10-ம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி நாளை பள்ளிக்கு வர வேண்டுமென்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து - பள்ளிக்கல்வித்துறை

பதிவு செய்த நாள் : 20 மே 2020 13:43

சென்னை

10-ம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி நாளை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டுமென்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது..

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவு விவரம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

10-ம் வகுப்பு தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளதால் முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை வாபஸ் பெறப்படுகிறது.


ஜூன் 1ம் தேதி நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் 1-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அரசு அறிவித்ததால், அரசு, உதவி பெறும் மற்றும் பகுதி உதவி பெறும் (தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை) பள்ளிகளில்  பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் வேறு மாவட்டங்களில் தற்போது தங்கி இருப்பின் அவர்கள் தற்போது பணிபுரியும் பள்ளி அல்லது சார்ந்த மாவட்டத்திற்கு 21.05.2020-ற்குள் வந்து இருக்க வேண்டும். அதனை சார்ந்த பள்ளித் தலைமை  ஆசிரியர் உறுதி செய்து வராத ஆசிரியர்கள் பற்றிய விவரங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் 21.05.2020 காலை 11 மணிக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.

பொதுத் தேர்வு நடைபெறும் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தவிட்டுள்ளது.