பிளஸ் டூ முடித்தவுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐடி பிரிவைத் தேர்ந்தெடுக்கலாமா? மாணவர்களுக்கு வழிகாட்டும் கட்டுரை!

பதிவு செய்த நாள் : 21 மே 2020

கொரோனா ஊரடங்கு பலரையும் முடக்கிப் போட்டிருக்கிறதோ இல்லையோ பள்ளி மாணவர்களை  அதிகளவில் முடக்கிப் போட்டிருக்கிறது.விரைவில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் அடுத்து என்ன படிக்கலாம் என்று அலசும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழிகாட்டத்  தினமலர் தயாராக உள்ளது. 

கொரோனாவால் வேலை வாய்ப்பு சந்தை பாதிப்படைந்திருக்கும் வேளையில் கொரோனா பிரச்னையால் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பைத்  தேர்ந்தெடுப்பவர்களுக்கு இனி வரும் காலங்களில் வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்த சந்தேகம் இளம் தலைமுறையினரிடம் உள்ளது.  கம்ப்யூட்டர் பிரிவைத் தேர்ந்தெடுக்கலாமா வேண்டாமா என்று யோசிக்கும் மாணவர்களுக்கும், ஐடி பிரிவில் தங்களுடைய பிள்ளைகளைச் சேர்க்கலாமா என்று பலரிடம் ஆலோசனை பெற்று வரும் பெற்றோர்களுக்கும் வழிகாட்டுகிறது  இக்கட்டுரை.

படிப்பை முடித்தவுடன், கை நிறையச் சம்பளத்துடன் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை வேண்டுமானால் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீயரிங் படிப்பு நல்ல சாய்ஸ். காரணம்,  இன்னும் உலக அளவில் அதிக வேலை வாய்ப்பையும் அதிக சம்பளத்தையும் வழங்குவது பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களே.

கடந்த நான்கு ஆண்டுகளாக பொறியியல் சேர்க்கை பின்னடைவைச் சந்தித்து வரும் வேளையிலும் அதிக மாணவர்கள் விருப்பப்பட்டுச் சேரும் பிரிவுகளில் முதலிடத்திலிருந்து வருகிறது  கணினித் துறை. கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி துறையை தேர்ந்தெடுக்கும் முன்பு, மாணவர்கள்  தன் திறன்கள் குறித்து ஆய்வு செய்துகொள்ள வேண்டியது அவசியம். இன்றைய உலகில் உள்ள பிரச்னைகளுக்குத் தகவல் தொழில்நுட்பத்தின் உதவியோடு தீர்வு காண விருப்பமும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.

முதலில் ஐடி துறை என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.  ஐடி துறையில் கணினி தயாரிப்பு, மேம்படுத்துவது என ஹார்டுவேர் மற்றும் சாப்ட்வேர் என இரண்டு பிரிவுகள் உள்ளன.  இந்த பிரிவுகளும் கலந்த கலவையே பெரும்பாலான இடங்களில் பயன்பாட்டில் உள்ளன. உதாரணத்துக்கு நாம் அணியும் கைக்கடிகாரத்தில் சென்சர்கள் மூலம் பெறப்படும் தகவலை எப்படி கை கடிகாரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு வழங்குவது என்று யோசிக்கலாம். 

பர்னிச்சர் கடைக்கு செல்லும் முன்பு அந்த பர்னிச்சர் நம்முடைய வீட்டில் எங்கே பொருத்துவது என விர்ச்சுவல் மூலம் பார்க்கலாம். இதைப்போன்று பல உதாரணங்களைச் சொல்லலாம். இன்று வங்கிக்குச் செல்லாமலேயே  ஆன்லைன் மூலமே ஒருவருடைய வங்கி கணக்கிலிருந்து மற்றொருவருக்குப் பணம் அனுப்பலாம், பெறலாம். இந்த சேவை எல்லாம் மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்டவை.  இவை ஒவ்வொரு நிறுவனத்தின் தேவைக்குத் தகுந்தாற்போல் உருவாக்கப்பட்டிருக்கும். உலகமெங்கும் இந்த சேவையைப் பயன்படுத்த கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற பிரிவு உள்ளது. இந்த சேவை தடையில்லாமல் கிடைக்க இன்ப்ராஸ்ட்ரெக்சர் பிரிவு உள்ளது. 

எல்லோரும் பயன்படுத்தும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்றவை பிராடக்ட் என்பார்கள். இதை உருவாக்க ஏராளமான நிறுவனங்கள் உள்ளன. இவை ஒவ்வொரு துறையின் தேவைக்குத் தகுந்தாற்போல் பல மென்பொருள்களை உருவாக்கி உள்ளன. இந்த மென்பொருளை ஒவ்வொரு நிறுவனத்திலும் அதன் பயன்பாட்டுக்குத் தகுந்தாற்போல் இன்ஸ்டல் செய்வதற்குத் தனித்திறன் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.  இன்ஸ்டல் செய்தால் மட்டும் போதாது. அந்த நிறுவனத்தின் தேவைக்கு ஏற்ப மெயின்டென்ஸ் செய்ய வேண்டும். டெக்னிக்கல் சப்போர்ட் என்று உள்ளன. இத்தகைய பிரிவுகளில் திறனை வளர்த்துக்கொண்டு வேலை வாய்ப்பைப் பெறலாம்.

படிக்கும்போது ஹார்ட்வேர் குறித்தும், மென்பொருள் பயன்பாடு குறித்தும் அறிந்துகொள்ள வேண்டும்.   அடகுக் கடை முதல் வங்கி வரை  எல்லா இடங்களிலும் மென்பொருளின் பயன்பாடு இருக்கிறது. அந்த நிறுவனங்களுக்குத் தகுந்தாற்போல் மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு நிறுவனத்துக்குத் தகுந்தாற்போல் மென்பொருள் உருவாக்கத்தை ஒருங்கிணைக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  எந்த தொழில் என்றாலும் மென்பொருள் கொண்டு அந்த தொழிலை ஒருங்கிணைக்கும் வசதியை உருவாக்கிக் கொள்ள முடியும். இது மென்பொருள் சேவைப்பிரிவைச் சார்ந்தது.  தற்போது  மென்பொருள் சேவைப்பிரிவே உலக அளவில் மிகப்பெரிய துறையாக உள்ளது. பிராடக்ட் சப்போர்ட் என்பது சிறிய அளவில் உள்ளது.  சேவைத்துறையில் வேலை வாய்ப்பைப் பெற விரும்புகிறவர்கள் கம்யூனிக்கேஷன் திறனை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

சேவைப்பிரிவில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் பொறியியல் திறன் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், ஒரு பிரச்னை குறித்துச் சொல்லும்போது அதற்கான தீர்வை பல கோணங்களில் அலசி தீர்வு காணும் திறன் இருக்க வேண்டும்.  இதற்கு கணிதத்திறன் இருக்க வேண்டிய அவசியமில்லை. பொதுவான அணுகுமுறை இருந்தாலேயே போதுமானது.

பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ, எம்.சி.ஏ போன்ற படிப்புக்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது. பி.எஸ்சி, பி.சி.ஏ, எம்.சி.ஏ என எல்லா படிப்புக்குமே வாய்ப்புகள் உள்ளன. கணினி சார்ந்த ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முன்பு திறனைச் சோதிக்கத் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தேர்ச்சி பெறுபவர்கள் வேலை வாய்ப்பை பெறுகிறார்கள். இவர்கள் படிக்கும்போதே திறனை வளர்த்துக்கொண்டால் வேலை வாய்ப்பு நிச்சயம். படிக்கும்போது,  தகவல் தொழில் நுட்பத்துறையில் நுழைய பிரச்னையைப் பகுப்பாய்வு செய்யும் திறன், ஆங்கிலத்தில் தடுமாற்றம் இல்லாமல் உரையாடும் திறன், பிரச்னையை தீர்வு காணும் அணுகுமுறை போன்றவற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

தற்போது பொறியியல் கல்லூரியிலிருந்து வெளியே வருபவர்களில் 23-24 சதவிகிதம் பேரே வேலை வாய்ப்பை பெறுகின்றனர்.  பெரும்பாலானவர்கள் போதுமான திறனை வளர்த்துக்கொள்ளாததால் வேலை வாய்ப்பை பெறுவதில்லை. திறனை வளர்த்துக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் தற்போது பல பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கும் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பை பெறலாம்.

'கொரோனா பிரச்னையால் தற்போது வாய்ப்புகள் குறைந்துள்ளன' என வேலை வாய்ப்பை சந்தையை உன்னிப்பாகக் கவனித்து வரும் நிபுணர்கள். ஆனால்,  தகுந்த திறமையை வளர்த்துக்கொண்டால் கணினித் துறையில் வேலை வாய்ப்பு நிச்சயம். நீங்கள் எங்குப் படித்தாலும் உங்களுக்குத் திறமை வளர்த்துக்கொள்ள வழிகாட்டும். ஆனால், சொந்த முயற்சியிலேயே திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.

கொரோனா பிரச்னையால், இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளதா, எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்வியைப் பன்னாட்டு நிறுவனத்தில் துணைத்தலைவராக உள்ள மகேஷ் வெங்கட்ராமனிடம் முன் வைத்தோம்.

"கொரோனா பிரச்னையால் ஐடி துறையின் வேலை வாய்ப்புகள் சற்று பின்னடைவைச் சந்தித்துள்ளது உண்மையே. ஆனால், கொரோனா பிரச்னை இந்திய ஐடி சந்தைக்கு வாய்ப்பை கூட்டி உள்ளது. சர்வதேச நிறுவனங்கள் சீனாவை நாடாமல் இந்தியாவுக்கு வாய்ப்புகளை வழங்கும் சூழல் உருவாகி இருக்கிறது.  மேலும், இதுவரை பல விற்பனை நிறுவனங்கள் நேரடி விற்பனையிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தன. கொரோனா பிரச்னையால் ஆன்லைன் மூலம் விற்பனை வாய்ப்பை பயன்படுத்த முன்வந்துள்ளன.  பெரிய நகரங்கள் உள்ள நிறுவனங்கள் மட்டுமே  தகவல் தொழில்நுட்பத்தை முதன்மையாகப் பயன்படுத்தி வந்த நிலையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் உள்ள சிறு நிறுவனங்கள் கூட தகவல் தொழில்நுட்பத்தின் உதவியை நாடுவது அதிகரித்துள்ளது.  ஆகையால் கொரோனா பிரச்னை  தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கி உள்ளன.

தற்போது, ஊரடங்கினால் மொபைல் பயன்பாடும், அனிமேஷன் கேமிங் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது.  கிளவுட் கம்ப்யூட்டிங், டேட்டா அனாலிட்டிக்ஸ் போன்ற பிரிவுகளை மனதில் வைத்துப் படித்தால் தகவல் தொழில்நுட்பத்தில் எளிதில் வேலை வாய்ப்பை பெறலாம்" என்றார்.

 - முனைவர் சக்திவேல் முருகன்

எதிர்கால படிப்புகள் குறித்து உங்களுடைய சந்தேகங்களையும் கேள்விகளையும் 

dmrnglnews @gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கு கேள்விகளுக்கு நிபுணர்களின் ஆலோசனையோடு விளக்கமளிக்க தயாராக உள்ளோம்.கட்டுரையாளர்: முனைவர் சக்திவேல் முருகன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation