டிவி பிட்ஸ் (18. 06. 2020)

பதிவு செய்த நாள் : 18 ஜூன் 2020

 ‘சகுனி’   நடிகர்  டிக் டாக்குக்கு அமோக  வரவேற்பு!

  ‘மகாபாரத’த்தில்  இடம்பெறும் முக்கிய கேரக்டர்களில்  ‘சகுனி’யும் ஒன்று.  இன்னும் சொல்ல போனால்,  ‘சகுனி’தான் மெயின் வில்லன்.  அவனுக்கு  அடுத்தபடியாகத்தான்  துரியோதனன் அண்ட் கோ வருவார்கள்.


        சரி -  விஷயத்துக்கு வருவோம். 1988 அக்டோபரில் பிரபல  பிஆர் பிலிம்ஸ் சார்பாக பிஆர் சோப்ரா தயாரித்து   தூர்தர்ஷனில்  ஒளிபரப்பான ‘மகாபாரதம்’  இந்தி சீரியல் பின்னர்   தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட போது  ’சகுனி’  கேரக்டருக்கு  டப்பிங் பேசியவர்  பிரபல  டப்பிங்  கலைஞர்  கே.என்.  காளை.  அவருடைய  ‘கீச்சு’  குரலும்,  வாயசைப்புக்கு தகுந்தபடி கனகச்சிதமான  வசன  உச்சரிப்பும்  அந்த கேரக்டருக்கு  ’உயிர்’  கொடுத்தன  என்றே சொல்ல  வேண்டும்.  அதை பார்த்தவர்களால் இன்றளவும்  மறக்க முடியாது.  அந்த  சீரியலில்  ‘சகுனி’யாக  நடித்தவர், குபி பைந்தால்.

       தற்போது விஜய் டிவியில் இந்தியிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வரும் லேட்டஸ்ட்  ‘மகாபாரத’த்தில்,  ‘சகுனி’  கேரக்டரில் பிரனித் பட் நடித்திருக்கிறார்.  காலை  தாங்கி தாங்கி நடந்து கொண்டு  கெட்ட ஐடியாக்களை சொல்லும்  போது மட்டும்  தனது ஒற்றை கண்ணை மூடிக்கொண்டு  நடிப்பது அபாரமாக இருக்கிறது.  அவருக்கு  டப்பிங் பேசுபவர் நன்றாகத்தான் பேசி நடிக்கிறார்.  இருந்தாலும், கே. என் காளை  அளவுக்கு நம்மை கவரவில்லை.

      ஊரடங்கின் போது  இந்த ‘சகுனி’ பிரனித் பட் தன் வீட்டில் பல டிக் டாக்குகள் செய்து வருகிறார்.  டிக் டாக்கில், ‘மகாபாரத’த்தில் பேசி நடித்ததை போல அதே மாதிரி முகத்தை சாய்த்து  ஒரு கண்ணை மூடிக் கொண்டு  பேசுகிறார்.  பற்பல டிக் டாக்குகள் செய்து  சமூக தளத்தில் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.  அதை பார்த்து விட்டு அவரை பாராட்டி  ரசிகர்களும்  தங்கள் கமெண்ட்டுகளை  குவித்து வருகின்றனர்.

  ஊரெல்லாம்   இதே  பேச்சு!


   அவ்னி டெலிமீடியா நிறுவனம்  சார்பில்  தயாரித்ததோடு   சுரேஷ்  மனைவி  ‘மகாலட்சுமி’யாக முன்னணி கேரக்டரிலும்   குஷ்பு  நடித்த  ‘லட்சுமி  ஸ்டோர்ஸ்’  சென்ற  ஜனவரியில்  முடிவடைந்தது.   அதன்பின்,  அவரிடமிருந்து  அடுத்த  சீரியல் தொடர்பான எந்த அறிக்கையும்  வரவில்லை.  அப்படியே  அவர் திட்டமிட்டிருந்தாலும்    அதற்குள்ளாகவே  ‘வரக்கூடாத விருந்தாளி’  கொரோனா  உலகத்தில்  எண்ட்ரி கொடுத்துவிட்டதே!

        அவருடைய  பிரம்மாண்டமான, கலையம்சம் கொண்ட வீடு  பலரையும் வியக்க வைத்திருக்கிறது.  ஆனால்,  அதற்காக அவர் கொடுத்த ’விலை’, கொஞ்சநஞ்சமல்ல!


டிஆர்பி   படுத்தும்  பாடு!

கொரோனாவுக்கு முன்பு ………….  20க்கும் அதிகமான சேனல்களில் தினமும் 200க்கும் அதிகமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தன.   அது  மட்டுமா?  100க்கும் அதிகமான ரியாலிட்டி  நிகழ்ச்சிகள், விளையாட்டு  நிகழ்ச்சிகள் வேறு!  பார்வையாளர்கள் எந்த நிகழ்ச்சிகளை கூடுதலாக பார்க்கிறார்கள், எந்த சேனல்களை அதிகம் பார்க்கிறார்கள்  என்பதை டிஆர்பி  ரேட்டிங்குகள் புள்ளி விவரத்தோடு  தெரிவிக்கின்றன.

           டிஆர்பி ரேட்டிங்கில் கொஞ்சம் சரிவு காணப்பட்டாலும், சேனல்கள்  சீரியல் தயாரிப்பாளர்களுக்கு  ’எச்சரிக்கை’ மணி அடித்துவிடும்.  உடனே  தயாரிப்பாளர்கள் டென்ஷனாகி  மீட்டிங்குக்கு ஏற்பாடு செய்து   சம்பந்தப்பட்ட டைரக்டர்களை  படுடென்ஷனாக்கி விடுவார்கள்.  எனவே,  டிஆர்பி ரேட்டிங்கில் எப்படியாவது கைநிறைய பாய்ண்ட்டுகளை குவிக்க வேண்டுமே, இல்லையென்றால் நம்மை சீரியலை  விட்டே  தூக்கி விடுவார்களே  என்கிற  மிகுந்த  இக்கட்டான  சூழ்நிலையில்தான்  டைரக்டர்கள் அவரவர்  அசிஸ்டண்ட்டுகளுடன் என்ன  செய்யலாம் என  தலையை பிய்த்து கொள்வார்கள்.  அப்படி டிஸ்க்கஸ் பண்ணும்போதுதான் ………  அடிதடி, ஆள் கடத்தல்,  போலீஸ், கோர்ட்டு,  வில்லத்தனத்தில்  அதிபயங்கரம் காட்டுவது  போன்ற  காட்சிகள்  விஸ்வரூபம் எடுக்க  ஆரம்பித்து விடும்.  ஏன் இப்படி என்று கேட்டால், எல்லாம்   ஒரு டுவிஸ்ட்டுக்காகத்தான் என்று சொல்லி  நைசாக  ‘எஸ்கேப்’பாவதற்கு  பார்ப்பார்கள்.                


 கல்யாணம்   ஆகாதவள்!


 விஜய்  டிவி  என்றதுமே  சிவகார்த்திகேயன்,  சந்தானம்,  மா. கா. பா. ஆனந்த்,  ’யோகி’ பாபு  போன்றவர்களை எப்படி மறக்க முடியாதோ,  அதே மாதிரி  டிடி  என்கிற  திவ்யதர்ஷினியையும் மறக்க முடியாது. பேட்டி எடுக்கும் போது   இன்முகத்தோடு  நல்ல தோழமையுடன்  கமர்ஷியலாக பேசி நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை ‘கவர்’ பண்ணுவதில் அவர்  கில்லாடி! ஆனால், அப்படிப்பட்டவருக்கு பெர்சனல்  வாழ்க்கையில்   ஒரு கசப்பான சம்பவம் நடந்துள்ளது. அதுதான்  முறிந்துபோன அவருடைய  திருமணம். ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கு டிடி தன் கழுத்தை நீட்டினார்.  ஆனால், சொற்ப காலத்திலேயே  டைவர்சில்  முடிந்துவிட்டது.

      இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு அண்மையில் டிடி பதிலளித்தார்.  “நீங்கள் திருமணமானவரா,  ஆகாதவரா?’ என்ற ஒரு ரசிகரின் கேள்விக்கு “நான் திருமணம் ஆகாதவள்” என்று பதில் அளித்துள்ளார்.

கூப்பிட்ட  குரலுக்கு   ஓடோடி  போவேன்!


எங்கேயோ ( ஓடி  ஒளிந்து கொண்டு ) இருக்கும்  நித்யானந்தா  தனது பேச்சால் சொக்கு பொடி போட்டு  பலரையும் தன் வலையில்  வீழ்த்தியவர். அவருடைய பேச்சு தனக்கு பிடிக்கும் என்று  சொல்கிறார்  ‘பிக் பாஸ் ’  சீசன்  3 புகழ்  மீரா  மிதுன்.  ”அவர் கன்னி பெண்களை  மட்டுமே  தேர்வு செய்து ஆன்மிகத்தில் ஈடுபடுத்துகிறார்.  அத்தகைய பெண்களுக்குத்தான்  சக்தி அதிகம்.  அவரிடமிருந்து  எனக்கு  அழைப்பு வந்தால் நான் கண்டிப்பாக போவேன்” என்றும்  குறிப்பிடுகிறார்.

       ஏற்கனவே  ‘தென்னிந்திய  அழகி’ பட்டம் உட்பட பற்பல  சர்ச்சைகளில் சிக்கியவர்  இந்த  மீரா.  இப்போது லேட்டஸ்ட்டாக நித்தியானந்தா தொடர்பான அவருடைய  கருத்து  சர்ச்சையில்  சிக்கியுள்ளது.