இந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி0.4% குறைப்பு

பதிவு செய்த நாள் : 22 மே 2020 12:41

மும்பை

 இந்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைத்துள்ளது.

 இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் வெள்ளிக்கிழமை காலை செய்தியாளர்களிடம் ரெப்போ வட்டி குறைப்பு பற்றிய தகவலை வெளியிட்டார்.

 மே மாதம் 20ஆம் தேதி முதல் 22ம் தேதிவரை நாணயக் கொள்கை கமிட்டி கூட்டம் மும்பையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவுகள் விவரம் வருமாறு:

 1.இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 4.4 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

 2.ரிசர்வ் வங்கியின் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.7 சதவீதத்திலிருந்து 3.35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

3. பணப்புழக்கத்தை மேம்படுத்த அரசு செக்யூரிட்டி வின் பேரில் வங்கிகள் பெறும் ஒருநாள் இரவுக் கடனுக்கான வட்டி விகிதம் 4.6 5 சதவீதத்திலிருந்து 4.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பொது ஊரடங்கு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அதன் காரணமாக இந்தியாவில் தொழில், வர்த்தக சேவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

 இந்தச் சரிவைத் தடுக்கவும் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு உயர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கமிட்டி தயாராக உள்ளது என்றும் உறுதி  அளிக்கப்பட்டுள்ளது.

 இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கமிட்டி எடுத்த முடிவுகள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் நிலவும் பொருளாதார நிலைமை களைப்பரிசீலித்து எடுக்கப்பட்ட முடிவுகள்  என இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறினார்.

இந்தியாவில் அரசு மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகளினாலும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைகள் காரணமாக பணப்புழக்கம் மேம்பட்டுள்ளது.  இந்த நிலையை இன்னும் சீராக்கி இந்திய தொழில் துறையின் வளர்ச்சிக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது

.சமீபத்தில் நடந்த அறுவடை காரணமாக உணவு தொடர்பான பண பணவீக்கம் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்த காரணத்தினால்  கச்சா எண்ணெய் விலை ஓரளவு வலுவடைந்துள்ளது. அதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு எப்படி இருக்கும் என எதிர்காலத்தில் உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது. அதனால் இந்தியாவில் பணவீக்கம் எந்த அளவு உயரும் என்பதை கணக்கிடுவதற்கு நிச்சயமற்ற நிலை உள்ளது.

 இந்தியாவின் ஏற்றுமதி 60.3 சதவீதம் குறைந்துள்ளது அதன் இறக்குமதி 58.5 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் பட்ஜெட் நிதிப் பற்றாக்குறை 2020ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் கணிசமாக குறைந்துள்ளது.

 நடப்பு ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தியாவிற்குள் வரும் முதலீட்டு அளவு உயர்ந்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு தேவையான நிதித்தேவைகள்  தொழில் துறை யின் எல்லா பிரிவினருக்கும் கட்டுபடியாகும் கூடிய நிலையில் கிடைக்க வேண்டும். இதன் மூலம் இந்திய பொருளாதாரம் மீண்டும் புத்துயிர் பெற வாய்ப்பு உள்ளது. தொழில் வர்த்தகத்துறையின்  இடு பொருள் வழங்கு தொடரும் உற்பத்தி செயத பொருளை விற்பதற்கு உதவும் சங்கிலித் தொடர் அமைப்புகளும் மீண்டும் புதுப்பிக்கப்பட வேண்டியது அவசியம்.

இந்தியாவின் வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்கின்ற அதே நேரத்தில், இந்திய பொருளாதாரத்துக்கு ஆதரவான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். இந்த பாதையில் இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை கமிட்டி தொடர்ந்து செயல்படும்.

 அடுத்த நாணயக் கொள்கை கமிட்டி கூட்டம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறும் .

இவ்வாறு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.