டெஸ்லா காரை திருட முயன்றவனை மொபைல் செயலி மூலம் வாகனத்தில் வைத்து பூட்டிய உரிமையாளர்

பதிவு செய்த நாள் : 15 மே 2020 22:26

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பாஸ்டவ் நகரில் 21 வயதான சார்லி ஸ்மித் என்பவர் கடந்த மே 8ஆம் தேதி டெஸ்லா 3 மாடல் காரை திருட முயன்ற போது அதன் உரிமையாளரால் காரில் அடைத்து வைக்கப்பட்டார்.

சார்லி ஸ்மித் காரில்   நுழைந்து அதன் உரிமையாளரை காரிலிருந்து வெளியேற உத்தரவிட்டார்.  உரிமையாளரும் அதற்கு இணங்கி காரில் இருந்து வெளியேறினார். வெளியேறிய உடனேயே தனது ஐபோனில்  உள்ள செயலி மூலம் கார் கதவுகளை உள்ளே இருந்து திறக்க முடியாதபடி பூட்டினார்.

இதனால் சார்லி ஸ்மித் காரிலேயே சிக்கிக் கொண்டார். உரிமையாளர் போலீசுக்கு தகவல் அளிக்க அவர்கள் வந்து சார்லி ஸ்மித்தை கைது செய்தனர்.

நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட டெஸ்லா மாடல் கார்களை அதன் உரிமையாளர்கள் தங்கள்  மொபைல் போன்கள் மூலம்  கட்டுப்படுத்த முடியும். அந்த வசதியை  கார் உரிமையாளர் சாதுரியமாக பயன்படுத்தி திருடனை சிக்க வைத்துள்ளார்.