இரண்டாம் கட்டத்தில் கோவிட் 19 தடுப்பு மருந்து சோதனை : ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தகவல்

பதிவு செய்த நாள் : 23 மே 2020 21:45

லண்டன்:

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கோவிட் -19 க்கான புதிய தடுப்பூசியை பரிசோதிப்பதற்கான மருத்துவ பரிசோதனைகள் இரண்டாம் கட்ட ஆய்வுக்கு முன்னேறியுள்ளன. இரண்டாம் கட்ட ஆய்வில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 10,260 பேர் மீது பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி குழுமத்தின் தலைவர் ஆண்ட்ரூ பொல்லார்ட் "மருத்துவ ஆய்வுகள் மிகவும் முன்னேறி வருகின்றன" என்று வெள்ளிக்கிழமை கூறினார்.

ஆறு குரங்குகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கிடைத்த நம்பிக்கைக்குரிய முடிவுகளைத் தொடர்ந்து மனிதர்கள் மீதான முதலாம் கட்ட பரிசோதனைகள்  18–55 வயதுடைய 1,000 க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்டத்தில் வயதுவரம்பு மேலும் விரிவாக்கப்பட்டு 56 வயது அதற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 5 முதல் 12 வயது குழந்தைகள் மீது பரிசோதனை நடத்தப்படும்.

இதேபோன்ற தடுப்பூசியை உருவாக்கி வரும் சீனாவின் கேன்சினோ பயோலாஜிக் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் தங்கள் முதல்கட்ட பரிசோதனையின் மூலம் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அறிவித்ததால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தனது இரண்டாம் கட்ட ஆய்வை நோக்கி முன்னேறி உள்ளது.

சீன விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் 108 பேருக்கும்  நோயெதிர்ப்பு எதிர்வினைகள் மற்றும் கடுமையான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று அறிவித்தனர். கேன்சினோ மற்றும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் இரண்டும் ஒரே மாதிரியாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.