ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு என் மீது பழி போட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் ஸ்டாலின்: முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம்

பதிவு செய்த நாள் : 23 மே 2020 14:31

 சென்னை,

பட்டியலின மக்களை இழிவாக பேசியதால் வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நியாயப்படி பார்த்தால் தனது கட்சிக்காரரை அழைத்து ஸ்டாலின் கண்டித்திருக்கவேண்டும் அதைவிடுத்து என்மீது புகார் கூறி அரசியல் ஆதாயம் தேடுகிறார் என தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமி இன்று விமர்சித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தடுப்பு, குடிமராமத்து பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அப்போது அவர் பேசியதாவது.

தமிழ்நாடு அரசின் வழிமுறையை சேலம் மாவட்ட நிர்வாகம் முறையாகப் பின்பற்றியதால் கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது என்றார்.

சேலம் மாவட்டத்தில் 14,003 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 35 பேருக்கு  உறுதி செய்யப்பட்டது, அவர்கள்  சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி விட்டனர்.

தற்போது சேலத்தில் கொரோனா தொற்று உள்ளவர்கள், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் .
தமிழகத்தில் 67 கொரோனா பரிசோதனை நிலையங்கள் மூலம், நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது

கோடைகாலம் என்பதால், குடிநீர் பிரச்சனைகள் ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சமூகப்பரவலாக இல்லை, குறிப்பிட்ட பகுதிகளில்தான் நோய்த்தொற்று உள்ளது என்றும்

தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கை முழுமையாக தளர்த்துவது பற்றி மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் முடிவெடுக்கப்படும் என்றும்  விளக்கம் அளித்தார் முதலமைச்சர்.

ஆர்.எஸ். பாரதி கைது

ஆர்.எஸ்.பாரதியை காவல் துறை கைது செய்துள்ளது குறித்து கண்டித்து ஸ்டாலின் ஒரு அறிக்கை அறிக்கை விடுத்துள்ளார் . 

பட்டியல் இனத்தவரை விமர்சனம் செய்தததற்கு மதுரையைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்ற ஆதித்தமிழர் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர் கடந்த மார்ச் 12 அன்று புகார் அளித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். 

அரசியல் ஆதாயம் தேட பொய்யான பிரச்சாரத்தை ஸ்டாலின் செய்கிறார் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

பட்டியலின மக்களை இழிவுப்படுத்தி பேசுவதற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஸ்டாலின் முறைப்படி என்ன செய்திருக்க வேண்டும், தனது கட்சியைச் சேர்ந்தவர் இப்படிப்பட்ட இழிவான பேச்சை பேசியவுடன் அழைத்து கண்டித்திருக்கவேண்டும்.

அதைவிடுத்து அதை என் மீது பழி போடுவது என்ன நியாயம். இதற்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. 

இன்னும் டெண்டரே வரவில்லை, அதற்குள் புகார் அளிக்கிறார்கள். அதிலும் இவர் இவருக்குத்தான் டெண்டர் கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.

இது இ டெண்டர் அதில் டெண்டரை பிரித்தால்தான் டெண்டர் போட்டதே யார் என்று தெரியும். 

திமுக ஆட்சியில் வேறொரு டெண்டர் முறை இருந்தது. வேண்டியவர்களுக்கு டெண்டரை ஒதுக்கலாம். அப்படி ஒரு நிலை இருந்தது அதே எண்ணத்தில் ஸ்டாலின் இருக்கிறார். அந்த நிலை மாறிவிட்டது. இ.டெண்டர் முறை வந்துவிட்டது. 

நீதி மன்றத்தில் வழக்கு இருப்பதால் இதற்கு மேல் இதுகுறித்து பேசவேண்டாம் என்று நினைக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில பேசினார்.