அண்ணன் மகனுடன் கள்ளக்காதல் வைத்திருந்த அத்தை கத்தியால் குத்திக் கொலை: வேலூரில் பதுங்கிய மருமகன் கைது

பதிவு செய்த நாள் : 16 மே 2020 17:17

சென்னை,

அண்ணன் மகனுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட அத்தை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற மருமகனை போலீசார் வேலுாரில் கைது செய்தனர்.

சென்னையை அடுத்த புழல் விநாயகபுரம், பரிமளா நகரை சேர்ந்தவர் குணசுந்தரி (வயது 37). இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். குணசுந்தரியின் அண்ணன் சேகரின் மகன் கணேஷ் (வயது 27). பெயிண்டரான இவர் கொளத்தூர் பாலாஜி நகரில் வசித்து வந்தார்.

கணேஷுக்கு 5 வருடங்களுக்கு முன்பு விழுப்புரத்தை சேர்ந்த அருட்செல்வி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அத்தைமுறை கொண்ட குணசுந்தரியுடன் கணேசுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. இது அருட்செல்விக்கு தெரியவந்ததும், கணேஷுடன் சண்டை போட்டு விட்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். குழந்தைகள் மட்டும் கணேஷின் பெற்றோருடன் வசித்து வருகின்றனர். கணேசுக்கு போதிய வருமானம் இல்லாததால், அவருக்கு மாதா மாதம் பணம் உள்ளிட்ட தேவையானவற்றை குணசுந்தரி செய்து வந்துள்ளார். இந்நிலையில் குணசுந்தரியின், தம்பி மனைவி தீபாவு கணவரை இழந்ததால் குணசுந்தரியின் வீட்டில் இருந்து வந்தார். அங்கு அடிக்கடி சென்று வந்ததால் கணேசுக்கு தீபாவுடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. கணேசுடன் தீபா கணவன் மனைவி போல குடும்பம் நடத்தி வந்துள்ளார். இது குணசுந்தரிக்கு தெரியவந்ததும் தன்னை விட்டு விட்டு அவளுடன் ஏன் உறவு வைக்கிறாய் என கணேஷை கண்டித்துள்ளார். 

அதனை காதில் வாங்காத கணேஷ் கடந்த 1 மாதத்திற்கு முன்பு தீபாவை கொளத்துார் பாலாஜி நகரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இதனால் குணசுந்தரி ஆத்திரமடைந்துள்ளார். தன்னிடம் இருந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்து விட்டு வேறு ஒரு பெண்ணுடன் செல்கிறாயே என்று கணேஷ்  வீட்டிற்கு சென்று குணசுந்தரி நேற்று முன்தினம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இதனால் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஆத்திரத்தில் கணேஷ் வீட்டுக்குள் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் அத்தை குணசுந்தரியை சரமாரியாக குத்தினார். மார்பு, முதுகிலும், கழுத்து என குத்து விழுந்து குணசுந்தரி ரத்தவெள்ளத்தில் துடித்தார். அவரது கார் டிரைவர் குணசுந்தரியை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் வழியிலேயே குணசுந்தரி இறந்து விட்டார். தகவல் கிடைத்ததும் கொளத்துார் இன்ஸ்பெக்டர் சண்முகவேலன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை செய்யப்பட்ட குணசுந்தரி பிரபல ரவுடி வெல்டிங்குமாரின் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி கதிர் என்பவரின் சகோதரி என்பது குறிப்பிடதக்கது. இதற்கிடையில் தனிப்படை போலீசார் தப்பியோடிய கொலையாளி கணேஷை வேலுார், கொண்டமல்லி கிராமத்தில் வைத்து கைது செய்தனர். அத்தை குணசுந்தரியை கொலை செய்து விட்டு தனது பைக்கில் வேலுாருக்கு தப்பிச்சென்றது தெரியவந்தது.