ஜூன் 1-ல் 200 சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று தொடங்கியது - தமிழ்நாட்டிற்குள் ரயில் சேவை இல்லை

பதிவு செய்த நாள் : 21 மே 2020 10:48

சென்னை:

ஜூன் 1-ம் தேதி இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24-ம் தேதி அமல்படுத்தப்பட்ட பொது ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி இயக்கப்படவுள்ள 200 சிறப்பு ரயில்களில் தமிழ்நாட்டிற்குள் எந்த ரயில் சேவையும் அறிவிக்கப்படவில்லை. சென்னையிலிருந்து புதுடில்லி, ஹெளரா, நிஜாமுதின், கோவா ஆகிய இடங்களுக்கு மட்டும் ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது ஊரடங்கில் ரயில், விமானம், பேருந்து ஆகிய போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. பொது ஊரடங்கின்போது பல்வேறு மாநிலங்களில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு நடந்து சென்ற வண்ணம் உள்ளனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த மாநிலம்  செல்வதற்கு ஷர்மிக் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

ஜூன் 1 முதல் பயணிகள் ரயில்கள் இயக்கம்

ஜூன் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல இந்த 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், இதன் டிக்கெட் ஆன்லைனில் மட்டுமே கிடைக்கும் எனவும், முன்பதிவுக்கான கால அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் எனவும் அமைச்சர் பியூஸ் கோயல் டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

200 சிறப்பு ரயிலுக்கான  முன்பதிவு தொடங்கு நேரம் குறித்து இந்திய ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. 

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள 200 சிறப்பு ரயில்களுக்கு இன்று  முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு ரயில்களில் தமிழ்நாட்டிற்குள் (சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை) எந்த ரயில் சேவையும் இடம்பெறவில்லை.

2-6-2020 அன்று சென்னையிலிருந்து - திருவாரூர் செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்ய ரயிலை தேடியபோது எரர் மெஸேஜ்தான் கிடைத்தது.

பொது ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றடைவதற்கு இந்திய ரயில்வேயின் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மே 25 முதல் உள்நாட்டு விமான சேவையும் தொடங்கப்படவுள்ளது. அதற்கான முன்பதிவு இன்று காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது.