கூட்டத்தை கட்டுப்படுத்த மாதவரம் தற்காலிக பழச் சந்தையை இரண்டாக பிரிக்க முடிவு

பதிவு செய்த நாள் : 28 மே 2020 16:59

சென்னை,

மாதவரத்தில் உள்ள தற்காலிக பழச் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், சமூக விலகல் கடைப்பிடிக்காமல் மக்கள் அலட்சியமாக செயல்படுவதாலும் சந்தையை இரண்டாக பிரிக்க, சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சிஎம்டிஏ) முடிவு செய்துள்ளது.

கோயம்பேடு காய்கறி, கனி, பூச் சந்தையில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்ததால் கடந்த மாதம் மூடப்பட்டது. அதன் பின்னர், மே 1 முதல் சுமார் 230 கடைகள் மாதவரம் மொஃபுசில் பஸ் டெர்மினஸில் (எம்.எம்.பி.டி)  செயல்பட்டு வருகிறது.

மாதவரம் தற்காலிக பழ சந்தைக்கு தினமும் சராசரியாக 3,000 முதல் 3,500 பேர் வருகை தருகின்றனர். சந்தையில் 250 லாரிகள் பழங்களை ஏற்றி வருகின்றன. ஒவ்வொன்றும் ஒரு நாளைக்கு எட்டு முதல் 10 டன் பழங்களை எடுத்து வருகின்றன.

மே முதல் வாரத்தில் சந்தையில் குறைவான மக்கள் வந்த போதிலும், நூற்றுக்கணக்கான சிறு வணிகர்கள் சந்தைக்கு வரத் தொடங்கியதால், மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது சமூக இடைவெளியை பின்பற்றுவதில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியது. மேலும் பலர்  முகக் கவசங்கள் அணியாமல் வருகிறார்கள். வர்த்தகர்கள் பாதைகளை ஆக்கிரமித்து, நெரிசலை அதிகரிக்கிறார்கள்.

எனவே மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த மாதவரம் மொஃபுசில் பஸ் டெர்மினஸில் (எம்.எம்.பி.டி) இயங்கும் பாதி கடைகள் டெர்மினஸின் மேல் தளத்தில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்திற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தை பராமரிக்கும் சி.எம்.டி.ஏ, தற்காலிக பழ சந்தையின் பராமரிப்பிற்கும் பொறுப்பாகும். "நாங்கள் தற்போதுள்ள 50 சதவீத கடைகளை மேல் தளத்தில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு மாற்றுவோம். இதன் மூலம் பொதுமக்களின் நடமாட்டத்திற்கு போதுமான இடம் இருக்கும். முதல் தளத்தில் கடைகளை அமைப்பதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன ” என்று ஒரு அதிகாரி செய்தியாளரிடம் கூறினார்.