ஆர்.எஸ்.பாரதி கைது: திராவிடர் கழகம் கண்டனம்

பதிவு செய்த நாள் : 23 மே 2020 12:29

சென்னை,

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது பற்றி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக, கி.வீரமணி இன்று (மே 23) வெளியிட்ட அறிக்கை:

கடந்த பிப்ரவரியில் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி பேசியதாகக் கூறப்படும் ஒரு கருத்துக்காக ஒருவர் கொடுத்த புகாரின் காரணமாக, மூன்று மாதங்கள் கழித்து இன்று அதிகாலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் சென்னை காவல்துறை மத்திய குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி, 2020ல் ஏற்கெனவே அத்தகைய விமர்சனம் வந்தபோது, அது பற்றிய தன்னிலை விளக்கத்தை ஆர்.எஸ்.பாரதி அப்போதே கூறியதோடு, அதையும் மீறி யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் கூறி வருத்தமும் தெரிவித்திருந்தார்.

அது பற்றிய தன்னுடைய உரை திரித்துக் கூறப்பட்டுள்ளது என்றெல்லாம் அவர் விளக்கியுள்ள நிலையில் இப்படி ஒரு கைது நடவடிக்கை தேவையா?

கொரோனா கொடூரத்தை எதிர்த்து அனைவரும் ஒருங்கிணைந்து அரசியல் மாச்சரியத்திற்கு இடமின்றி போராட வேண்டிய ஒரு காலகட்டத்தில், இத்தகைய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை தமிழக அரசுக்குத் தேவையற்ற அவப்பெயரைத் தான் ஏற்படுத்தும். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

அதிலும் அவர் கரோனா தொற்று ஆய்வின் காரணமாக, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள நிலையில், இது அரசியல் வன்மத்தின் கொச்சையான வெளிப்பாடு ஆகும். மனிதாபிமானமற்ற நடவடிக்கையும் ஆகும்.
சட்டப்படி இதனை எதிர்கொள்ளும் ஆற்றலும் வலிமையும் திமுகவுக்கு உண்டு என்றாலும், தேவையற்ற கெட்ட பெயர் அரசுக்கு ஏற்படாமலிருக்க இதனைத் திரும்பப் பெற வேண்டும்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து மிகவும் கொச்சையாக அவமதிக்கும் கீழ்த்தரமான சொல்லைப் பயன்படுத்திய பாஜகவின் தேசிய செயலாளர் மீது அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்து கைது செய்ததா என்ற கேள்விக்கு என்ன பதில்? இந்த இரட்டை நிலைக்கு என்ன காரணம் என்பதை நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்வார்கள்.

இவ்வாறு, அறிக்கையில் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.