாடும் விரும்பவில்லை.  பரஸ்பர ஒற்றுமை, வர்த்த உறவுகள் மூலமே இனி நாடுகள் வளம் பெற முடியும்.  இந்தியாவுக்கு சீனாவுக்கும் ஏராளமான வர்த்தகத் தொடர்புகள் இருக்கிறது. எல்லை மோதல்கள் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்துவதை சீன அரசாங்கம் விரும்பவில்லை.’ என்றது அந்த சீன  செய்தி குறிப்பு.

 செய்திகளில் ஒரு சமாதானக்குரல் இருந்த அதே சமயத்தில் ஜூன் 15 சம்பவத்திற்கு இந்தியா தான் முழுப்பொறுப்பு என்றது. அதே சமயம் சந்தேகத்திற்கிடமில்லாமல் கல்வான் பள்ளத்தாக்கு என்பது எங்கள் எல்லைப் பகுதிதான் இந்தியா எங்கள் எல்லைக்குள் அத்துமீறி புகுந்தது. ஜூன் 15 அன்று இந்தியா நடந்து கொண்டவிதம் ராணுவ நாகரீகங்களை கடந்த அருவருக்கத்தக்க தெருச்சண்டை தாக்குதல். இதன் விளைவுகளை இந்தியா சந்தித்தே தீரும். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய ஊடகங்களும் பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கின்றன’ என்று கடுமையாக தாக்கியிருக்கிறது. ஆனால் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்தியா மெளனம் காத்துக்கொண்டிருக்கிறது.

இதுவரையில் சீனாவின் அயலுறவுத்துறையின் கடுமையான விமர்சனத்துக்கு பதில் அளிக்கவில்லை.  ஆனால் இந்திய வெளியுறவுத்துறை வட்டாரத் தகவல்களின்படி ` ஒவ்வொரு முறையும் சீனா தனது பேச்சை மாற்றிக்கொண்டேயிருக்கிறது. முந்திய பேச்சுவார்த்தையில் கல்வான் பள்ளத்தாக்கைப் பற்றி சீனா பேசவேயில்லை. பேச்சுவார்த்தைகளில் இடம் பெறாத விஷயங்களை சீனா புதிது புதிதாக நுழைத்து, ஏற்றுக்கொள்ளமுடியாத பல உரிமை கோரிக்கைகளை எல்லைக்கட்டுப்பாட்டு கோடுகளில் வைத்துக்கொண்டே போகிறது ‘ என்கிற இந்திய வெளியுறவுத்துறை.

 சமாதான பேச்சுவார்த்த நடந்த கொண்டிருக்கும்போதே இப்போது கிழக்கு லடாக் பகுதிகள் சீன ராணுவம் ஊடுவிக்கொண்டிருக்கிறது. முகாம்கள் நிரந்தரமாக அமைத்துக்கொண்டிருக்கிறது.  இது செயற்கைக் கோள் படங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றன என்பதை இந்திய ராணுவம் இன்னும் உறுதி செய்யவில்லை.

அதே நேரத்தில் கிழக்கு லடாக்கின் டெப்சங், கல்வான், ஹாட் ஸ்பிரிங்க்ஸ், பெங்காங் டிசோ, சூசல்,டெம்சாக், சூமார் பகுதிகளில் இந்திய ராணுவம் தன் படைகளை அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.  அதே சமயம் இந்திய ராணுவ தலைமை அதிகாரி அந்தப் பகுதியில் முகாமிட்டிருக்கிறார். ` இரு தரப்பிலும் துருப்புக்களை பின்வாங்கிக் கொள்வதாகத்தான் இதுவரையில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம்.  அதே சமயம் மோசமான சூழலை சந்திக்கவும் இந்தியா தயாராக இருக்கிறது.’ என்கிறார் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரி ஒரே இணைப்பு சாலை திட்டத்தை சீனா நமது எல்லைப்புறத்தில் விரிவு படுத்திக்கொண்டே போகிறது. கடந்த காலங்களில் அவர்களின் நடவடிக்கைகளில் இந்தியா அதிக அக்கறை காட்டவில்லை. ஆனால் கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய பகுதிகளிலும், கல்வான் நதியிலும் இந்தியா 2014ம் ஆண்டிற்குப் பிறகு சாலைகள் அமைத்து, பாலங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றன. 

இதுவே மோதலுக்கான அடிப்படைக் காரணம். கிழக்காசிய பகுதிகளில் சீனா தன் ஆதிக்கத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.  இந்தியாவின் லடாக் எல்லையி கல்வான் பள்ளத்தாக்கிற்கு உரிமை கோரி அத்துமீறும் சீனா, அடுத்ததாக கிழக்கு சீனக் கடல் பகுதியில் ஒரு தீவுக் கூட்டத்துக்கு சொந்தம் கொண்டாடி ஜப்பானுடன் மோதல் அணுகுமுறையை துவங்கியிருக்கிறது. இந்தத் தீவுகள் மீதான சட்ட பூர்வமான உரிமையை நிலைநாட்ட ஜப்பான் முனைந்திருக்கிறது. சீனாவுடனான மோதல் தீவிரமாகும் நிலையில் ஜப்பானுக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிடும் என்பதால் இந்த விவகாரம் இப்போது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. என்கிறார் ஒரு அரசியல் விமர்சகர்.

 ஆனால் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை  இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். பேச்சுவார்த்தை எல்லைப்பதற்றத்தை தணிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


கட்டுரையாளர்: சுதாங்கன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation