பயோடெக்னாலஜி படிப்புக்கு புதிய வேலைகளை உருவாக்கும் கொரோனா!

பதிவு செய்த நாள் : 15 ஜூன் 2020

தற்போது இந்தியாவை ஆட்டி படைத்து வரும் கொரோனா பிரச்னையாக இருந்தாலும் சரி, பாலைவன வெட்டுக்கிளிகள் பிரச்னையாக இருந்தாலும் சரி, இரண்டு பிரச்னைக்கும் தீர்வு காண அதிகம் நம்புவது பயோ டெக்னாலஜியைத் தான்.  கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வகையில் தடுப்பூசி தயாரிப்பு பணியில் பயோடெக்னாலஜிஸ்ட்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என்று நம்புவோம். ஆனால் கொரோனா தடுப்பூசி, கொரோனா  மருந்துகள் என பயோடெக்னாலஜியின் எல்லைகள்  விரிந்து விடும். அதற்கான கல்வி, தடுப்பூசி, மருந்து உறபத்தி, மருத்துவ சிகிச்சைக கருவிகள் உற்பத்தி என புதிய தொடுவான எல்லைகளாக விரிவடைந்து வளரும்.

இந்தியாவில் மாறிவரும் வேளாண்மை, உணவு உற்பத்தி, மருத்துவம், பொதுச் சுகாதாரம் என முதன்மையாகப் பிரிவுகளில் ஆராய்ச்சியையும், மேம்படுத்தலையும் முன்னெடுக்கும் மிக முக்கிய துறையாக உள்ளது பயோ டெக்னாலஜி.

பொதுவாக, முதலில் பயோடெக்னாலஜி படித்தால் வேலை கிடைக்குமா என்ற கேள்வி உண்டு.  இரண்டாவது, பி.டெக் பயோடெக்னாலஜி சேரலாமா அல்லது பி.எஸ்சி பயோ டெக்னாலஜி சேரலாமா என்ற கேள்வியும் உண்டு. இந்த இரண்டு கேள்விகளுக்கு விரிவாக விளக்குகிறது இந்த கட்டுரை. 

 பிளஸ் டூ வில் பயலாஜி  படிப்பவர்கள் மருத்துவம் படிக்க ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். ஆனால், எல்லோரும் மருத்துவம் படிக்க முடிவதில்லை. மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று கவலைப்பட வேண்டியதில்லை. மருத்துவத்துறையில் மிக முக்கியமான பிரிவுகளில் ஒன்றாக உள்ள பயோடெக்னாலஜி படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.

பொதுவாக, பயோடெக்னாலஜி படிப்பில் மருத்துவம் மற்றும் உடல்நலம் சார்ந்த   அறிவையும்,  உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி முன்னேற்றங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.  உயிரினங்களில் நுண்ணுயிர்கள் பரவல் குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவதையும், அதற்கான மருத்துவத்தையும் ஆராய்ச்சி நோக்கோடு அணுகுகிறது பயோடெக்னாலஜி.   ஆராய்ச்சி மையங்களிலும், சோதனை மையங்களிலும் பணியாற்றும் ஆர்வமும், நுணுக்கமாகப் பார்க்கும் திறன் பெற்றவர்களாக பயோடெக்னாலஜிஸ்டுகள் இருக்க வேண்டும்.

பி.டெக் பயோடெக்னாலஜி படிப்பில் சேரலாமா அல்லது பி.எஸ்சி பயோ டெக்னாலஜி சேரலாமா?

பி.டெக் பயோ டெக்னாலஜியில் சேர்வதா அல்லது பி.எஸ்சி பயோ டெக்னாலஜி சேர்வதா என்ற குழப்பம் இருந்து வரும். தொழில்நுட்ப சார்ந்த விஷயங்கள் பி.டெக் பயோடெக்னாலஜியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அறிவியல் ரீதியில் பி.எஸ்சி பயோ டெக்னாலஜி பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உயர்கல்விக்காக பி.எஸ்சி முடித்து எம்.எஸ்சி சேர வேண்டும். பி.டெக் முடிப்பவர்கள் எம்.எஸ் சேர வேண்டும்.  எம்.எஸ்சி முடித்து மீண்டும் ஆராய்ச்சி படிப்பில் சேர வேண்டும்.  பி.டெக் சேர்பவர்கள் கொஞ்சம் கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.  உங்களுடைய பொருளாதாரமும்,  உங்களுடைய குறிக்கோளையும் வைத்தே எதைத் தேர்ந்தெடுப்பது என்பதை முடிவு செய்யுங்கள்.

பயோ டெக்னாலஜி படிக்கும்போது எந்த பிரிவில் நிபுணத்துவம் பெறுவது என்பதை முடிவு செய்ய வேண்டும்.  இவ்வாறு எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே வேலை வாய்ப்பைப் பெற முடியும்.

பயோ டெக்னாலஜி படிப்பவர்கள், பயோமெடிக்கல் பிரிவில் நிபுணத்துவம் பெறலாம். இவர்கள் மருத்துவர்களுடனும், ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து மருத்துவத் துறைக்குத் தேவையான கருவிகள் வடிவமைக்கலாம். மருத்துவத்துறை எதிர்கொண்டுள்ள பிரச்னையை தொழில்நுட்ப தீர்வை கண்டுபிடிக்கலாம். உணவுப்பொருள் தொழில்நுட்பமும் வளர்ந்து வரும் பிரிவுகளில் முதன்மையாக உள்ளது. உணவு தரம், பாதுகாப்பு,  தேவையான சத்துகளைக் கூட்டுதல் எனப் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உணவுப்பொருளில் என்னென்ன சத்துகள் உள்ளன,  ஒவ்வொரு உணவுப்பொருளையும் யார் அதிகமாக அல்லது குறைவாக எடுத்துக்கொள்ளலாம் என்பதையும், இதன் மூலம் ஆரோக்கியம் மேம்படுத்துவதும், இதற்கான ஆராய்ச்சிகளும் முன்னேற்றம் கண்டு வருகின்றன. தற்போது குற்றங்களில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குற்றங்கள் நடந்ததை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் பயோ டெக்னாலஜி பயன்படுகிறது.

 மனித உடலும், இதர உயிர்களிலும் நுண்ணுயிர்கள் குறித்தும்,  கிருமிகள் பரவலுக்கான நுண்ணுயிர் வளர்ச்சி குறித்தும், இதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் நுணுக்கமான ஆராய்ச்சி மூலம் அணுகும் மைக்ரோ பயாலஜியும் பயோடெக்னாலஜியின் பெரும்பகுதியாகவே உள்ளது.  தாவர வளர்ச்சி, திசு  அமைப்புகள், அதற்குத் தேவையான நுண்ணூட்டங்கள், நோய்கள் அதற்கான தீர்வுகள் என பயோ கெமிஸ்டரியும் பயோ டெக்னாலஜியின் முக்கிய பிரிவாக உள்ளது.

பயோ டெக்னாலஜி படித்தவர்களுக்கு மருத்துவம், வேளாண்மை, கடல் வளம்,  சுற்றுச்சூழல், வேதியியல் துறை, பூச்சி மற்றும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்துதல் போன்ற துறைகளில் வேலை வாய்ப்பு உள்ளது. மேற்கண்ட துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் ஆராய்ச்சி  மையங்களில் வேலை வாய்ப்பைப் பெறலாம். 

பி.டெக் படித்தவர்கள் மருந்து பொருள் உற்பத்தி நிறுவனங்கள், ஹெல்த்கேர், உணவுப்பொருள் தயாரிப்பு நிறுவனம், ரசாயன நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் எனப்  பல இடங்களில் பயோடெக்னாலஜி படித்தவர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான தேவையும் அதிகரித்துள்ளது. மருத்துவக் கல்வியில் பயோடெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்பு உள்ளது.

பயோ டெக்னாலஜி படித்தவர்கள் முதுநிலை பட்டப்படிப்பையும், ஆராய்ச்சி படிப்பையும் மேற்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.   உயர்படிப்பில் சேர்ந்து குறிப்பிட்ட பிரிவில் நிபுணத்துவம் பெறும்போது, அத்துறையில் உயர் சம்பளம் வாங்கும் வேலை வாய்ப்பை பெறலாம். வெளிநாட்டில் ஆராய்ச்சி நிறுவனங்களிலும், மையங்களிலும்  சேரலாம். GATE தேர்வெழுதி உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

தற்போது, வளர்ந்து வரும் இந்தியாவில் பயோ டெக்னாலஜி துறையும் அதிவேகமாக வளர்ச்சி உள்ள துறையாகவே அறியப்படுகிறது. மேலும், கொரோனா பிரச்னை பயோ டெக்னாலஜிஸ்ட் தேவைகளை உணர வைத்துள்ளது. பயாலஜியையும், டெக்னாலஜியையும் விரும்புகிறவர்களுக்கு நல்ல சாய்ஸ் பயோ டெக்னாலஜி படிப்பு.

மாணவர்கள் எதிர்கால படிப்புகள் குறித்து உங்களுடைய சந்தேகங்களையும் கேள்விகளையும்  dmrnglnews@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்குக் கேள்விகளுக்கு நிபுணர்களின் ஆலோசனையோடு விளக்கமளிக்கத் தயாராக உள்ளோம்.

- ஞா. சக்திவேல் முருகன்


கட்டுரையாளர்: - ஞா. சக்திவேல் முருகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation