நாசாவுக்கு செல்ல ஏதுவாக மாணவி அபிநயாவுக்கு ரூ. 2 லட்சம்: முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார்

பதிவு செய்த நாள் : 29 மே 2020 12:43

சென்னை,

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி அபிநயா,  அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு  செல்ல ஏதுவாக, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று வழங்கினார்.

நாமக்கல் அருகே கருப்பட்டிபாளையத்தைச் சேர்ந்த வெங்கடாச்சலம் - சசிகலா தம்பதியின் இரண்டாவது மகள் அபிநயா. இவர் நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் அறிவிக்கப்பட்ட ஆன்லைன் தேர்வில் பங்கேற்று சிறப்பு இடம் பிடித்ததையடுத்து நாசாவுக்கு வருமாறு அபிநயாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. 

ஆனால் நாசாவுக்கு செல்ல மாணவி அபிநயாவுக்கு நிதியுதவி தேவைப்பட்டது.

 சென்னை, தலைமை செயலகத்தில் இன்று (மே 29) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவி அபிநயாவுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்

"இந்திய அளவில் இணையம் வாயிலாக 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்காக நடைபெற்ற அறிவியல் தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்ற நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி அபிநயா, அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையத்திற்கு செல்லவும், சர்வதேச விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்க ஏதுவாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை உதவித் தொகையாக முதலமைச்சர் அபிநயாவுக்கு வழங்கினார்" என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுமேம்பாட்டுத் துறை அமைச்சர்  செங்கோட்டையன், மின்சாரம்மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  தங்கமணி, தலைமைச்செயலாளர்  சண்முகம், , பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.