பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி துவங்கியது, மையங்கள் 202 ஆக அதிகரிப்பு

பதிவு செய்த நாள் : 27 மே 2020 10:31

சென்னை

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி, சென்னையைத் தவிர்த்து 202 மையங்களில் உள்ள 5,373 அறைகளில் வைத்து இன்று முதல் நடைபெறுகிறது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 27ஆம் தேதி முதல் நடைபெறும் என அரசு அறிவித்தது. அரசு தேர்வுத் துறையின் மூலம் வழக்கமாக 67 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும். ஆனால் தற்போது  கொரோனா நோய்க் கிருமித் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் முதுகலை ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஒரு வகுப்பறையில் ஒரு முதன்மை தேர்வாளர், ஒரு கூர்ந்தாய்வாளர், ஆறு உதவி தேர்வாளர்கள் என எட்டு பேர் மட்டுமே அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. இதற்காக இந்தாண்டு 202 பள்ளிகளில் விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் நலனை கருத்திற்கொண்டு இந்த ஆண்டு சென்னை மாவட்டத்தில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்த மேசை, நாற்காலிகள் சுத்தம் செய்யப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் மையத்திற்கு வரும் ஆசிரியர்கள் கை கழுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவர்களுக்கு கிருமி நாசினி கைகளில் தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாளை முதல்நாளில் 5,373 முதன்மை விடைத்தாள் தேர்வர்களும், 5,373 கூர்ந்தாய்வு அலுவலர்களும் பணியில் ஈடுபடவுள்ளனர். அதனைத் தொடர்ந்து 33 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 28ஆம் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு வழங்குவதற்காக 1 லட்சத்து முப்பதாயிரம் முகக்கவசங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கு முதுகலை ஆசிரியர்கள் வந்து செல்வதற்கு தேவையான பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அருகிலுள்ள சுகாதாரம் மையம் அல்லது தனியார் மருத்துவமனையின் தொடர்பு எண்ணும் தயார் நிலையில் முகாம் அலுவலர்களால் வைக்கப்பட்டுள்ளது.