சாலையை வழிமறித்த சிங்கங்கள் : ஆம்புலன்சிலேயே பிறந்த குழந்தை

பதிவு செய்த நாள் : 22 மே 2020 22:35

ராஜ்கோட்:

குஜராத் மாநிலம் கிர்-கட்தா தாலுகாவின் பாகா என்ற கிராமத்தில் அப்சனா ரபீக் என்ற 30 வயது பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியில் சில சிங்கங்கள் சாலை நடுவே நடமாடிக் கொண்டிருந்ததால் அந்தப் பெண் ஆம்புலன்சிலேயே குழந்தையை பெற்றெடுத்தார்.

புதன்கிழமை இரவு 10.30 மணியளவில் ஆம்புலன்ஸ், அப்சனா ரபீக்கை ஏற்றிக்கொண்டு, 18 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு 12 கி.மீ.,தூரத்தை அரை மணி நேரத்தில் கடந்தது.. ஆனால் ரசூல்பூர் பாட்டியா அருகே திடீரென்று ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அங்கு சாலை நடுவே சில சிங்கங்கள் மிகவும் சாவகாசமாக நடமாடிக் கொண்டிருந்தன. அதனால் ஆம்புலன்ஸால் மேற்கொண்டு செல்ல முடியவில்லை.

இதுகுறித்து ஆம்புலன்சை ஓட்டிவந்த108 அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (ஈஎம்டி) ஜெகதீஷ் மக்வானா கூறுகையில்:

“நிலைமை மிகவும் அசாதாரணமாக இருந்தது. நாங்கள் விரைவாக மருத்துவமனையை அடைய வேண்டியிருந்தது. ஆனால் சிங்கங்கள் விலகிச் செல்லும் வரை மேற்கொண்டு செல்ல முடியவில்லை. நான் இந்த பகுதியைச் சேர்ந்தவன்.  சிங்கங்களின் நடத்தை பற்றி எனக்குத் தெரியும். அதனால் ஆம்புலன்சிற்குள் நான் பிரசவத்தை செய்ய வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும், ஆனால் முதல் முறையாக நான் நடுங்கிக் கொண்டிருந்தேன்” என்று ஜெகதீஷ் கூறினார்.

“இரவு 10.30 மணியளவில் மக்வானாவிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. சிங்கங்கள் வழியை விட்டு விலகும் வரை அங்கிருந்து நகர வேண்டாம். தொலைபேசி  மூலம் மருத்துவரின் ஆலோசனையின் படி  பிரசவம் பாருங்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன், ”என்று ஜி.வி.கே ஜி.எம்.ஆர்.ஐ கிர்-சோம்நாத் மாவட்ட நிர்வாகி யுவராஜ்சின் ஜலா கூறினார்.

வெளியே கர்ஜிக்கிற சிங்கங்களைப் பொருட்படுத்தாமல், ஆம்புலன்ஸ் ஊழியரும் உடன் இருந்த ஆஷா  பணியாளர் உடன் சேர்ந்து, காடுகளின் நடுவில் அப்சானாவுக்கு பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில் அப்சானா ஒரு ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த பெண் குழந்தை கிட்டத்தட்ட 3 கிலோ எடை இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

சாலை நடுவே சிங்கங்கள் இருப்பது குறித்து அப்சனாவின் தாயாரிடம் தெரிவிக்கப்படவில்லை. அவர் பயத்தில் பதற்றம் அடையலாம் என்பதால் அவரிடம் உண்மையை மறைத்து விட்டனர்.

20 முதல் 25 நிமிடங்களுக்குப் பிறகு சிங்கங்கள் அங்கிருந்து சென்றன. அதன்பின், ஆம்புலன்ஸ் கிர்தாவின் சமூகநல மையத்திற்கு வந்து சேர்ந்தது. அங்கு தாயும் குழந்தையும் நன்றாக இருப்பதாகவும் விரைவில் அவர்கள் வீடு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.