சேனல் செய்திகள் (20. 06. 2020)

பதிவு செய்த நாள் : 20 ஜூன் 2020

 யார்?

  ’இவர்  யார்’   சத்தியம் டிவியில் சனிதோறும் மாலை 5.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.

  இந்த  பூமி பல்வேறு வரலாறுகளை தனக்குள்ளே புதைத்துக் கொண்டே இருக்கிறது.  ஹரப்பா  நாகரிகம் தொடங்கி உலக அதிசயங்கள் என எதுவாக இருந்தாலும் இவை அனைத்துக்கும் பின்னணியாக இருப்பது மனிதன் என்கிற ஒரு தூண்டுகோல்தான்.  அப்படி பல்வேறு கோணங்களில் மனிதர்கள் தங்களை ஏதோவொரு விதத்தில் எதிர்கால சந்ததியினர் சிந்தனையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.


 அப்படி  எண்ணற்ற அறிஞர்கள், சிந்தனையாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா படவுலகை சேர்ந்தவர்கள் என வரலாற்று பக்     கங்களில் இடம்பிடித்த பலருடைய வரலாற்றையும்,  அவர்களது வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களையும் இந்நிகழ்ச்சி தெரிவிக்கிறது.


சிரிப்பு   வெடி!

            இளைஞர்களை  கவரும் வகையிலும், ஆபீசில் பணியாற்றிவிட்டு அலுப்புடன் வீடு திரும்புபவர்களை ரிலாக்ஸ் பண்ணும் வகையிலும், அனைத்து வயதினரையும் ஈர்க்கும் வகையிலும்  வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, ‘யோகி’ பாபு போன்ற லீடிங் காமெடி நடிகர்களின் காட்சிகள்,  சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, தம்பி ராமையா போன்றவர்கலின்  காமெடி  காட்சிகளை வேந்தர் டிவி ஒளிபரப்பி வருகிறது.

  ‘ஹவ்  இஸ்  இட்’  என்கிற இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை  மாலை 4 மணிக்கும்,  இரவு 8  மணிக்கும் ஒளிபரப்பாகிறது.


சட்டரீதியாக  எதிர்கொள்வது  எப்படி?

 நியூஸ் 7 தமிழில்  ‘மாண்புமிகு  நீதியரசர்கள்’  ஞாயிறுதோறும்  காலை  9.30  மணிக்கு  ஒளிபரப்பாகிறது.  பா.  கார்த்திக்  கேசவன்  தயாரிக்கிறார்.  

சட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அவ்வளவாக  இருப்பதில்லை. ஒரு பிரச்னை வந்தால், சட்டப்படி அதை எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் இருக்கிறார்கள்.  சட்டம் தெரியாததால் வரும் அச்சத்தையும் குழப்பத்தையும் போக்கும் வகையில் இந்நிகழ்ச்சி அமைகிறது.   கொரோனா  காலத்தில்  இஎம்ஐ  செலுத்தும்படி சொல்லும் வங்கிகள், வாடகை கேட்கும் கட்டட உரிமையாளர்கள் உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து சட்டப்பார்வையில்  இது  அலசுகிறது.

            நெறியாளர்  ரா.  கோபாலகிருஷ்ணன்  சட்டம் சார்ந்த கேள்விகளை முன்வைக்கிறார்.  இந்த  கேள்விகளுக்கு மூத்த  வழக்கறிஞர்கள் மீனாட்சிசுந்தரம், நீலவேணி  ஆகியோர் ஒரு வழக்கை எடுத்துக் கொண்டு  விளக்கமளிக்கிறார்கள்.

  

திரும்பி   பார்ப்பது ….. வரலாறு!

’வரலாற்றில்  இன்று’  -   சத்தியம் டிவியில்  தினமும்  காலை  7.30  மணிக்கு ஒளிபரப்பாகிறது.  

 மனித  இனம்,  தான் கடந்து வந்த பாதையை திரும்பி  பார்ப்பதுதான் வரலாறு.  அப்பேர்ப்பட்ட வரலாற்று பக்கங்கள் தினமும் பல்வேறு நிகழ்வுகளால் செதுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.  ஒவ்வொரு  நிகழ்வின் பின்னணியிலும் பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.  சம்பவங்கள்  நிறைந்த இந்த சரித்திர பாதையில்தான் மனித இனம் பயணித்து கொண்டிருக்கிறது.  அந்த வரலாற்றை தொலைத்த  நாளாக மாறாமல் பல்வேறு நிகழ்வுகளை நினைவுபடுத்திக் கொண்டேதான் இருக்கிறோம்.  தொலைந்து போன வரலாற்றையும் தேடி கண்டுபிடிக்கிறது இந்த  நிகழ்ச்சி.  

 

உலகத்தையே  அடக்கியாள   கொடியவன்  முயற்சி!

சின்னத்திரை நேயர்களுக்கு புதிய விருந்தாக இருப்பது  “7ம்  உயிர்”  திகில் சீரியல்.      

இது  வேந்தர் டிவியில்  திங்கள்  முதல்  வெள்ளி வரை  இரவு  9  மணிக்கு ஒளிபரப்பாகி  வருகிறது.   ஜீவா  ரவி,  லட்சுமி, சூசன் மற்றும் ஏராளமானோர் நடிக்கின்றனர்.

 அண்டசராசரங்களையும்  அடக்கியாளும்  சக்தி தனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கும் கொடியவன்  வீரபத்திரன், ஒரே நட்சத்திரத்தில், ஒரே நாளில் பிறந்து வெவ்வேறு  இடங்களில் வாழும்  ஏழு கன்னிப்பெண்களை அமாவாசையன்று பலி கொடுத்தால் அந்த சக்தியை பெறலாம் என்று நினைக்கிறான்.  அவனது இந்த முயற்சி வெற்றி பெற்றதா, இல்லையா  என்பதே கதைக்கரு.