எதிர்பார்த்தபடி இல்லேன்னா ஐ வில் குவிட்! ஷில்பா அதிரடி பேட்டி

பதிவு செய்த நாள் : 17 ஜூன் 2020

      “நான் நடிக்க வந்த காலத்திலே சேனல்களும் சீரியல்களும் குறைவா இருந்ததால, குறைவான ஆர்டிஸ்டுகள் இருந்தாங்க.  அதனால,  இந்த பீல்டுல அவங்களால ரொம்ப நாள் நீடிக்க முடிஞ்சுச்சு. ஆனா, இப்போ சீரியல்கள் ரொம்ப ரொம்ப அதிகமானதால,  ஒரே ஒரு சீரியல்ல மட்டும்  ஜெயிச்சிட்டு அதுக்கப்புறம் அவங்க காணாம போயிடுறாங்க.  அதுக்கு பிறகு வரக்கூடிய அந்த வீழ்ச்சியை அவங்களால தாங்க முடியறதில்லே!”  -    இப்படி இன்றைய ஆர்டிஸ்டுகளின் நிலைமையை  பற்றி பக்குவமாக எடுத்து சொல்கிறார், 24 ஆண்டுகளாக பீல்டில் இருந்து வரும்  ஷில்பா.


        ”சித்தி  2”வில்  ஒரு முக்கிய கேரக்டரில்  நடித்துக்கொண்டிருக்கிறார். அவர் சொன்னதிலிருந்து ………….

     “நான் ஸ்கூல் ஸ்டூடண்ட்டா இருக்கும்போது காம்பியரிங் பண்ண சான்ஸ் கேட்டு ஒரு சேனலுக்கு ஆடிஷனுக்காக போனேன்.  முதல் நாள்லயே என்னை செலக்ட் பண்ணி அடுத்த நாளே  ஷூட்டிங் வச்சிட்டாங்க.  அன்னைக்குல இருந்து இப்போ வரை 24 வருஷமா பீல்டுல டிராவல் பண்ணிக்கிட்டு இருக்கேன். அதிலே நிறைய வெற்றி – தோல்விகள், குழப்பங்கள் இருந்திருக்கு. சினிமாவா இல்லே டிவி சீரியலான்னு டிசைட் பண்ண வேண்டிய சூழ்நிலை வந்த போது சினிமாவை காட்டிலும் சீரியல்ல எனக்கு முக்கியமான கேரக்டர்கள் வந்ததால, சீரியலை செலக்ட் பண்ணேன். நடிக்க ஆரம்பிக்கும்போது பாசிட்டிவ் கேரக்டர்கள்லதான் நடிச்சுக்கிட்டிருந்தேன்.  ‘நிம்மதி’ சீரியல்ல முதன்முதலா வில்லியா நடிச்சேன். அந்த கேரக்டருக்காக இந்தி சீரியல்கள்ல இருந்தெல்லாம் ரெபரன்ஸ் எடுத்தேன். மேக் – அப்புல நிறைய விஷயங்களை இம்ப்ளிமெண்ட் பண்ணேன். அதிலே இருந்து பார்வையாளர்களும் என்னை வில்லியா ஏத்துக்கிட்டு என் நடிப்பை ரசிக்க ஆரம்பிச்சாங்க.

    கேரக்டர்கள்ல பாசிட்டிவ், நெகட்டிவ் இதெல்லாம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. என்னை பொறுத்தவரை,  சீரியல்ல என்னோட கேரக்டர்   முக்கியத்துவம் வாய்ந்ததா இருக்கணும். அதை சம்பந்தப்பட்ட சீரியல் டைரக்டர்கிட்ட ஆரம்பத்திலேயே  தெளிவா சொல்லிடுவேன்.  அதுக்கு அவங்க ஒத்துக்கிட்டு, ஆனா   நடிக்கும்போது என் கேரக்டர் நான் எதிர்பார்த்தபடி  முக்கியத்துவம் இல்லாம இருக்கிறதா தெரிஞ்சிச்சுன்னா, ஐ வில் குவிட். சீரியல்ல இருந்து விலகிடுவேன். பட், பாசிட்டிவ் கேரக்டர்ல நடிக்கிறதால என்ன பெனிபிட்டுன்னா, நம்மள எல்லாரும் வாழ்த்துவாங்க. ஆரம்ப காலத்திலே  ஒரு சமயம் என்னை ஒரு அம்மா தேவாலயத்திலே பார்த்துட்டு, ”நீ நல்லா இருக்கணும்மா. ஆண்டவர்கிட்ட உனக்காக நான் பிரே பண்றேன்மா!” அப்படீன்னு சொன்னாங்க. அவங்க எங்க குடும்பத்தை சேர்ந்தவங்களா இருப்பாங்களோன்னு முதல்ல நினைச்சேன். ஆனா, அவங்க என் ரசிகைன்னு பின்னாலதான் தெரிஞ்சிச்சு.  இதை எங்கப்பாகிட்ட சொன்ன போது “பாசிட்டிவ் கேரக்டர்கள்ல நடிச்சா எவ்வளவு வாழ்த்து வருது பார்த்தியா? இதுவே நீ நெகட்டிவ் கேரக்டர்கள்ல நடிச்சா, உன்னை எல்லாரும் சபிப்பாங்க!”ன்னு சொன்னாரு.

    ‘சித்தி 2’விலே ராதிகா மேடமுக்கு ஈக்குவலா நான் நடிக்கிறதா எல்லாரும் சொல்றாங்க. இந்த பெருமையெல்லாம் ராதிகா மேடமுக்குத்தான் போய்  சேரும். அவங்க நூறு சதவீதம் பெர்பார்ம் பண்றாங்க. அதிலே நாங்க 60 சதவீதம் பெர்பார்ம் பண்ணி  பேரை வாங்கி போய்க்கிட்டு இருக்கோம். என்னோட இத்தனை வருஷ பயணத்திலே முக்கால்வாசிக்கும் அதிகமா மேடத்தோடுதான்  டிராவல் பண்ணியிருக்கேன். ’சித்தி’  முதல் பாகத்தை தவிர மத்த எல்லா சீரியல்கள்லயும் என் கேரக்டர்களுக்கு நான்தான் டப்பிங் பேசியிருக்கேன்.   உன் கேரக்டருக்கு நீதான் டப்பிங்  பேசணும்னு ஆரம்பத்திலிருந்தே ராதிகா மேடம் என்கிட்ட வலியுறுத்தி சொல்லிக்கிட்டே  இருப்பாங்க.  எந்தவொரு ஆர்டிஸ்டுமே அவங்களுக்கு மொழி நல்லா தெரிஞ்சிச்சுன்னா, அவங்களேதான்  டப்பிங் பேசணும். ஆனா, பல பேர் அதை செய்றதில்லே. அதனால, ஒரு சீரியல்ல கேட்ட குரலே  இன்னொரு சீரியல்லயும் கேக்குது.  இப்படியே போச்சுன்னா, கேரக்டர்களுக்கு ’உயிர்’ இருக்காது. எல்லா கேரக்டர்களும் ஒரே குரல்லயே பேசும். இது ஆரோக்கியமான விஷயம் கிடையாது.

      நான் கல்யாணம் பண்ணிக்கலே. கல்யாணம்ங்கிறது முன்னே பெண்களுக்கு பாதுகாப்பா இருந்துச்சு.  ஆனா, இப்போ இல்லே. பாதியிலேயே விட்டுட்டு போயிடுது. தம்பதிக்குள்ளே ஒரு நம்பிக்கை இல்லே. ஒரு மோகத்திலே கல்யாணம் பண்ணிக்கிறாங்க. அதுக்கு பிறகு நம்பிக்கையும் சந்தோஷமும் இல்லாத வாழ்க்கையைத்தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.  வீட்ல  செலவழிக்கிற கொஞ்ச நேரத்திலேயும் தம்பதி ஒருத்தரோடு ஒருத்தர் சண்டைதான் போட்டுக்கிட்டு இருக்காங்க.  இதை பார்க்கிற அவங்களோட குழந்தைக்கு விரக்திதான் அதிகமாகுது. அதனால, நான் தனியா இருக்கிறதால  எனக்கு எந்த  எதிர்பார்ப்பும் இல்லே, மனமுடைஞ்சு போகிற நிலைமையும் இல்லே.

 என்னை பெத்தவங்க ரெண்டு பேருமே உயிரோடு  இல்லே. அவங்கதான் எனக்கு ரோல் மாடல். அப்பா ஒரு அயர்ன் மேன். அம்மா ஒரு குடும்ப தியாகி. எனக்கு ஒரே  ஒரு  அக்கா இருக்கா.    எனக்கு எல்லாமே அவதான்.  நான் எவ்வளவு கோபமா இருந்தாலும், அவ சகிச்சிக்குவா. எங்க ரெண்டு பேருக்கும் அப்பா – அம்மாதான்  பலம். அவங்களோட நினைவுகளோடுதான் நாங்க வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.”