மே 18 ம்தேதி முதல் சுழற்சி முறையில் பணி: பள்ளிக்கல்வி ஊழியர்களுக்கு சுற்றறிக்கை

பதிவு செய்த நாள் : 15 மே 2020 18:24

சென்னை.

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும்  வரும் மே 18 ம்தேதி முதல் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்கக இணை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை வருமாறு:

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக  அரசால் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட பின்னர் தற்போது நடைமுறைகள்  அரசால் தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து அரசு அலுவலகங்கள் செயல்படுவது குறித்து  அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வரும் மே 18 ம்தேதி முதல் வாரத்திற்கு 6 வேலை நாட்கள்  அரசு அலுவலகங்கள் பணியாற்ற வேண்டும் எனவும் 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் மே 18 ம்தேதி சுழற்சி முறையில்  அலுவலக பணிக்கு வருகை தர வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.

தனிநபர் இடைவெளியை பின்பற்றிட ஏதுவாக ஒவ்வொரு நாளும் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டிய பணியாளர்கள் குறித்து 18 ம்தேதி உரிய அறிவுரைகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.