காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு பணிகள் துவங்கியது

பதிவு செய்த நாள் : 22 மே 2020 16:40

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி வைகை குண்டாறு இணைப்பு பணிகள் துவங்கிவிட்டன. இந்த இணைப்புத்  திட்டத்திற்காக 656 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்த பட உள்ளது. அதற்கான நில ஆர்ஜித பணி அலுவலர்களும் பதவி ஏற்று விட்டனர்.  நான்கு மாத காலத்திற்குள் நில ஆர்ஜித பணிமுடியும் என புதுக்கோட்டை  மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி செய்தியாளர்களிடம் கூறினார்.

புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய  7 மாவட்ட  விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த காவிரி- வைகை -குண்டாறு இணைப்புத் திட்டத்தை  செயல்படுத்த  7,665 கோடி ரூபாய் தேவைப்படும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது.

 தமிழக முதல்வர் சட்டசபையில் இந்த திட்டத்தை செயல்படுத்த  ஒப்புதல வழங்கினார்.  அவர் அறிவித்ததைத் தொடர்ந்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது.

முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்துவதற்கு 700 கோடி ரூபாய் தமிழக அரசு  நிதி ஒதுக்கீடு செய்தது

 இதற்கான முதற் கட்ட பணிகள் கரூர், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் தொடங்கியது

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி தலைமையில் இதற்கான ஆய்வு கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் காவிரி- வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்காக அரசால் நியமிக்கப்பட்ட  மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யா தேவி பொதுப்பணித்துறை அதிகாரிகள்  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப்  பின்னர் செய்தியாளர்களிடம் ஆட்சியர் உமா மகேஸ்வரி பேசினார்.

காவிரி- வைகை-குண்டாறு நதி நீர் இணைப்புத் திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் மாவட்டத்தில் தொடங்கிவிட்டது நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணிக்காக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார்

அவர் தலைமையில் 3 பிரிவுகளாக  அதிகாரிகள் செயல்படுவார்கள்.

இந்தத் திட்டத்திற்காக விராலிமலை இலுப்பூர் குளத்தூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய தாலுகாக்களில்  உள்ள 656 ஹெக்டேர் நிலம் கையகப் படுத்தப்பட்டுள்ளது

இந்த பணிகள் 4 மாத காலத்திற்குள் முடிவடையும்  என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி கூறினார்.

இக்கூட்டத்தில்  மவட்ட வருவாய் அலுவலர் சரவணன்  மாவட்ட வருவாய் கோட்டாச்சியர்கள்  தாசில்தார்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இணைப்புப் பாதை 

காவிரி – வைகை -  இணைப்புத் திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக இத்திட்டம் கரூர் மாவட்டம் மாயனுர் அணைக்கட்டில் இருந்து துவங்குகிறது.

திருச்சி மாவட்டம் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் உள்ள குன்னக்குடி என்றஇடத்திற்கு வந்து சேருகிறது.  

அங்கிருந்து  சூரியூர்,  புலியூர், மோசக்குடி,  வெள்ளனூர், திருகோகர்ணம் , கவிநாடு கண்மாய் வழியாக புதுக்கோட்டையில் உள்ள வெள்ளாறு பூசத்துறையை வந்தடைகிறது.

பின்னர் இப்பணி இரண்டாம் கட்டமாக புதுக்கோட்டை

 பூசத்துறையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு நெடுங்குடி வழியாக

 சிவகங்கை மாவட்டம் பாம்பாறு சென்றடைகிறது பிறகு அங்கிருந்து சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குண்டாறு எனும் சிற்றாறோடு இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.