பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு அழைத்துவந்தால் கொரோனா சமூக பரவலாகி விடும்: முதலமைச்சர் பழனிசாமி

பதிவு செய்த நாள் : 23 மே 2020 17:59

சேலம், 

வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தால் கொரோனா சமூக பரவலாக மாறி விடும் என இன்று சேலத்தில்  முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி கூறியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் சேலத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி

*கொரோனா இல்லாத மாவட்டங்களில் எல்லா கடைகளும் திறக்க வாய்ப்பு இருக்கிறதா?

இன்றைக்கு ஜவுளி கடைகள், நகைக்கடைகள் திறக்க முடியாமல் தவித்துகொண்டு இருக்கிறார்கள்.

எல்லா மாவட்டங்களிலும் திறப்பதற்கு அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது.ஆனால் அண்டை மாநிலத்திலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் வந்து கொண்டே இருக்கிறார்கள். 

மகாராஷ்டிராவில் அதிகமாக இந்நோய் கண்டறியப்பட்டுள்ளது. இன்றைக்கு எல்லோரும் வெளி மாநிலத்திலிருந்து வர வேண்டும் வர வேண்டும் என்கிறார்கள்.

வெளிநாட்டிலிருந்தும் வர வேண்டும் வர வேண்டும் என்கிறார்கள். நாங்களும் இந்த நோய் தடுப்புப் பணியை நிறுத்திய பிறகு வெளியில் இருந்துவந்தால் சரியாக இருக்கும். அவர்களை சமாளிக்கலாம். அவர்களுக்கு பரிசோதனைசெய்து, யாருக்கு நோய் தொற்று உள்ளதோ அவர்களை மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தலாம் என எண்ணுகிறோம். ஆனால் தொடர்ந்து பொதுமக்களும், சில கட்சியை சேர்ந்தவர்களும் வெளிமாநிலத்திலிருந்து அழைத்து வர வேண்டும் என்று சொல்கிறார்கள்.

வெளி மாநிலத்திலிருந்து அழைத்து வருகின்ற போது, அதில் பலர் அந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தினந்தோறும் சுகாதாரத்துறை மூலமாக வெளிமாநிலத்திலிருந்து வந்தவர்களில் எவ்வளவு பேருக்கு கொரோனா தொற்று நோய்ஏற்பட்டிருக்கிறது என்ற விவரம் உங்களுக்கு தெரியும்.

இதுவரை 719 பேருக்கு கொரோனா நோய் ஏற்பட்டு இன்றைக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலத்தில் வெளிமாநிலத்திலிருந்து, வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்கள் தான் இன்றைக்குசிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. அதனால் தான் எச்சரிக்கையோடு இருக்கிறோம். எல்லாவற்றையும் திறந்து விட்டால், எல்லா மாநிலத்திலிருந்து இங்கே வந்தார்கள் என்றால், இந்த நோய் சமூக பரவலாகிவிடும். கட்டுப்படுத்த முடியாது. அரசாங்கம் சில கட்டுப்பாடுகளை விதித்து, இந்த நோய் பரவலைகட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று தான் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இவ்வாறு அந்த பேட்டியில் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்,