கர்நாடக மாநிலத்தில் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை : அறிவிக்கை வெளியீடு

பதிவு செய்த நாள் : 23 மே 2020 16:12

பெங்களூரு

கர்நாடக மாநிலத்தில் 1 நாளைக்கு 8 மணி நேரமாக உள்ள வேலை நேரத்தை 10 மணி நேரமாக உயர்த்தும் அறிவிப்பை கர்நாடக அரசு நேற்று வெளியிட்டது.

இந்த அறிவிப்பின்படி தினசரி வேலை நேரம் 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது. மாத வேலை நேரம் 48 மணி நேரத்தில் இருந்து 60 மணி நேரமாக உயர்த்தப்படுகிறது. இந்தக் கூடுதல் வேலை நேரம் 3 மாத காலத்துக்கு மட்டுமே அமலில் இருக்கும் என கர்நாடக மாநில தொழிலாளர் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் 60 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யும்படி தொழிலாளர்களை கோர மாட்டோம் என்று அரசு தனது அறிவிப்பில் கூறியுள்ளது.

1948-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பரிசு சட்டத்தின் ஐந்தாவது ஷரத்தின் படி தொழிற்சாலைகளில் வேலை நேரம் உயர்த்தப்பட்டுள்ளது.

நெருக்கடி காலங்களில் வேலை நேரத்தை உயர்த்துவதற்கு ஐந்தாவது ஷரத்து மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது அதன்படி கர்நாடக மாநில அரசு இப்போது வேலை நேரத்தை உயர்த்தி உள்ளது.

கர்நாடக தொழில் வர்த்தக சபையும் கர்நாடக சிறுதொழில் சங்கமும் கர்நாடக முதலமைச்சர் எதியூரப்பாவுக்கு வேலை நேரத்தை உயர்த்தும்படி கோரிக்கை மனு தந்தனர்.

அந்த கோரிக்கையை ஏற்று அரசு வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 10 மணி ஆக உயர்த்தியுள்ளது.

கர்நாடக தொழிலாளர் துறையின் நடவடிக்கையை கர்நாடக மாநில தொழிற்சங்கங்களும் தேசிய அளவிலான தொழிற்சங்கங்களும் கடுமையாக குறை கூறியுள்ளன. கரோனா வைரஸ் பரவல் இன்னும் நிறுத்தப்படவில்லை, இந்நிலையில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 10 மணியாக உயர்த்துவதால் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் என்று அகில இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளர் விஜயபாஸ்கர் கூறினார்.

மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது தார்மீக ரீதியிலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது நாங்கள் அரசின் தீர்மானத்தை தெருக்களில் எதிர்த்து போராடுவோம் எங்கள் போராட்டம் தொடரும் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

3 மாதங்கள் மட்டுமே கூடுதல் வேலை நேரம் நீடிக்கும் என்று கூறுவது பொய் அரசாங்கம் அதனை தொடர்ச்சியாக அமல்படுத்தும் என்று நினைக்கிறோம் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

அரசின் அறிவிப்பை கர்நாடக தொழில் வர்த்தக சபை தலைவர் ஜனார்த்தனன் வரவேற்பதாக கூறினார். அரசு வேலை நேரத்தை உயர்த்தி இருக்கிற காரணத்தினால் கூடுதல் உற்பத்தி செய்ய இயலும் உற்பத்தித் திறனும் மேம்படும் இது கர்நாடக மாநிலத்தின் நலனை மேம்படுத்த உதவும் என ஜனார்த்தன் குறிப்பிட்டார்.

தினசரி 8 மணி நேர வேலை என்பதை மாற்றி வேலை நேரத்தை உயர்த்திய நான்காவது பாஜக மாநிலமாக கர்நாடகம் உள்ளது. ஏற்கனவே உத்தரப் பிரதேசம், குஜராத், மத்தியப பிரதேசம்ஆகிய மூன்று மாநிலங்களும் தினசரி வேலை நேரத்தை 12மணி நேரமாக உயர்த்தி உள்ளன. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத் தகுந்தது.