கொரானாவை வெல்வோம்!அச்சம் வேண்டாம்!! - சுதாங்கன்

பதிவு செய்த நாள் : 10 ஜூன் 2020

இந்தியாவிலும், தமிழகத்திலும் குறிப்பாக சென்னையிலும் கொரானா நோய்தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் கூடிக்கொண்டிருக்கிறது.  இந்த எண்ணிக்கையை பார்த்து மக்கள் பீதியடைந்து கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளங்களும், ஊடகங்களும் இந்த எண்ணிக்கைகளை பெரிதாக்கிக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

ஒரு புறம் மக்கள் எச்சரிக்கையாக இருந்தாலும்,மறுபுறம் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை காசிமேடு பகுதி மீன் மார்க்கெட்டிலும், மும்பை மரைன் டிரைவ் பகுதியில் காலை நடைபயிற்சிக்கு போகிற கூட்டங்களை பார்க்கும்போது, படித்தவர்கள், படிக்காத பாமரர்கள் மத்தியில் ஒரு வித அலட்சியம் தெரியத்தான் செய்கிறது.

கொரானா பாதிப்பு எண்ணிக்கை கூடுவதனால் மக்கள் அஞ்ச வேண்டுமா?

எண்ணிக்கை அதிகமானாலும் நோயின் தீவிரம் இன்னும் குறைந்த அளவில்தான் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இப்போது கூட இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் யார் ? சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பும் ஒன்றாய் உள்ளவர்கள். அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமல் இருப்பவர்கள். உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பவர்களும்தான் கோவிட் நோயின் குறிகுணங்களை பெறுகிறார்கள்.85% பேர் அறிகுறிகள் இல்லாமலே நோய் தொற்றில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழக முதலமைச்சர் ஒரு அறிக்கை விடுத்தார். ` உலகிலேயே இந்த நோய் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கிற மாநிலம் தமிழகம் தான்!’ ஆதாரத்தோடு அவர் சொல்லியிருக்கிறார்.

ஆனால் நாள்தோறும் உயர்ந்து வரும் எண்ணிக்கைகளைப் பார்க்கும்போது அது நமக்கு அளிக்கப்படும் ஒரு எச்சரிக்கைதன். கொஞ்சம் கவலையளிக்கக்கூடியது என்பதில் சந்தேகமில்லை.

Asymptomatic  எனும் தொற்றுப்பெற்றும் குறிகுணங்கள் இல்லாதவரும், அவர்களது ஆக்சிஜன் அதாவது பிராணவாயு saturation  சரியாக உள்ளதா? என்பதை pulseoxymeter  இல் சோதித்து கொள்வது நல்லது. Asymptomatic positives இல் சிலருக்கு திடீர் பிராணவாயு அடர்வுனிலை குறைபாடு ஏற்படும். நமக்கு தொற்று இருக்கிறதா? இல்லையா? என தெரியாமல் நலமுடன் இருப்போர் திடீர் நோய்ச்சிக்கலுக்கு ஆளாகாமல் இருக்க, உங்கள் குடும்ப டாக்டரிடம் அதன் அளவை பார்த்து 95-98% இருக்கின்றதா? என பார்த்துக் கொள்வதும் ஒருவகைக்கு நல்லதுதான்.

தொற்றுப் பெற்றோருக்கு அந்த அளவு கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டும். அது திடீர் தீவிர நிலை அடைவதை தவிர்க்க உதவிடும்.

நம் நாட்டில் 65 வயதுக்கு மேலுள்ள வயதினர் மிக குறைந்த விழுக்காடு என்பது ஆறுதலளிக்கும் சேதி. அதே சமயம், நம்  இளைஞர்களிடம் நோய் எதிர்ப்பாற்றல் குறைந்து வருகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். நாற்பது வயதை எட்டுவதற்கு முன்பே   சர்க்கரை நோயும் இரத்தக் கொதிப்பு பாதிப்பும் உடைய்வர்கள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். இந்த இரண்டு நோய்களும் நமது வாழ்க்கை முறையினால் நமக்கு ஏற்படும் நோய்கள்.   பலர் இதை துல்லியமாய் தெரிந்து கொள்ளவில்லை.  தெரிந்தும் அலட்சியம் காட்டுபவர்களும் இருக்கிறார்கள் என்பது இந்த சூழலில்  கொஞ்சம் கவலைதரக் கூடிய விஷயம் தான். .

அதே சமயம் மார்ச் மாதத்தில் மக்களுக்கிருந்த தொற்று நோய் பற்றிய எச்சரிக்கை உணர்வு குறைந்து வருகிறது. எரிச்சல், அலட்சியம், ` என்னை என்ன செய்துவிடும்’ என்கிற எண்ணமும் சரியானதல்ல!

இந்த மனநிலை பெருகிவரும்போது  இப்போது நாடு முழுவதும் ஊரடங்கு சற்று தளர்த்தப்பட்டிருக்கிறது. மக்களின் வெளிநடமாட்டம் அதிகரிக்கும். இந்தச் நிலையில் இந்த நோய் முதியோர்களையும் சர்க்கரை முதலான துணை நோயினரையும் பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். 

இதற்கான முதல் உதாரணம். கோயம்பேட்டில் காட்டிய அலட்சியம். இப்போது எல்லா ஊர் சந்தைகளை பார்க்கும்போதும் மனம் பதைக்கிறது. தனிமனித இடைவெளி, முகக்கவசம்., கைகளை சோப்பு நீரில் கழுவுதல் மட்டுமே நம்மை இந்த வைரசில்  இருந்து காப்பாற்றப்போகும் ஒற்றைவழி.! அதைத்தான் உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. .

கபசுரக் குடிநீர்! இதனால் ஏற்படும் பலன்களை  மத்திய சித்த மருத்துவ கவுன்சில், தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் தமிழக அரசின் சித்த மருத்துவர்களால்  அறிவியல் வழியிலும் ஆராயப்படுகின்றது. ஆரம்ப கட்ட பல ஆய்வுகள் வரவேற்கத்தக்க முடிவுகளைத் தந்துள்ளன. தமிழக அரசின் இந்திய மருத்துவத்துறை மருத்துவர்கள் தமிழகமெங்கும் கபசுரக் குடிநீரை பரிந்துரைத்து விநயோகிக்கின்றனர்.

கபசுரக் குடிநீர், இஞ்சி, எலுமிச்சை சாறு, சுக்கு மல்லிக் காபி, ஆடாதோடை அதிமதுரம் கசாயம், என பல மரபு சித்த மருந்துகளைக் கொண்டது.  அடிப்படை நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டவும்,  வைரசுக்கு எதிராக போராட உடலுக்கு வலு சேர்க்கவும் உதவிடும். இதை கண்டிப்பாக பருக வேண்டும் என்று சிபாரிசு செய்கிறார்கள்.

"கூட்டம் சேர்த்தல்தான்"  மிக மிக முக்கியமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இனி வரும் நாட்களிலும் பணிக்குச் செல்லும் போதும் தனிமனித இடைவெளி, முக கவசம் கைகளை கழுவுதலை மறந்துவிட வேண்டாம்! ஏதோ ஒருவகையில் இப்போதுவரை இயற்கை துணை நிற்கின்றது.

அறிவியலின் உண்மைகளையும் உதாசீனப்படுத்தாமல் துணைகொண்டு பின்பற்றினால்  நிச்சயம் கரோனாவைக் கடந்து செல்லலாம்!

எச்சரிக்கையாக இருந்தால், பீதியில் குறுகாமல், இந்த நோயை எதிர்த்து நின்று வெல்ல முடியும்.

இதைத்தான் இப்போது மருத்துவர்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.

இப்போது உலக சுகாதார நிறுவனம் இந்தியாவின் நிலை குறித்து கொடுத்திருக்கும் அறிக்கை மிகுந்த ஆறுதலை தருவதாகவே உள்ளது.

இந்தியாவில் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களே அதிகம் இருக்கிறார்கள். அவர்களால் இந்த தொற்று பரவுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. இப்போது இந்தியா கவனம் செலுத்தவேண்டியது அந்த நோய்த் தொற்று அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிந்து, அவர்களை தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிப்பதில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறது.

எண்ணிக்கை கூடினாலும் இந்தியாவில் பெரும்பாலும் நோய் தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களே அதிகம் இருக்கிறார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.


கட்டுரையாளர்: சுதாங்கன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation