தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் கே.பி. அன்பழகன்

பதிவு செய்த நாள் : 15 மே 2020 12:25

சென்னை

தமிழ்நாட்டில் இருந்து கரோனா வைரஸ் பாதிப்பு நீங்கிய பிறகே கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கல்லூரிகள் திறப்பு குறித்து அமைச்சர் கே.பி. அன்பழகன் அளித்த விளக்கத்தில்,

மாணவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை என்ற நிலை உருவாகிய பிறகே கல்லூரிகள் திறக்கப்படும்.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் முடிந்த பிறகே கல்லூரிகளை திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தங்கியிருக்கும் கல்லூரிகளில் இருந்து முழுவதும் வெளியேற்றப்பட்ட பிறகே கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கல்லூரிகள் தூய்மைப்படுத்தப்பட்டு பிறகு மாணவர்களுக்காக திறக்கப்படும்.

கல்லூரிக்கான செமஸ்டர் தேர்வை எந்த நேரத்திலும் நடத்த அரசு தயாராகவே உள்ளது.

பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யவும் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது

12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கிய உடன், கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்படும்  என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.

முன்னதாக மே 13ம் தேதி அன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரிகள் ஆகியவற்றில் ஊரடங்கு தளர்வுக்கு பின் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தலைமையில்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.