தெருவில் கிருமிநாசினி தெளிப்பதால் கரோனா வைரஸ் சாகாது: உலக சுகாதார நிறுவனம் தகவல்

பதிவு செய்த நாள் : 17 மே 2020 12:39

ஜெனிவா

உலகில் பல நாடுகளில் கிருமிநாசினிகள் தெருக்களில் அளிக்கப்படுகின்றன இவை கரோனா வைரஸ் கொல்லுவதாக நம்பப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல தெருக்களில் கிருமிநாசினிகளைத் தெளிப்பதால் கரோனா வைரசை கொல்ல முடியாது என்று உலக சுகாதார நிறுவனம் சனிக்கிழமையன்று அறிக்கை ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளது.

தெருக்களில் கிருமி நாசினிகளை அடிப்பதாலும், கிருமி நாசினிகளை உயர் அழுத்த வேகத்தில் புகைபோல வெளியிடுவதால் கரோனா வைரஸ் கொல்லப்படுவதில்லை. தெருக்களில் உள்ள குப்பைகளில் கரோனா வைரஸ் தங்கி வாழ்வதும் இல்லை. தெருக்களிலும் சந்தை கடைகளிலும் மார்க்கெட் பகுதிகளிலும் கிருமிநாசினிகள் தெளிப்பதால் பயன் இல்லை. தெளிக்கப்படும் கிருமிநாசினிகள் தரையின் முழு பரப்பிலும் பரவுவதில்லை. தெருக்களில் பரவிக் கிடக்கும் குப்பைகள் ஆர்கானிக் பொருட்கள் அந்த கிருமி நாசினிகளை செயலிழக்கச் செய்துவிடுகின்றன.

அதைத் தவிர தெருக்களில் சேர்க்கப்படும் கிருமி நாசினிகள் பல வேண்டாத விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. அவை சுவாச மண்டலத்தை தாக்கி நோயாளிகளுக்கு பாதிப்பை கடுமையாக்குகின்றன, அதனால் அவர்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு அவர்கள் உயிர் இழக்க வாய்ப்பு ஏற்படுகிறது. 

குறிப்பிட்ட காரணங்களுக்காக கட்டாயம் கிருமிநாசினி பயன்படுத்தப்பட வேண்டும் என்று கருதினால்  கிருமிநாசினி திரவத்தில் துணியை நனைத்து  அந்த துணியால் தரையைத் துடைக்க வேண்டும். 

இவ்வாறு உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.