தமிழகத்துக்கு மே மாதப் பகிர்வு ரூ. 1,928 கோடி ஒதுக்கீடு

பதிவு செய்த நாள் : 20 மே 2020 20:03

புதுடெல்லி,

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதிப் பகிர்வில் தமிழகத்திற்கு ரூ.1,928 கோடி இன்று  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று கடந்த 12 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

‘சுயசார்பு இந்தியா’ என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள் தொகை, அமைப்பு முறை, தேவை ஆகிய 5 தூண்களை அடிப்படையாக கொண்டது என்று அவர் கூறினார்.

ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்புத் திட்டங்கள் பற்றிய விவரங்களை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 5 நாட்கள் அறிவித்தார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சிறு தொழில்களுக்கான நிவாரணத் திட்டங்களுக்கு நிதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.

 இதன் படி வங்கிகள் கூடுதல் நடைமுறை மூலதனக்கடனாகக் 20 % பெறலாம். வங்கி சாரா நிதிநிறுவனங்கள் கூடுதல் காலக் கடன் 20 % கூடுதல் காலக் கடன்  வழங்கலாம்.

இந்தக்கூடுதல் கடனுக்கு வங்கிகளின் வட்டிவீதம்9.25 சதவீதமாகவும் வங்கி சாரா நிதிநிறுவனங்கள் அளிக்கும் கடனுக்கான வட்டி 10.55 முதல் 16.25% எனஅமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இந்தக் கடன்களுக்கு அரசு 100 சதவீதம் காப்புறுதி அளிக்கும். இந்த காப்புறுதி செய்யப்பட்ட கடன் வழங்க அரசு ரூ 41600 கோடி ஒதுக்கி இருப்பதாகவும் தெரிகிறது.

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதி பகிர்வு குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன்படி இந்திய மாநிலங்களுக்கான மே மாத பங்குத் தொகையாக 46 ஆயிரத்து 38 கோடி ரூபாய் நிதி பகிர்வு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 1,928 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேசத்திற்கு 8,255 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.