காவிரி-குண்டாறு-இணைப்புத்திட்டத்தால் 7 மாவட்டங்கள் பயன்பெறும் - விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு

பதிவு செய்த நாள் : 22 மே 2020 17:24

திருச்சி

காவிரி-குண்டாறு-இணைப்புத்திட்டத்தால் 7 மாவட்டங்கள் பயன்பெறும் என தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு திருச்சியில் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட மக்களின் 100 ஆண்டு கால கனவுத்திட்டமாக இருப்பது காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம். இந்த இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.7,677 கோடி ஆகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 12 தாலுக்காக்களில் உள்ள சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் இதன் மூலம் பயனடைய உள்ளது.

   காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தின் மொத்த நீளம் 256 கி‌.மீட்டர் ஆகும். காவிரி முதல் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைத்து அதில் பெறப்படும் உபரி நீர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 760 கண்மாய்களுக்கு கிடைக்கும். இதன்மூலம், ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.

    ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது காவிரி ஆறு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வரப்படுவதால் விவசாயம் செழித்து பொருளாதார முன்னேற்றம் ஏற்பட வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், மற்றொரு முக்கிய நிகழ்வாக காவிரியில் கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும்போது புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஆண்டு முழுவதும் காவிரி தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படும்.

    காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முதல் கட்டமாக கரூர் மாவட்டம் மாயனூரில் உள்ள காவிரி ஆற்றின் கதவணையில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு வெள்ளாறு வரை 119 கிலோ மீட்டருக்கு கால்வாய் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. 119 கிலோ மீட்டருக்கு கால்வாய், பாலங்கள் அமைக்க ரூ.7,677 கோடிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

   இத்திட்டம் நிறைவேறும்போது விநாடிக்கு 6,360 கன அடி வீதம் காவிரி உபரிநீர் கொண்டு வரப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 760 கண்மாய்களுக்கு நீர் ஆதாரம் பெறுவதுடன், சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் பாசனம் செய்யப்படும். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் காவிரி நீர் கொண்டு செல்லப்படுவதால் வறண்ட மாவட்டங்கள் பசுமையாக மாறும்.

காவிரி - குண்டாறு இணைப்பு குறித்து விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவிக்கையில், 

காவிரி - குண்டாறு இணைப்புத்திட்டம் நீண்ட கால திட்டமுங்க, கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றின் கதவணையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாறு வரை 119 கி.மீ.வரை கால்வாய் அக்கினியாறு, அம்புலியாறு, நரசிங்க காவிரி, கொளுவனாறு, தெற்கு வெள்ளாறு போன்ற காட்டாறுகள் வழியாக பிரதான கால்வாயோடு இணைக்கப்படும்ங்க என்றார்.
   காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது இக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டால் 33 அணைக்கட்டுகள் மூலம் திருச்சி-புதுக்கோட்டை-சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில்,323 ஏரிகளில் நிரப்பப்படும். இந்த காவிரி-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 52,000 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவது உறுதிப்படுத்தப்படுகின்றது.

இந்த திட்டத்தால் பயன் பெறும் மாவட்டங்கள் புதுக்கோட்டை 1583.18 ஏக்கர் பட்டா நிலம் கரூர் 925.15 ஏக்கர் பட்டா நிலம், திருச்சி 977.65 ஏக்கர் பட்டா நிலம் உள்பட சிவகங்கை, இராமநாதபுரம் என பல மாவட்டங்கள் இணைப்பு கால்வாய் திட்டத்தின் மூலம் நீர்ப்பாசன வசதி பெறும்.   

புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறைக்கு இந்த திட்டத்தின் மூலம் தீர்வு காணப்படும் என்றும் இதனால் இந்த கால்வாய் பாயக்குடிய மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் எனவும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவற்கு ரூ.1,021 கோடி, கால்வாய் கட்டுமான திட்டங்களுக்கு ரூ.7,677 கோடி என இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.8,689 கோடி ஆகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வெள்ளப்பெருக்கு காலத்தில் காவிரியில் வெளியேற்றப்படும் உபரி நீரூம், கரைபுரளும் வெள்ளமும்

கடலில் வீணாக சென்று கலப்பதை முற்றிலும் தவிர்த்து கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் விவசாயம் செழிக்கவும், குடிநீர் ஆதாரம் பெருகவும் இந்த திட்டம் பயன்பெறும் எனவும் தெரிவித்தார் அய்யாக்கண்ணு.