தமிழ்நாடு அரசியல் தலைவர்களின் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்கள்

பதிவு செய்த நாள் : 24 மே 2020 10:41

சென்னை

இஸ்லாம் சமுதாயத்திற்கு ரமலான் நோன்பு திருநாள் நாளை (25-5-2020) கொண்டாடப்படவுள்ளது.

ரம்ஜான் திருநாளையொட்டி, இஸ்லாமிய பொதுமக்கள் அனைவருக்கும் இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்களை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் தமிழ்நாடு அரசியல் கட்சிதலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மு.க. ஸ்டாலின்,  ராமதாஸ், ஜி.கே. வாசன், டிடிவி தினகரன், வேல்முருகன், ஜகிருத்தீன் அஹமது ஆகியோர் தங்கள் இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரம்ஜான் வாழ்த்து

ஈகைத் திருநாள் புனிதம் மற்றும் உன்னதமான கொள்கைகளை நமது வாழ்கையில் ஏற்படுத்திடவும், அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் எனவும் வாழ்த்துவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.


முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் ரம்ஜான் வாழ்த்து

 ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை   தெரிவித்துக் கொள்கிறேன்.

 இறை அருளைப் பெறுவதற்காக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, எல்லோரிடத்தும் அன்பு பாராட்டி, ஏழை மக்களுக்கு உணவளித்து, வாழ்வில் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழ வேண்டும் என்று  இறைவனை தொழுது, ரம்ஜான் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடி மகிழ்வார்கள்.

 இந்த புனித ரம்ஜான் பெருநாளில், உலகில் அமைதி நிலவட்டும், அன்பு தழைக்கட்டும், மகிழ்ச்சி பெருகட்டும் என்று வாழ்த்தி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது  உளமார்ந்த  ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


ஓ. பன்னீர் செல்வம் ரம்ஜான் வாழ்த்து

தமிழ்நாடு துணை முதலமைச்சர்

 ஈகைத் திருநாளாம் ரமலான் பெருநாளை உவகையுடன் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது உளம்கனிந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகள்! சமூகநலன் கருதி, இவ்வாண்டு வீட்டிலேயே இறைவழிபாட்டை மேற்கொள்ளும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி


மு.க.ஸ்டாலின்  ரம்ஜான் வாழ்த்து

திமுக தலைவர்

சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும் - நல்வாழ்வும் மேலும் உயர்ந்து,  சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், திமுக  சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார். 


ராமதாஸ் ரம்ஜான் வாழ்த்து

பாமக நிறுவனர் 

திருக்குரான் வழங்கப்பட்ட மாதத்தின் நிறைவாக இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மற்ற அனைத்து மதங்களையும் போலவே இஸ்லாமும் நன்மைகளை மட்டுமே போதிக்கிறது; அமைதியையும், ஈகையையும் வலியுறுத்துகிறது. இவை தான் உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் ஏற்படுத்தும். இதை  உணர்ந்து மக்களிடையே நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் பாடுபட உறுதியேற்றுக் கொள்வோம்.

 

டிடிவி தினகரன் ரம்ஜான் வாழ்த்து

அமமுக பொதுச்செயலாளர்

பெருநாள் என்ற மகிழ்வோடு ஈகைத்திருநாளான ரமலானைக்   கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இறைதூதர் நபிகள் நாயகம் போதித்த  மனித நேயம், ஈகை, கோபம் தவிர்த்தல் உள்ளிட்ட உயர்பண்புகளின் வழியாக தலைசிறந்த மனித சமுதாயத்தை உருவாக்கிட புனித ரமலானில் அனைவரும் உறுதியேற்போம்.


ஜி.கே. வாசன் ரம்ஜான் வாழ்த்து

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்

இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டு, விருந்தோம்பல் செய்து, உதவிகள் செய்து, மகிழ்ச்சியோடு ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி வளமுடன், நலமுடன் வாழ இறைவன் துணை நிற்க த.மா.கா சார்பில் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


பண்ருட்டி தி. வேல்முருகன் ரம்ஜான் வாழ்த்து

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர்

பசியும் உணவும் பொருட்டல்ல; அதனை வென்று அல்லாவிடம் (இறைவனிடம்) நெருக்கமாகும் மார்க்கமாக ரமலான் நோன்பை மேற்கொள்ளும் என் இனிய சகோதர இஸ்லாமியப் பெருமக்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பின் என் உளம்கனிந்த ரமலான் நல்வாழ்த்துக்களைச் சொல்லி அவர்களோடு ஒன்றிணைகிறேன்.


ஜகிருத்தீன் அஹமது ரம்ஜான் வாழ்த்து

இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் 

இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனியத ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


வி.எம்.எஸ். முஸ்தபா

தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர்

இந்தப்புனித நோன்பை மேற்கொண்டு, உடலை, உள்ளத்தைத் தூய்மை செய்து, இறைவனின் திருவருளை இறைஞ்சி, பெற்ற பொருளை பிறர்க்கு வழங்கி இன்புறும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த “ஈத்" திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், கொரோனா எனும் கொடிய அரக்கனால் இன்று உலகமே ஸ்தம்பித்து நிற்கிறது. கண்ணுக்கு தெரியாத இந்த கொடிய வைரஸ் காலம் எனும் பாடத்தை நம் அனைவருக்கும் கற்று தந்துள்ளது. கொடிய வைரஸை கூட்டு சேர்ந்து ஒழிக்க முடியவிட்டாலும், தனி தனியே எதிர்த்து போராடி , உலகை சூழ்ந்துள்ள கொரோனா எனும் இருளை விரட்டி ஒளி பெற செய்வோம் என சூளுரைப்போம். மேலும் இந்நாளில் அனைவரது உள்ளங்களிலும் அன்பும், மகிழ்ச்சியும், சகோதரத்துவமும் பெருகட்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.