ஆகஸ்ட் 25ம் தேதி வரை அனைத்து உள்நாட்டு விமானங்களுக்கும் மத்திய அரசு கட்டணம் நிர்ணயம்

பதிவு செய்த நாள் : 22 மே 2020 22:34

புதுடில்லி,

மே 25ஆம் தேதி முதல் மீண்டும் போக்குவரத்து சேவையை துவங்க உள்ள உள்நாட்டு விமானங்களுக்கான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச கட்டணங்களை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் ஆகஸ்ட் 25ஆம் வரை அமலில் இருக்கும்.


ஒவ்வொரு விமானத்திலும் 40 சதவீத இருக்கைகள் சராசரி கட்டணத்தை விட குறைந்த கட்டணத்திற்கு விற்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  பறக்கும் நேரத்தின் அடிப்படையில், ஏழு வகை கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 40 நிமிடங்கள் பயண நேரம் விமான பயணத்திற்கு ரூ. 2,000 முதல், ரூ. 6,000 வரை, 3 முதல் 3.5 மணி நேரம் பறப்பவர்களுக்கு , ரூ. 6,500 முதல், ரூ. 18,600 வரை கட்டணம் வசூலிக்கப்படும்.

உள்நாட்டு பயணிகளை தனிமைப்படுத்த எந்த அவசியமும் இருக்காது என்று விமான போக்குவரத்து துறை அமைச்சர் எச்.எஸ் .பூரி தெரிவித்தார். “வெவ்வேறு மாநிலங்களின் விதிகள் பின்பற்றப்பட வேண்டும். உள்நாட்டு விமானங்களில் பறப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது அவசியமா என தெரியவில்லை,” அமைச்சர் பூரி கூறினார்.

புதிய விதிமுறைகளின்படி விமானங்களில் சாப்பிடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் மற்றும் சுகாதார பிரச்சினைகள் உள்ளவர்கள் இப்போது விமான பயணத்தை மேற்கொள்ள வேண்டாமென என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதிய நெறிமுறையின் கீழ் பயணிகள் தங்கள் பைகளுக்கு பெறும் செக்-இன் குறிச்சொற்கள்  (check in tag) எஸ்எம்எஸ் மூலம் வழங்கப்படும்.

கட்டுப்பாட்டு மண்டலங்களில் தங்கியுள்ளவர்கள் மற்றும் கடந்த இரண்டு மாதங்களில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் விமானங்களில் பறக்க முடியாது. அவர்கள் அவ்வாறு செய்தால்,  கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என விமான போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.