கொரோனா பிடியிலிருந்து தப்பிக்க... யோகாசனம்.. பயன்படுமா? கேள்வி பதில் பகுதி!

பதிவு செய்த நாள் : 21 ஜூன் 2020 10:44

"உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே" என திருமூலர் கூறுவதிலிருந்து ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் நமக்கு தெளிவாகிறது. உடல் மற்றும் மன ஆரோக்கிய பெற நம் முன்னோர் நமக்கு விட்டுச்சென்ற ஒரு கலைதான் யோகக்கலை

 6வது அகில உலக யோகா தினத்தை முன்னிட்டு பத்மநாபபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு மருத்துவர் Dr. சுஜின் ஹெர்பர்ட் அவர்கள் யோகா சம்பந்தமான கேள்விகளுக்கு தந்த பதில்.

1. யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?


ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் மனிதன் இயற்கையை பார்த்து தெரிந்து கொண்ட இக்கலையானது மனிதனை இயற்கையுடன் இணைந்த வாழ்வுக்கு அழைத்து செல்கிறது. விலங்குகளைப் போன்ற வலிமையும், பறவைகளை போன்ற மென்மையும், மரங்களை போன்ற ஸ்திர தன்மையும் நாம் யோகா செய்வதால் கிடைக்கும்.

உடல் உபாதைகளான மலச்சிக்கல் ஜீரண கோளாறு, சர்க்கரை நோய், உயர் இரத்த

அழுத்தம், மூட்டுவலி, முதுகு வலி போன்றவற்றிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. நோயில்லா வாழ்வு வாழ யோகா ஒரு உன்னத மருத்துவம்.


2.மனநோய்களுக்கு யோகாவில் தீர்வு உண்டா?


நீண்டநாள் மன அழுத்தத்தின் வெளிப்பாட்டால் உருவாகும் எல்லா மன நோய்களுக்கும் யோக பயிற்சிகளால் சிறந்த தீர்வு கிடைக்கும். மூச்சு பயிற்சிகள் மற்றும் தியான பயிற்சிகள் மன இறுக்கத்தினை தளர்த்தி ஹார்மோன்கள் சுரப்பதை சீராக்குகிறது. மன அமைதி கிடைக்கும். தூக்கம் சீராகும். நாட்கள் இனிமையாக களியும். மன நோயிலிருந்து எளிதாக விடுபடலாம்.


3. தடுப்பு சக்தி அதிகரிக்க யோகா பயிற்சிகள் உண்டா,?


ஏறத்தாழ எல்லா யோகா பயிற்சிகளும் தடுப்பு சக்தியை அதிகப்படுத்தும். எப்படி என்றால் பயிற்சிகள் ஜீரண சக்தியை அதிகரித்து சத்துப்பொருட்கள் உடலில் சேர்வதை ஊக்குவிக்கிறது. என்சைம் மற்றும் ஹார்மோன் சுரப்பிகளை சரிசெய்து சீரான உடல் செயல்களை தூண்டுகிறது. கழிவு மண்டலங்களை தூண்டி கழிவுகளை வெளியேற செய்கிறது. சீரான தூக்கம், நல்ல பசி, வலியில்லா உடல் மற்றும் தெளிவான சிந்தை இவை அனைத்தும் நம் உடலின் தடுப்பு சக்தியை அதிகாக்கிறது.


4.கோவிட் 19 நோய்க்கு யோகாவால் தீர்வு கிடைக்குமா?


யோகா மற்றும் இயற்கை மருத்துவ தத்துவப்படி உடல் ஆரோக்கியமாக இருந்தால் நுண்கிருமிகள் உடலில் வாழ முடியாது. எனவே உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் யோகா பயிற்சிகளான, ஆசனங்கள் மூச்சு பயிற்சிகள், உணவு முறை மாற்றங்கள் போன்றவை தொற்றுநோய்களிலிருந்து நம்மை எளிதில் பாதுகாக்கும். இது கோவிட் 19 க்கும் பொருந்தும்.

5. யோகா செய்ய வயது வரம்பு ஏதாவது உண்டா?

அப்படி வயது வரம்பு எல்லாம் கிடையாது. புரிந்துகொள்ளும் வயதில் உள்ள எல்லாரும் யோகா பயிற்சிகளை செய்யலாம். சுமார் 7 வயதிற்குமேல் எத்தனை வயது வரை வேண்டுமானாலும் யோகா செய்யலாம். கடினமான பயிற்சிகளை வயதானவர்கள் தவிற்க வேண்டும். ஒரு யோகா மருத்துவரின் ஆலோசனையோடு பயற்சிகளை செய்தல் நல்லது.


6. எந்தெந்த நேரங்களில் யோகா செய்வது பயனுள்ளதாக அமையும்.?


காலை மற்றும் மாலை நேரங்கள் சிறந்தது. இருப்பினும் காலை வேளையே சாலச்சிறந்தது. உணவு உண்பதற்கு முன்னால் யோகா செய்வதே உகந்தது. உண்டபின் குறைந்தது மூன்று மணி நேரம் கழித்து யோகா செய்தால் சிறந்தது.

7. யோகா செய்பவர்கள் உணவு முறைகளில் மாற்றம் செய்வது கட்டாயமா?


யோகாவில் உணவுக் கட்டுப்பாடு உண்டு. எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை உண்பது நல்லது. துரித உணவுகள் கலர் மற்றும் மசாலா அதிகம் சேத்த உணவுகளை குறைத்து இயற்கை உணவுகளுக்கு முதலிடம் தருவது சிறந்தது.


8. யோகா பயிற்சிகள் தினமும் செய்ய வேண்டுமா?


தினமும் மீண்டும் மீண்டும் செய்தால் மட்டுமே அது பயிற்சியாகும். தினமும் உணவு உண்பவர்களுக்கு யோகா பயிற்சிகளும் அத்தியாவசியமாகும்.

யோகா பயிற்சிகளை நமது அத்தியாவசிய பொருட்கள் வரிசையில் நாம் சேர்க்க வேண்டும்..


9. இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடும் மக்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

|

மதங்களை கடந்து, இனங்களை கடந்து, நாடுகளை கடந்து மனித குலத்திற்கு இந்திய மண் தந்த சொத்து இந்த யோகக்கலை. மனத்தெளிவும் உடல் ஆரோக்கியமும் பெற்று உறவுகள் மேம்படவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழ தினமும் ஒரு மணிநேரம் யோகா பயிற்சிகள் செய்வோம் என உலக மக்கள் அனைவரும் இந்த. 6வது சர்வதேச யோகா தினத்தன்று சபதமேற்போம். அனைவரும் மன அமைதியும் முழு ஆரோக்கியமும் பெற வாழ்த்துக்கள்.


Dr.R.S.சுஜின் ஹெர்பர்ட்

உதவி மருத்துவ அலுவலர்

யோகா & இயற்கை மருத்துவம்

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை

பத்மநாபபுரம்.

கன்னியாகுமரி மாவட்டம்..தொகுப்பு:

பேராசிரியை பஸ்மத்...

நாகர்கோவில்