கல்லூரிக்கல்வி: அலச வேண்டிய 5 பாயிண்ட்ஸ்!

பதிவு செய்த நாள் : 24 ஜூன் 2020

மாணவரின் எதிர்காலம் மற்றும் தொழிலுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது கல்லூரி படிப்பு. வாழ்க்கையைத் தீர்மானிக்கும் முக்கியமான காரணியான கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும் முன்பு ஒவ்வொரு பெற்றோரும் மாணவர்களும் ஐந்து விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.

அந்த ஐந்து விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து அலசுவோம் வாங்க!

1. எந்த துறையில் கல்வி?

எந்த துறையை அல்லது பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் பெறப்போகிறோம் என்பது மிக முக்கியமானது. மாணவர்கள், தனக்கு ஆர்வமுள்ள எதிர்காலத்தில் தன்னுடைய கனவுக்கு வடிவம் கொடுக்கும் துறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை ஆர்வமுள்ள துறையைக் கண்டுபிடிப்பதில் குழப்பமிருந்தால்  கடந்த இரண்டு ஆண்டுகளில் காலாண்டு, அரையாண்டு, ஆண்டு இறுதித்தேர்வுகளில் எந்த பாடத்தில் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறீர்கள் என்பதைக் கவனித்து அதற்குத் தகுந்தாற்போல் கல்லூரி பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கலாம்.

பிள்ளைகள் இந்த படிப்பைத் தான் அல்லது துறையைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று  பிள்ளைகளுக்கு ஆர்வமில்லாத் துறையைத் தேர்ந்தெடுக்க பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்கக்கூடாது.

பிள்ளைகள் பத்தாம் வகுப்பிலும், பன்னிரண்டாம் வகுப்பிலும் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், அவர்களின் திறன் மற்றும் கடந்த கால விருப்பங்களின் அடிப்படையிலும் அவர்களுக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டினால் போதுமானது.

2. பொருளாதார நிலை

நீங்கள் விருப்பப்படும் படிப்பில் சேர எவ்வளவு செலவாகும் என்பதையும் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும். குறிப்பாக, மருத்துவம் படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள் நீட் தேர்வுக்குத் தயாராக வேண்டும். நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். அரசு கல்லூரியில் இடம் கிடைத்தால் ஆண்டு கல்விக் கட்டணம் ரூ. 13600 ரூபாய் மட்டுமே. ஆனால், நீட் தேர்வில் மதிப்பெண்  குறைந்தால்  அரசு ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர வேண்டிய நிலை வரலாம். அப்போது,  ஆண்டு கட்டணமாக மூன்று லட்சத்திலிருந்து ஏழு லட்ச ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும்..

 நிகர்நிலை பல்கலைக்கழகம் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் கல்வி நிறுவனங்களில் சேர ஒதுக்கீடு பெற்றால் ஆண்டுக்கு இருபது முதல் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். இத்தகைய கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்பை ஐந்தரை ஆண்டு படிப்பதற்குள் ஒன்றரைக் கோடி ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.  கல்விக் கடன் கிடைக்கிறதே என்று கேட்கலாம். இவ்வளவு பெரிய தொகையை கல்விக் கடனாக வழங்க வங்கிகள் தயக்கம் காட்டுகின்றன. மேலும், இவ்வளவு பெரிய தொகையை கடனாக வழங்க அதற்கு உரிய அளவுக்கு சொத்து உண்டா என்று வங்கியில் கேட்பார்கள். சொத்து அடமானத்தின் அடிப்படையிலே கடன் வழங்கப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.

மருத்துவப் படிப்புக்கு அடுத்த இடத்தில் உள்ள பொறியியல்  படிப்பில் சேர நினைப்பவர்களுக்கு அரசு கல்லூரியில் சேர்ந்தால் முதலாம் ஆண்டு கட்டணமாக ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கும். சுயநிதி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தால் முதலாம் ஆண்டு கட்டணமாக எண்பதாயிரம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்ச ரூபாய் வரை கட்டணமாகச் செலுத்த வேண்டி இருக்கும்.

அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேர பத்தாயிரம் ரூபாய்க்குக் குறைவாகக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர பத்தாயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கட்டணமாகப் பெறப்படுகிறது.

ஒரு சிலர் பெரிய கனவோடு இருப்பார்கள். பொருளாதார நிலையைக் கவனத்தில் கொள்ளாமல் கல்லூரியில் சேர்ந்த பின்பு  கட்டணம் செலுத்த முடியாத நிலையை எதிர்கொள்கின்றனர்.  தற்போதுள்ள நிலையில் மருத்துவம், பொறியியல், தகவல் தொழில்நுட்பம், விமானப் போக்குவரத்து போன்ற படிப்புக்கு அதிகளவில் செலவு செய்ய வேண்டி உள்ளது.

ஒரு வேளை உங்களுடைய கனவுக்கு பொருளாதாரம் இடம்கொடுக்க முடியாமல் போனால், அந்த கனவை நிறைவேற்ற அதிக செலவில்லாத மாற்றுப் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம்.

மருத்துவப் படிப்பில் இடம்கிடைக்காமல் போனால், பயோடெக்னாலஜி, பயோமெடிக்கல் இன்ஜினீயரிங் படிப்பைத் தேர்ந்தெடுத்து மருத்துவத் துறைக்குள் நுழையலாம்.  

கம்ப்யூட்டர் இன்ஜினீயரிங் இடம்கிடைக்காவிட்டால் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைத் தேர்ந்தெடுத்து தகவல் தொழில்நுட்ப உலகில் நுழையலாம்.

ஆக, உங்களுடைய பொருளாதார நிலை என்ன... உங்களுடைய கனவும் இலக்கும் என்ன என்பதை முன்கூட்டியே முடிவெடுக்க வேண்டும். உயர்ந்த கனவும், குறிக்கோளும் உயர்வாக இருந்தால் உங்களுடைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, எந்த படிப்பில் சேரலாம், சுயநிதி கல்லூரியில் அல்லது அரசு கல்லூரியில்  சேர்வதா என்பதையும் நீங்களும் பெற்றோர்களும் அமர்ந்து பேசி ஆலோசித்து முடிவெடுங்கள்.

3. பலம் - பலவீனம் என்ன

உங்கள் வலிமை மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்ளுங்கள்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளின் பலத்தையும் பலவீனத்தையும் அங்கீகரிப்பது மிக முக்கியம். பலங்கள் என்பது நேர்மறையான மதிப்பு. இதுவே  ஒரு நபரை முன்னோக்கிக் கொண்டு செல்ல உதவும். அதேசமயம், பலவீனங்கள் ஒரு நபரைப் பின்னோக்கி இழுக்கக்கூடிய எதிர்மறை மதிப்பு. இந்த இரண்டு புள்ளிகளையும் அறிந்து கொள்வதன் மூலம், மாணவர்  எதிர்கொள்ளவிருக்கும் எந்தவிதமான சிரமங்களையும் தடைகளையும் வெல்ல முடியும். பலங்களைப் பயன்படுத்த வேண்டும், அதேசமயம், பலவீனங்களைக் கட்டுப்படுத்த அல்லது குறைக்க வேண்டும். பலத்தின் அடிப்படையில் மேற்கொண்டு கல்லூரி படிப்பைத் தேர்வு செய்து முன்னேறலாம். ஓவியத் திறன் பெற்ற மாணவர்கள் கவின் கல்லூரியில் சேர்ந்து தன்னுடைய ஓவியத்திறனை மேலும் மெருகூட்டிக் கொள்ளலாம். இவர், ஏதேனும் ஒரு கலைப்படிப்பை அல்லது பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யும்போது கொஞ்சம் தடுமாறலாம். ஆகையால், உங்களுடைய திறமை மற்றும் பலங்களின் அடிப்படையில் கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுத்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

4. எந்த மீடியம்?

பன்னிரண்டாம் வகுப்பைத் தனியார்ப் பள்ளியில் படித்தவர்கள் பெரும்பாலும் கல்லூரியில் சேரும்போது ஆங்கில மீடியத்தை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள் எந்த மீடியத்தை தேர்ந்தெடுப்பது என்று குழம்புகிறார்கள். தமிழ் மீடியத்தில் படிப்பவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை, கூடுதலாகக் கல்வி உதவித்தொகை என்று சில கூடுதல் பயன்கள் உண்டு. ஆனால், இளநிலை பட்டப்படிப்பு முடித்தவுடன் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கச் செல்லும்போது, பெரிய அளவில் தடுமாற வேண்டிய நிலை உள்ளது. ஆக உயர்கல்விக்குத் திட்டமிடுபவர்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுப்பது நல்லது

.5. முழுநேரப் படிப்பா? தொலைதூர கல்வியா?

தமிழ்நாட்டில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி வாசலை எட்டிப் பார்ப்பவர்கள் 50 சதவிகிதம் மட்டுமே. மீதமுள்ள 50 சதவிகிதம் பேர் பல்வேறு காரணங்களால் கல்லூரி படிப்பைத் தொடர முடிவதில்லை. பொருளாதார காரணங்களால் முழுநேர கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியாதவர்கள் தொலைதூர கல்வியைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்கள் வேலை பார்த்துக்கொண்டே படிக்கலாம். தற்போது, பல்கலைக்கழக மானியக் குழு தனது பரிந்துரையில், முழு நேரக் கல்லூரி படிப்பவர்களும், தொலைதூர கல்வி வழியாகவும் கூடுதலாக ஒரு பட்டப்படிப்பைப் படிக்கவும் வாய்ப்பு வழங்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

கொரோனா ஊரடங்குக்குப் பின்னர் முழுநேர கல்லூரியில் படிப்பதற்கும் தொலைதூர கல்வியைத் தேர்ந்தெடுப்பதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இருக்காது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இனி, ஆன்லைன் வழியே எல்லா வகையிலும் கற்றலுக்கு உதவ கொரோனா உதவி செய்திருக்கிறது என்பதே நல்ல செய்தி.

மேற்கண்ட ஐந்து விஷயங்களின் அடிப்படையில் உங்களுடைய கல்லூரி படிப்பைத் தேர்ந்தெடுத்து நிபுணத்துவம் பெறுங்கள்.கட்டுரையாளர்: - ஞா. சக்திவேல் முருகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation