முககவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 500 அபராதம்: கமிஷனர் விஸ்வநாதன் எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 22 மே 2020 17:55

சென்னை, 

சென்னையில் முக கவசம் அணியாமல் வெளியே வாகனத்தில் வெளியே வந்தால் ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் தற்போது 4ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளன.  இதனால் சென்னை நகரில் பொதுமக்கள் பலர் வாகனங்களிலும், சாலைகளில் வெளியே சுற்றும் போது முகத்தில் மாஸ்க் இல்லாமல் சுற்றத்தொடங்கியுள்ளனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாகச் சுற்றி திரிந்து வருகின்றனர். முகக்கவசம் அணிவதும் மறந்து போனது.

இது தொடர்பாக ஏற்கெனவே சென்னை மாநகராட்சி முககவசம் அணியாமல் வெளியே சுற்றும் நபர்களிடம் இருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்றும்,

சாலைகளில் செல்வோர் முககவசம் அணியாமல் சென்றால் 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரித்திருந்தது. அதனடிப்படையில் முகக்கவசம் அணியாமல் வாகனத்தில் பயணிக்கும் நபர்களிடம் மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 179ன் கீழ் போக்குவரத்து போலீசார் ரூ. 500 அபராதம் விதித்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு தளர்வின் காரணமாக சென்னை - அண்ணாசாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பி உள்ளதால் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். இன்று காலை முதல் வாகன தணிக்கையில் ஈடுபட்டதில் முதல் 3 மணி நேரத்தில் முககவசம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த 17 பேரிடம் ரூ. 500 அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

சமூக இடைவெளி பின்பற்றாமல் சென்றதாக 6 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த வாகன சோதனையை நேரில் சென்று ஆய்வு செய்த போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் வாகனஓட்டிகள் மற்றும் சாலையில் நடந்து சென்ற பொதுமக்களுக்கு முககவசம் வழங்கி அவர்களுக்கு சமூக விலகல் குறித்த அறிவுரைகளை விளக்கிக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமிஷனர் விஸ்வநாதன் கூறியதாவது:

சென்னையில் ஊரடங்கு தளர்வினால் பொதுமக்களின் நடமாட்டம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது. இதனால் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டூ வீலர்களில் செல்பவர்கள்  சமூக இடைவெளி இல்லாமல் சென்றாலோ அல்லது முககவசம் அணியாமல் சென்றால் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனாவை முழுவதுமாக ஒழிக்க வேண்டுமென்றால் சமூக இடைவெளி மற்றும் முககவசம் அணிவதை பொதுமக்கள் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். 

முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கும்படி ஏற்கெனவே சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது தற்போது தீவிரமாக  போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அவசர தேவைக்காக பாஸ் வாங்கிவிட்டு வேறு மாவட்டங்களுக்கு சென்று சட்டவிரோதமாக மதுபானம் வாங்கி வரும் நபர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.