ஞாபக மறதியை தடுக்க உதவும் 8 எளிய வழிகள்

பதிவு செய்த நாள் : 31 மே 2020 23:02

மனிதர்களுக்கு ஞாபக  மறதி  என்பது மிகவும் பழக்கப்பட்ட ஒரு விஷயம். வயதான காலத்தில் மட்டுமல்லாமல் சிறு வயதிலும் சிறு சிறு விஷயங்கள் அடிக்கடி மறந்து போவது  வாடிக்கை. சில சமயங்களில் இந்த மறதி நமக்கு மிகப் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

ஞாபக மறதியை தவிர்ப்பதும் நமது மூளையின் செயல்திறனை நன்றாக வைத்திருப்பதும் மிகப்பெரிய விஷயம் ஒன்றுமில்லை. நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சி, வாழ்க்கைமுறை ஆகியவற்றை சீராக வைத்திருந்தாலே நமது மூளையின் செயல்திறனில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

ஆனால் இன்றைய நவீன காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கைமுறை தாறுமாறாக மாறிப் போயுள்ளது. இதனால் சிறுவயதிலேயே மூளையின் செயல் திறன் குறைந்து ஞாபகமறதி பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படும் சூழ்நிலை வந்து விடுகிறது.

முக்கியமாக அதிக வேலைப்பளு இருப்பவர்கள் சதா எதையாவது யோசித்து  கொண்டே இருப்பவர்களுக்கு  ஞாபகமறதி அதிகரிக்கும்.

எனவே மறதியை தவிர்க்கவும் நம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் 8 எளிய வழிகளை பின்பற்றினாலே போதும். அவை என்னவென்று இனி பார்க்கலாம்.

யோசிக்கும் போது கண்களை மூடிக்கொள்ளுங்கள் :

நாம் எதையாவது ஞாபகப் படுத்திக் கொள்வதற்காக யோசனை செய்யும் போது நம் கண்களை மூடிக் கொண்டால் நமது மூளையின் செயல்திறன் மேலும் அதிகரிக்கும்.

இது தொடர்பாக கனடாவில் உள்ள  சரே பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்களை மூடிக்கொண்டு யோசிப்பவர்களின் ஞாபகத்திறன் 30 சதவீதம் அதிகமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் நம் கண்களை திறந்து யோசிக்கும் போது நமக்கு கவன சிதறல்கள் அதிகமாக இருப்பதே.


தனக்குத் தானே பேசிக் கொள்ளுதல் :


இது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.  சிறுவயதில் நாம் பாடங்களை மனப்பாடம் செய்ய  நமக்கு கேட்கும் அளவிற்கு சத்தமாக மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொள்வது வழக்கம்.

இந்த பழைய நடைமுறை நமது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஒரே நேரத்தில் பேசுவது மற்றும் கேட்பது ஆகிய இரு செயல்களை செய்யும்போது நமது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி ஒரு விஷயத்தை நமக்கு கேட்கும் வகையில் நமக்கு நாமே சொல்லிக் கொள்வது நமது ஞாபகத் திறனை அதிகரிக்கும்.

ரத்த அழுத்தம் :


அதிக ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ஞாபக சக்தி மற்றும் நினைவாற்றல் குறைவாக இருக்கும் என அலபாமா பல்கலைகழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பவர்களுக்கு மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறைவதால் இந்த பாதிப்பு ஏற்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

பாட்டு பாடுங்கள் :


நாம் வாய்விட்டு பாடும் போது நமது மூளையின்  வலது பக்கத்தின் செயல்பாடுகள் அதிகரிக்கின்றன. இதனால் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டறியும் திறன் அதிகரிக்கிறது.

மேலும் ஒரு புதிய  பாடலின் வரிகளை நாம் கற்றுக் கொண்டு பாடும் போது நமது மூளை, நினைவாற்றலை அதிகரிக்க உதவும் அசிட்டைல்கோலின் (acetylcholine) என்ற ரசாயனத்தை அதிகளவில்  சுரக்கிறது.

இடது கையை பயன்படுத்துங்கள் :

நாம் அதிகம் பயன்படுத்தாத நம் இடது கையை அதிகம் பயன்படுத்த துவங்கும் போது நமது நினைவாற்றல் அதிகரிக்கும். ஏனென்றால் நாம் நமது வலது கையை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்துவதால் நம் மூளையின் ஒரு பகுதி மட்டுமே அதிகமாக வேலை செய்கிறது.

எனவே கணினியின் மவுசை செயல்படுத்துவது, சுத்தம் செய்வது, பல் விளக்குவது போன்ற சிறுசிறு வேலைகளை செய்ய நமது இடது கையை பயன்படுத்த வேண்டும்.

இடக்கை பழக்கம் உள்ளவர்கள் தங்கள் வலது கையை பயன்படுத்த பழக வேண்டும்.

தியானம், யோகா பழகுங்கள் :


எட்டு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு 15-30 நிமிடங்கள் தியானம் செய்பவர்களுக்கு மூளையில் உள்ள நரம்புகளில் இடையே அதிக இணைப்புகள் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நினைவாற்றலுக்குப் பொறுப்பான மூளையின் ஒரு பகுதியான  ஹிப்போகாம்பஸ் சுருங்குவதும் வெகுவாக குறைகிறது. இதனால்  டிமென்ஷியா போன்ற நினைவாற்றலை பாதிக்கும் நோய்கள் வருவதற்கான சாத்தியக் கூறுகளும் குறைவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் யோகா பயிற்சிகள் செய்வதன்மூலம் கண்களால் பார்க்கும் காட்சி சார்ந்த  நினைவுதிறன் அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தினசரி யோகா செய்பவர்களால் இடங்களை நன்றாக நினைவுப்படுத்தி கூற முடியும்.

எழுத பழகுங்கள் :


 இன்றைய காலகட்டத்தில் கணினி மற்றும் மொபைல் போன்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதால் மக்களிடையே எழுதும் பழக்கம் மிகவும் குறைந்து விட்டது.

ஆனால் எழுதும் பழக்கம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் அதிக நினைவாற்றல் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனவே நல்ல நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள கணினி மற்றும் மொபைல் போனை பயன்படுத்தாமல் பென்சில் அல்லது பேனா மூலம்  மக்கள் எழுதி பழக வேண்டும்.

மூளைக்கு சவால் கொடுங்கள் :


உங்கள் வழக்கமான பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை  அவ்வப்போது மாற்ற வேண்டும். ஒவ்வொரு நாளும் சாப்பிடும் போது வேறு வேறு இடங்களில் உட்காருவது, டிவியை வேறு நிலை அல்லது கோணத்தில் பார்ப்பது, வேறு வேறு பாதைகளில் கடைகளுக்கு செல்வது போன்று ஏதாவது புதிய விஷயங்களை செய்து மூளைக்கு சவால்களை கொடுங்கள்.

மேலே கூறிய எட்டு வழிகளை தவிர ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவது, நன்றாக உறங்குவது, தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வது, வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்வது போன்றவற்றையும் செய்தால் தான் நமது நினைவாற்றல் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.

உதாரணமாக நமது மூளை நன்றாக செயல்பட உறக்கம் மிகவும் அவசியம். ஒருவர் குறைந்தபட்சம் 6 முதல் 8 மணி நேரம் நன்றாக  உறங்கினால் அவரது மூளையின் செயல்திறன் நன்றாக இருக்கும்.

மேலும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்பவர்கள்  பின்பு  ஒரு குட்டித் தூக்கம் போட்டால் மூளையின் செயல் திறன் சிறப்பாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேப்போல் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் (Minerals) நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதும் நமது மூளையின் செயல்பாடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.