10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலையில் வெளியாகும் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தகவல்

பதிவு செய்த நாள் : 30 மே 2020 14:49

கோபி, 

10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என்றும், பள்ளிகள் இப்போது திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கோபி கிளை மற்றும் இணைப்பு சங்கங்கள் மூலம் சிறுவணிகர்களுக்கு சிறு வணிகக்கடன் வழங்கும் நிகழ்ச்சி, கோபியில் நடைபெற்றது. 

இந்த விழாவிற்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு, 146 பேருக்கு .35 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கடன் உதவிகளை வழங்கினார்கள். 

இதைத்தொடர்ந்து, கொரோனோ பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு சான்றிதழ்களையும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள  336 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலின் தரத்தை அளவீடும் கருவியை ரூ. 4 கோடியே 20 லட்சம் மதிப்பில் கூட்டுறவு சங்கங்களுக்கு அமைச்சர்கள் வழங்கினார்கள்.

தொடர்ந்து கோபியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்று வரும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியை அமைச்சர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனோ தடுப்பில் முதல்அமைச்சரின் பணி அனைவராலும் பாராட்டும் வகையில் உள்ளது. தற்போது மாணவர்களுக்கு ஆன் லைன் மூலம் கல்வி கற்று கொடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளை மீண்டும் திறக்க  இப்போது வாய்ப்பு இல்லை. கொரோனோ தொற்று குறைந்த பின்னர், ஆய்வுக் குழு ஆய்வு செய்து, அதன் பின்னர் பள்ளி திறப்பது குறித்து முதல் அமைச்சர் அறிவிப்பார்.

வழக்கமாக பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படும். இப்போது பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், பாடத்திட்டதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் கல்வியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் ஆசிரியர்கள், மாணவர்களிடம் கருத்துக்களை கேட்டு அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்வார்கள். அதனை ஆய்வு செய்து, பாடத்திட்டத்தை எவ்வாறு கற்பிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் ஆவின் தலைவர் காளியப்பன், முன்னாள் சிட்கோ வாரியத்தலைவர் சிந்துரவிச்சந்திரன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் எஸ்.சுப்பிரமணியன், இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன், முதன்மை வருவாய் அதிகாரி அழகிரி, கோபி சரக துணைப்பதிவாளர் பி.கந்தராஜா, பொதுமேலாளர்  ஆர்.ரவிச்சந்திரன் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள், செயலாளர்கள், கோபி ஒன்றியக்குழு தலைவர் மவுதீஸ்வரன், முன்னாள் நகராட்சி தலைவர் கந்தவேல்முருகன், கூட்டுறவு சங்க தலைவர் காளியப்பன், பிரினியோ கணேஷ் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர்.ஜான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோபியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறுவணிகர்களுக்கு வணிக கடன்களை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினர். அருகில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேஷ் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் ஆகியோர் உள்ளனர்.