படித்ததில் பிடித்தது! – 7

பதிவு செய்த நாள் : 14 மே 2020

மேன்மையானவர்கள் , மேன்மையான விஷயங்களை எழுதும்போதுதான், மேன்மைகளின் மேன்மைகளே நமக்குப் புரிகிறது. வீட்டில் அலமாரிகளில், பரண்மேல் இன்று சேமித்து வைத்த என் மூலதனமான  புத்தகங்களை எடுக்க ஆரம்பித்தேன்.

அப்போது கண்ணில் பட்டது இந்த புத்தகம்.

விகடன் பிரசுரம் 2004ம் வெளியிட்ட புத்தகம். எழுதியவர் சின்னகுத்தூசி. இவரது இயற்பெயர் தியாகராஜன். தனது 74வது வயதில் கட்டை பிரம்மச்சாரியாக காலமானார்.

பள்ளி ஆசிரியராக வாழ்க்கையை தொடங்கிய சின்னகுத்தூசியை திராவிட இயக்கங்களின் கொள்கை ஈடுபாடு,அரசியல் களத்துக்கு கொண்டு வந்தது.1962ல்  'மாதவி'இதழில் தொடங்கிய இவரது பத்திரிகையுலகப் பயணம். 40 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் சிறிய அறையில் புத்தகங்கள், பத்திரிகை குவியல்களுக்கு மத்தியில் எந்நேரமும் எழுத்தும், சிந்தனையும்தான். அவரை ஒரு  'நடமாடும் நூலகம்' என்றே சொல்லலாம்.

பெரியாரின் கொள்கைப் பிரச்சார எழுத்தாளராகத் திகழ்ந்த 'குத்தூசி'குருசாமியின் நினைவாக 'சின்னக்குத்தூசி'என்று புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதிக்கொண்டிருந்தார்.

தீவிர திராவிட இயக்கக் கொள்கையில் ஈடுபாடு கொண்ட இவர், மாற்றுக்கருத்து கொண்டவர்களையும் மனதார நேசிக்கும் மானுடப் பண்பு மிக்கவர். `மனித குணங்கள் வேறு. அவர்கள் கொண்ட கொள்கைகள் வேறு.

மனிதர்களின் கொள்கைகளோடு தான் எனக்கு வேறுபாடு. மனிதர்களோடு அல்ல’ என்பார். பொதுவாக திராவிடக் கொள்கைகளை பின்பற்றுபவர்கள்'பிராமண'எதிர்ப்பாளர் களாகவே இருப்பார்கள் என்கிற ஒரு எண்ணம் உண்டு.

அதை தன்னுடைய 'எத்தனை மனிதர்கள்'என்ற இந்தப் புத்தகத்தில் உடைத்தெறிந்தெரிந்திருக்கார்.

மனிதர்களின் கொள்கைகளோடு தான் எனக்கு வேறுபாடு. மனிதர்களோடு அல்ல’ என்பார். பொதுவாக திராவிடக் கொள்கைகளை பின்பற்றுபவர்கள்'பிராமண'எதிர்ப்பாளர் களாகவே இருப்பார்கள் என்கிற ஒரு எண்ணம் உண்டு.

அதை தன்னுடைய 'எத்தனை மனிதர்கள்'என்ற இந்தப் புத்தகத்தில் உடைத்தெறிந்தெரிந்திருக்கார்.  பாரதியாரின் நெருங்கிய நண்பர். 1928 ல் ஆனந்தவிகடனின் சேர்ந்தவர். 1944ம் வருடம் ஆனந்தவிகடனின் சித்திர ராமாயணம் 2 வருடங்கள் எழுதியவர். 1965ம் வருடம் தன்னுடைய ராமானுஜர் புத்தகத்திற்காக சாகித்ய அகாடமி விருது வாங்கியவர் பி.ஸ்ரீ ( இவர் என் கொள்ளுத்தாத்தா). ` சில்வர் டங்’ சீனுவாச சாஸ்திர்யார் என்ற ஆங்கில புலமை பெற்ற சுதந்திர போராட்ட வீரர்.  இசை மேதை வைத்தியநாதய்யர்,   சரித்திராசிரியர் வெ. சாமிநாத சர்மா. காந்தியின் நெருங்கிய தோழர் கோ. ராமசந்திர ராவ், கல்கி,  ராஜாஜி. இவர்களின் மேன்மைகளையெல்லாம் சொல்லியிருக்கிறார்.


மனிதகுல உதாரணங்களாக வாழ்ந்த 28 பேர்களை பற்றிய இந்த நூல் அருமையான நூல். 

எப்படிப்பட்ட மனிதர்களெல்லாம் இந்த மண்ணில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை காட்டும் புத்தகம்.

                              எத்தனை மனிதர்கள்!

                                               சின்னகுத்தூசி

உண்ணாவிரதங்கள்.....

            உண்ணாவிரதங்கள் அரசியல் வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கங்கள்

சுதந்திர போராட்ட கால உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை தேர்ந்தெடுத்து கட்டுரை ஆக்கி உள்ளார்  சின்னக்குத்தூசி. சின்னக்குத்தூசி அமைத்த சொல் சித்திரத்தை தொடர்வோம்:

'இந்தியர்களுக்கு ஆட்சியில் எந்த அளவுக்கு பங்கு தரலாம், என்னென்ன உரிமைகளை தரலாம். என்று ஆய்வு நடத்த பிரிட்டிஷ் அரசு, 1927-ல் ராயல் கமிஷன் ஒன்றை அமைத்தது.

சைமன் என்பவர் தலைமையில் அமைந்த இந்த குழு இந்தியாவுக்கு வந்தபோது, கமிஷன் உறுப்பினர்களாக இந்தியர் எவரும் நியமிக்கப்படவில்லை என்பதற்காக, சைமன் கமிஷனை காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்தது.

அதுமட்டுமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சைமன் கமிஷன் விசாரணை நடத்த வரும் போது, அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், கருப்புக் கொடி போராட்டம் நடத்துவது என்றும் அது முடிவு செய்தது.

லாகூருக்கு சைமன் கமிஷன் வந்தபோது, லாலா லஜபதிராய் தலைமையில் கமிஷனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஊர்வலம் நடந்தது. போலீசார் போராட்டக்காரர்களை விரட்டத் தடியடி நடத்தினார்கள் அதில் பலத்த காயமடைந்த லாலா லஜபதி ராய், சில நாட்களுக்குள் காலமாகிவிட்டார். பட்டப்பகலில் ஆயிரக்கணக்கானவர்கள் கண் முன்பு, வயது முதிர்ந்த பொதுமக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்ட லாலா லஜபதி ராய் அடித்து காயப்படுத்தியவர்களை  பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்பதே அன்று பொதுமக்கள் அனைவரது தவிப்பாகவும் இருந்தது.

பொதுமக்களின் இந்த உணர்ச்சிப் பெருக்கு செயல்வடிவம் தருவது என்று பகத்சிங்கின் இயக்கம் முடிவு செய்தது.

லாலா லஜபதி ராய் மீது இனவெறி தாக்குதல் நடத்திய உதவி போலீஸ் சூப்பிரண்டெண்ட் சாண்ட்ர்ஸ், போலீஸ் நிலைய வாசலிலேயே 1928-ல் சுட்டுக் கொல்லப்பட்டான். நாட்டு மக்களைத் தட்டியெழுப்ப, பகத்சிங்கின் இயக்கம் கிளப்பிய முதல் வேட்டுமுழக்காகவே இது இருந்தது.

தொழிலாளர் வர்க்கத்துக்கு எதிராகத் தொழில் தகராறு மசோதாவை நிறைவேற்ற அப்போதைய மத்திய சட்டசபை கூடியது. மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோது ஆளும் தரப்பினர் உட்கார்ந்திருந்த இடத்தில் வெடிகுண்டுகள் வெடித்தன.

பகத்சிங்கும்- தத் என்பவரும் கைது செய்யப்பட்டார்கள். `வெடி குண்டு வீசியது நாங்கள்தான்’ என்று சம்பவத்துக்கு பொறுப்பேற்று அதற்கான காரணங்களை விளக்கி வாக்குமூலம் தந்தார் பகத்சிங் தொடர்ந்து லாகூரில் பகத்சிங் இயக்கத்துக்கு சொந்தமான வெடிகுண்டு உற்பத்திச்சாலையையும் போலீசார் கண்டுபிடித்து விட்டார்கள் பகத் சிங் உட்பட பலர் மீது சதி வழக்கு தொடுக்கப்பட்டது பகத்சிங்கும் அவரது தோழர்களும் சிறையில் அடைக்கப்பட்ட போது அவர்களை கொள்ளைக்காரர்கள் -கொலைகாரர்களை போல பிரிட்டிஷ் அரசு நடத்தியது கண்டு நாட்டு மக்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தனர் `அரசியல் கைதிகளை மரியாதையாக நடத்த வேண்டும்.சகல அரசியல் கைதிகளையும் ஒரே வகுப்பில் அடைக்க வேண்டும். நல்ல உணவு வழங்க வேண்டும். பத்திரிகைகள் புத்தகங்கள் எல்லாம் தரவேண்டும். எழுதுவதற்கு வேண்டிய காகிதங்களையும் வசதிகளையும் செய்து தர வேண்டும்.’ என்று கோரிக்கை வைத்தார்கள். அரசாங்கம் அதை  அலட்சியப்படுத்திய போது `எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையில் சிறையில் நீங்கள் தரும் உணவை சாப்பிட மாட்டோம்’ என்று அறிவித்துவிட்டு, `சாகும்வரை உண்ணாவிரதம்’ என்பதாக போராட்டத்தை தொடங்கினார்கள்

இன்று யாராவது ஒரு புள்ளி வந்து ஆரஞ்சு ஜூஸ் கொடுத்தால். அந்த வினாடியே `சாகும்வரை உண்ணாவிரதம்’ என்ற போராட்டம் செத்து விடுவதை அடிக்கடி பார்க்கிறோம்.

`பகத் சிங் தலைமையில் நடந்த அந்த போராட்டம் எப்படி நடந்தது? தோழர்கள் எப்படிப்பட்ட சோதனைகளையெல்லாம் சந்தித்து, உண்ணாவிரதத்தை உறுதியாக இறுதிவரை தொடர்ந்தார்கள்..’ என்பதை, அப்போது சிறையில் இருந்த தோழர் அஜய்குமார் கோஷ் விவரிக்கிறார்.` அஜய்கோஷ் கட்டுரைகளும் சொற்பொழிவுகளும்’ என்ற புத்தகம் அதை அழகாக விவரிக்கிறது.

ஏகே கோஷ் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட அஜய்குமார் கோஷ் இந்திய சுதந்திரத்திற்கு பின் பிளவுபடாத கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 1951-லிருந்து 1962 வரை தன் கடைசி நாள் வரை பணியாற்றியவர்

லாகூர் இரண்டாவது சதி வழக்கு தொடர்பாக பகத் சிங்குடன் கைது செய்யப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களில் இவரும் ஒருவர்.

`உண்ணாவிரதம் தொடங்கி பத்து நாட்கள் முக்கியமாக எதுவும் நடைபெறவில்லை. பசி அதிகரித்தது. அத்துடன் உடல் பலவீனமும் அதிகரித்தது. ஒருவாரம் முடிந்தபின்பு சிலர் படுக்கையில் கிடக்க வேண்டி வந்தது. வழக்கு விசாரணையும் நடந்து கொண்டிருந்ததால், நீதிமன்றத்தில் உட்கார்ந்திருப்பது அவர்களுக்கு பெரும் கஷ்டமாகவே இருந்தது. ஆனால் முதன் முதலில் தோன்றிய பயம் போய்விட்டது. உண்ணாவிரதம் அவ்வளவு கஷ்டமான தாகத் தோன்றவில்லை ஆனால், உண்மையான போராட்டம் இனிமேல்தான் வரப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.’  என்கிறார் அஜாய் கோஷ்

அப்புறம் என்ன நடந்தது?

முரடர்களான  கைதி வார்டர்கள் புடைசூழ, டாக்டர்கள் ஒவ்வொரு அறைக்குள்ளும் வந்தார்கள். உண்ணா விரதிகளை படுக்கவைத்து, பலவந்தமாக ரப்பர் குழாய்களை மூக்குக்கு உள்ளே புகுத்தி,  அதற்குள் பால் ஊற்றினார்கள். ஒவ்வொரு கைதிக்கும் அந்த நிலையில் எந்த அளவு பலம் இருந்ததோ,அத்தனையையும் பயன்படுத்தி, இந்த கட்டாய உணவு ஊட்டலை அவர்கள் எதிர்த்தார்கள்.

உண்ணாவிரதம் ஆரம்பித்த பதின்மூன்றாவது நாள் இரவில் ஜதீந்தரநாத்  தாஸ் (சுருக்கமாக ஜதின் தாஸ்) என்ற தோழரின் உடல்நிலை படுமோசமானது.

பலாத்காரமாக உணவு ஊட்டும் போது ஏதோ தவறு நேர்ந்து விட்டதாகவும் ஜதின் தாஸ் மயக்கமுற்று கிடப்பதாகவும் துணை ஜெயில் அதிகாரி ஒருவர் சொல்ல, கைதிகள் எல்லோர் மத்தியிலும் இந்தச் செய்தி காட்டுத் தீயாக பரவ அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது.

அன்றிரவே அவர் இறந்து போய்விடுவார் என்று டாக்டர்கள் பயந்தார்கள். எனினும் அவர் பிழைத்து விட்டார். ஆனால் கொடிய ஜுரத்தால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார். அப்போதும்கூட, மருந்துகளையும் உணவையும் அறவே மறுத்துவிட்டார். இதனால் பலருக்கு பலாத்காரமாக உணவு ஊட்டுவது என்பது முடியாத காரியம் ஆகிவிட்டது.

இதிலிருந்து உண்ணாவிரதப் போராட்டம் முன்னைவிட உறுதியும் உக்கிரமும் பெற்றுவிட்டது. ஒவ்வொருவராக ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார்கள். ஆஸ்பத்திரிகள் நிறைந்துவிட்டது. வழக்கு விசாரணை ஒத்தி போடப்பட்டது.

அதன்பிறகு நடந்தவற்றை அஜய் கோஷ் விவரிக்கிறார்  ` டாக்டர்களை ஏமாற்ற, நாங்கள் பல உபாயங்களைக் கையாண்டோம். கிஷோர், மிளகாய்பொடியை விழுங்கி, கொதிக்கும் நீரை குடித்தார். தொண்டையும் புண்ணாகியது. எனவே, ரப்பர் குழாயை உள்ளே புகுத்தியபோதெல்லாம் இருமல் ஏற்பட்டதால், குழாயை வெளியே எடுக்க வேண்டியதாயிற்று. இல்லையானால்  மூச்சு திணறி அவர் இறந்து போகத் தான் நேரிடும்.

எனக்கு பலாத்காரமாக உணவு ஊட்ட பட்டபோது, அதை வாந்தி  எடுப்பதற்காக உடனடியாக சில ஈக்களைப் பிடித்து விழுங்கினேன் . எங்களது உபாயங்களை தெரிந்துகொண்ட டாக்டர்கள், வேறு ஒரு ஏற்பாட்டைச் செய்தார்கள்.

எங்களுடைய அறைக்குள்ளிருந்த  தண்ணீரையெல்லாம். அப்புறப்படுத்திவிட்டு, அதற்கு பதிலாக குடங்களில் பாலை ஊற்றி வைத்தனர். இதைவிடக் கொடிய சோதனையை கற்பனை செய்ய முடியாது. ஒரு நாள் கழிந்தது சகிக்க முடியாத அளவு தாகம் ஏற்பட்டது. குடத்தில் இருக்கும் என்று ஒவ்வொரு தருணத்திலும் நினைத்து எட்டிப் பார்ப்பேன். பால் என்று தெரிந்ததும் திரும்பி விடுவேன். பைத்தியம் பிடித்து விடும் போன்ற கோர நிலைமை. இந்த உபாயத்தை கண்டுபிடித்தவன் எனக்கு முன்னால் இருந்திருந்தால், அவனை அங்கேயே கொன்றிருப்பேன்.

இனிமேல் என்னையே நான் நம்ப முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. இன்னும் ஒரு சில மணி நேரங்களுக்குள் அந்த உறுதி தளரப் போகிறது பாலை குடிக்க தான் போகிறேன் என்பதை அறிந்து கொண்டேன்.

தொண்டை வறண்டு . நாக்கு வீங்கிப் போய் விட்டது. காவலாளியை கூப்பிட்டேன். இரண்டு ஒரு சொட்டு தண்ணீர் கொண்டு வந்து தரும்படி கேட்டேன் `என்னால் முடியாது. எனக்குத் தரவில்லை’ என்று பதிலளித்தான்.

எனக்கு ரொம்ப கோபம் வந்தது. குடத்தை எடுத்து கதவில் வீசி எறிந்தேன். அது துண்டுதுண்டாக நொறுங்கிப் போயிற்று.காவலாளியின் மேலெல்லாம் பால் தெறித்தது. அவன் பயந்து நடுநடுங்கி பின்னால் நகர்ந்தான். எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதாகவே அவன் கருதினான். அவன் நினைத்ததும் ஏறக்குறைய உண்மைதான்’ என்று எழுதியிருக்கிறார் கோஷ்.

ஒவ்வொரு அறையிலும் உண்ணாவிரதகளின் நிலை இதுதான். அவர்கள் எல்லோருமே பால்குடங்களை எடுத்து வீசி உடைத்தார்கள்.

இந்தச் செய்திகள் அயல்நாட்டு ஏடுகளிலும் வந்தது. உலகத்தின் கவனம் இந்தியாவில் உள்ள சிறைகளின் பக்கம் திரும்பியது. இதற்கிடையில் தாஸின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. மரணத்தின் எல்லையை நெருங்கி விட்டார். சதாசிவா போன்ற இன்னும் சிலரின் உடல்நிலையும் கவலைக்குள்ளானது.  இறுதியில் அரசாங்கம் பணிந்தது.

`எந்தெந்த ஜெயில் சட்டங்களை மாற்றி அமைப்பது’ என்பதை சிபாரிசு செய்ய அதிகாரிகள் அல்லாதவர்கள் கொண்ட ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி சிறையிலிருந்த உண்ணாவிரதிகளைச் சந்தித்து கருத்து கேட்டது.

உண்ணாவிரதிகள்  தெரிவித்த பெரும்பாலான கோரிக்கைகளை ஒப்புக்கொண்டதாக கமிட்டி வாக்குறுதி தந்தது அதனடிப்படையில் உண்ணாவிரதத்தை நிறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இன்றும் கூட சிறை தண்டனை அனுபவிக்கும் அரசியல்வாதிகள் கூடுதலாகவோ, சுமாராக சில வசதிகளை சிறையில் பெற முடிகிறது என்றால், அதற்காக தன் உயிரையே தியாகம் செய்த மாவீரன் ஜதின் தாஸ் முக்கிய காரணம்’ அவரது கடைசி நிமிடங்கள் பற்றி அஜய் கோஷ் எழுதுகிறார்

`அதோ ஜதின் தாஸ் படுத்திருக்கிறார். அவரைச்சுற்றி நாங்கள். துக்கம் என் தொண்டையை அடைக்கிறது. அதோ, அவர் ஆவி பிரிகிறது. நான் தலையை கொஞ்சம் தூக்கி பார்த்தேன். கல் நெஞ்சு படைத்த, ஜெயில் அதிகாரிகளின் கண்களில் கூட கண்ணீர் ததும்பியது. ஜெயிலுக்கு வெளியே கூடியிருந்த பிரம்மாண்டமான கூட்டத்தினரிடம் ஒப்படைக்க ஜதின் தாஸ் சடலத்தை ஜெயில் வாசற்படிக்கு கொண்டு போனபோது, லாகூர் போலீஸ் சூப்பிரண்டெண்ட் ஹேமில்டன் ஹார்டிங், தனது தலையில் உள்ள தொப்பியை கழற்றி தலைவணங்கி மரியாதை செலுத்தினார்’ என்று அந்த புகழ்பெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் இறுதிப் பகுதியை உருக்கம் பொங்கிட முடிக்கிறார் அஜாய் கோஷ்.

       காலத்தை வென்ற கவிதைகள்!

ஒருவர் இரண்டாவது வகுப்பு மட்டுமே படித்தார். 29 வயதுவரை மட்டுமே வாழ்ந்தார். அதற்குள் 17 தொழில்களை செய்து இருக்கிறார்’என்றால் நம்ப முடிகிறதா?

8 ஆண்டுகாலம் தான் திரைப்பட பாடல்கள் எழுதினார். மொத்தமே 256 பாடல்கள்தான் எழுதினார். ஆனால் எண்ணாயிரம் பாடல்கள் எழுதி புகழ் பெற்ற கவிஞர்களுக்கு நிகராக திரைப்படப் பாடல்களில் ஒரு புரட்சியை செய்து விட்டார் என்றால் அதுவும் நம்பமுடியாத அதிசயமாகத்தான் இருக்கிறது.

பட்டுக்கோட்டையார் என்று பட உலகில் கொடிகட்டிப் பறந்த கவிஞர் கல்யாணசுந்தரத்தின் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் பொதுவுடமைக் கட்சியின் தலைவர் ஜீவானந்தம் `கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் கை குறிப்புகளை அண்மையில் ஆராய்ந்து கொண்டிருந்தேன். அந்த ஆராய்ச்சியில் சுவை நிறைந்த குறிப்பு ஒன்று எனக்கு கிடைத்தது. பட்டுக்கோட்டை  29 ஆண்டு வாழ்வில் 17 தொழில்களில் ஈடுபட்டு இருக்கிறார். இறுதியில் கவிஞராக உருவாகி இருக்கிறார் ’என்று குறிப்பிடும் ஜீவா பட்டுக்கோட்டை ஈடுபட்ட தொழில்களை பட்டியலிட்டிருக்கிறார்.

விவசாயி, மாடு மேய்ப்பவன், மாட்டு வியாபாரி, மாம்பழ வியாபாரி, இட்லி வியாபாரி, முறுக்கு வியாபாரி, தேங்காய் வியாபாரி, கீற்று வியாபாரி, மீன் நண்டு பிடிக்கும் தொழிலாளி, உப்பளத் தொழிலாளி, மிஷின் டிரைவர், தண்ணீர் வண்டிக்காரன். அரசியல்வாதி, பாடகன். நடிகன், நடனக் கலைஞன்’ என்று 16 தொழில்களில் ஈடுபட்டு வநதுபதினேழாவது தொழிலாகத்தான் திரைப்படங்களுக்கு பாட்டு எழுத வந்த எட்டாண்டுகள் எழுதினார். இமையப்  புகழ் பெற்றார் என்பதை படிக்கும்போது இப்படியெல்லாம் கூட நடக்குமா என்ற வியப்பே எவருக்கும் மேலிடும்.

இசைஞானி இளையராஜா என்ற புகழ் கோபுரம் உருவாக அடித்தளமாக இருந்தவர் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன் என்றால் பட்டுக்கோட்டையார் என்று சாதனை சிகரத்துக்கு அவரது அண்ணன் கணபதி சுந்தரம் தான் அஸ்திவாரமாக அமைந்திருக்கிறார்.

வரதராஜன் பொதுவுடமைக் கட்சியில் நாட்டம் கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் இசை முழக்கம் செய்தவர்,என்பதோடு தாம் பாடும் பாடல்களை தாமே சொந்தமாக மெட் அமைக்கும் திறன் பெற்றிருந்தார்.

பட்டுக்கோட்டையாரின் அண்ணனும் அப்படித்தான் அவர் சுயமரியாதை இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டவராக இருந்து பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பும் வகையில் பாடல்களை இயற்றினார்.

இளையராஜாவும். கங்கை அமரனும், அண்ணனோடு அமர்ந்து பாடி அண்ணனிடம் பயின்ற பாடல் இசை பயிற்சி யாலேயே  திரையுலகில் மின்னல் வேகத்தில் முன்னேறினார்கள்.

பட்டுக்கோட்டையாரும் அண்ணன் தந்த ஊக்கத்தாலேயே பாடல் எழுதுவதில் தீவிரம் காட்டினார். பத்தாண்டு காலத்திற்குள் படவுலகைத் தனது பாட்டு கோட்டையாகவே மாற்றிக் கொண்டு விட்டார்!

பட்டுக்கோட்டையார் எழுதிய முதல் கவிதை எது?

பட்டுக்கோட்டையார் சிறுவனாக இருந்தபோது ஒரு நாள் வயல் வேலையை பார்த்துவிட்டு திரும்பினார் உரையான் குலன் என்ற ஏரியின் கரையில் ஒரு வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்தார். அப்போது ஒரு இளம் கெண்டை மீன் நீரில் துள்ளி குதிப்பதும், கரையோரத்தில் கிடந்த தாமரை இலையில் நீர் முத்துக்களைச் சிந்திவிட்டு, தலைகீழாய் குதித்து மறைவதும் பட்டுக்கோட்டையாரின் மனதில் ஓவியமாக படிந்தது.அந்த ஓவியம் பட்டுக்கோட்டையாரிடமிருந்து

ஓடிப்போ ஓடிப்போ கெண்டைக் குஞ்சே-கரை

ஓரத்தில் மேயாதே கெண்டைக் குஞ்சே!

பூண்டில் காரன் வரும் நேரமாச்சு -ரொம்பத் துள்ளிக் குதிக்காதே கெண்டைக் குஞ்சே'

என்ற கவிதையாக வெளிவந்தது `இந்த கவிதையை பட்டுக்கோட்டையார் எழுதிய போது அவருக்கு வயது 14 இதுவே அவருடைய முதல் கவிதை’ என்கிறார் கவிஞர் ஜீவபாரதி.

பாரதியாரோடு நெருக்கமாக இருப்பது பாரதியாரால் பாராட்டப்பட்டு புரட்சிக் கவிஞராக எண்ணுபவர்கள் பாராட்டப்பட்ட பாரதிதாசன் போலவே, பட்டுக்கோட்டையாரும் பாரதிதாசனோடு நெருக்கமாக இருந்திருக்கிறார். அவரது உதவியாளராக பணியாற்றியிருக்கிறார். பாவேந்தர் நடத்திய `குயில்’ஏட்டிலும் சிறிது காலம் பணியாற்றி இருக்கிறார்.

பாவேந்தருனிருந்தபோது கல்யாணசுந்தரத்தின் பாடல் ஒன்றுக்கு பாவேந்தர் வாயால் பாராட்டு கிடைத்தது. அதுபற்றி ஜீவபாரதி தமது `காலமறிந்து கூவிய சேவல்’ என்ற நூலில்  சுவைபடச் சொல்லியிருக்கிறார்.

ஒருநாள் கவிஞர் பாரதிதாசன், கல்யாணசுந்தரத்தையும், அவரது சகாக்களையும் கூப்பிடுகிறார்.

ஒரு காகிதத்தை கையில் வைத்திருக்கிறார் அவர். எல்லோர் முன்னிலையிலும் அந்த காகிதத்தை காட்டி,

`ஏய் ஆம்பளைப் பசங்களா இதை பாருங்கடா... அகல்யா என்ற பெண் ஒருத்தி எப்படி பாடல் எழுதியிருக்கிறார். நீங்களும் எழுதுகிறீர்களே… என்று குதூகலம் கொப்பளிக்க சொல்லியபடியே கல்யாணசுந்தரம் தந்தார். காகிதத்தில் இருந்த கவிதையை கண்ணோட்டமிட்ட  கல்யாண சுந்தரத்திற்கு எதிர்பாராத அதிர்ச்சியாக இருந்தது. அது வேறு யாருமல்ல அவரேதான். அ. கல்யாணசுந்தரம் என்ற தனது பெயரை தான் சுருக்கி `அகல்யா’ என்ற பெயரில் அந்த கவிதையை எழுதி இருந்தார் அவர்.

பாவேந்தருக்கு அது தெரியாது. அதனால் என்ன? அந்தக் கவிதை, பட்டுக்கோட்டையாருக்கு ` வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் வாங்கி தந்த மறக்க முடியாத கவிதையாகிவிட்டது.

பட்டுக்கோட்டை யாரிடம் ஒரு பழக்கம் இருந்தது வைதீகர்கள் எதை எழுதினாலும் முதலில் ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதுவது போல பட்டுக்கோட்டையாரும் எதை எழுதினாலும் தலைப்பில் முதலில் `பாரதிதாசன் வாழ்க’ என்று எழுதி விட்டு விஷயத்தை எழுத ஆரம்பிப்பார். அந்த அளவுக்கு பாவேந்தரிடம் அவருக்கு பற்றும் பாசமும் மிகுந்திருந்தது.

பட்டுக்கோட்டையாரின் திரையுலக அனுபவங்கள் எப்படி இருந்தன. ஒரு உதாரணம்.

பட்டுக்கோட்டையாரும் நடிகர் ஒ.ஏ.கே.தேவரும் ராயப்பேட்டையில் எட்டு ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்து தங்கி இருந்தார்கள். அப்போது தேவருக்கும் நடிக்க வாய்ப்புகள் அதிகம் வரவில்லை. பட்டுக்கோட்டையாருக்கும் வாய்ப்பு இல்லை.

ஓய்வு நேரத்தில் எல்லாம் கவிஞர் கையில் கிடைத்த நோட்டுப் புத்தகங்கள், தாள்களில் எல்லாம் ஏராளமான பாடல்கள் எழுதி எழுதிக் குவித்திருக்கிறார்.

ஒருநாள் பட்டுக்கோட்டையார் தேநீர் அருந்தச் சென்றிருந்த போது பழைய பேப்பர் வாங்கும் வியாபாரி ஒருவர் `பழைய பேப்பர்’ `பழைய பேப்பர்’ என்று கூவிக்கொண்டே தெருவில் போனான்.

தேவர் அவனை கையை தட்டி அழைத்தார். அறையில் இருந்த பழைய செய்தி ஏடுகளையும் ,காகிதங்களையும் நோட்டுப் புத்தகங்களையும் ஒன்றுவிடாமல் திரட்டி எடுத்து பேப்பர்காரனிடம் போட்டுவிட்டார் தேவர்.

கவிஞர் டீ குடித்துவிட்டு அறைக்குத் திரும்பி வந்தார். அறை சுத்தமாக இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.அந்த மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. `எல்லா குப்பைகளையும் எடுத்து பழைய பேப்பர்காரனிடம் போட்டுவிட்டேன்’ என்று தேவர் சொன்ன போது கவிஞருக்கு திக்கென்று இருந்தது.

தான் எழுதி வைத்திருந்த பாட்டு நோட்டுக்கள், காகிதங்கள் எல்லாம் பத்திரமாக இருக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தார் எதையும் காணோம்.

`பாட்டு நோட்டுக்களை காணோமே எடுத்து வைத்திருக்கிறீர்களா?; என்று அவர் கேட்டபோது தேவர் `அடப்போங்க, உங்கநோட்டும்  நீங்களும்.. உங்க பாட்டை ஒரு பட முதலாளியும் எடுத்துக்கொள்ளவில்லை. பழைய பேப்பர்காரன் அதை மூன்று ரூபாய்க்கு எடுத்துக்கொண்டான்’ என்றார் சிரித்துக்கொண்டே.

பட்டுக்கோட்டையார் பாவம் அவருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அதில் பல நல்ல பாட்டுக்கள் எல்லாம் எழுதி வைத்திருந்தேன் என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.

`அட அது போனால் என்ன? அதைவிட நல்ல பாட்டுகளை உங்களுக்கு எழுத  தெரியாதா என்ன? எழுதுங்களேன்’ என்றார் தேவர்.

தேவரின் அந்த நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை. `படித்த பெண்’ என்ற ஒரு படத்துக்கு பாட்டு எழுத கவிஞருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அந்தப்படம் வெளிவருவதற்குள் `மகேஸ்வரி; என்ற படம் கவிஞரின் பாடலோடு வெளிவந்தது. அதன்பிறகு பட்டுக்கோட்டையாரின் பாடல்களுக்கு பஞ்சமே இல்லை எழுதி எழுதி புகழ் பெற்றார்.

அத்தனை பாடல்களும் ஓ ஏ கே தேவர் குறிப்பிட்டதைப் போல இன்னும் நல்ல பாட்டுக்கள். ஒன்றை ஒன்று மிஞ்சும் படியான இன்னும் இன்னும் நல்ல பாடல்கள்.

நீ ஏழைகளின்

பாடகனாக இருந்தாய்

ஆனால் உன் பாடல்கள்

ஏழைகளாக இருந்ததில்லை

என்ற கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகளுக்கு ஏற்ப இன்னும் நல்ல பாடல் இன்னும் நல்ல பாடல் என்று கருத்துச் செறிவு மிகுந்த பாடல்களை மட்டுமே எழுதிக் குவித்தார் பட்டுக்கோட்டையார்.

பட்டுக்கோட்டையார் மறைவு கேட்டு, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமானவர்கள் அவரது இல்லத்திற்கு வந்தார்கள்.

`பராசக்தி’ புகழ் பண்டரிபாய் ஒரு கையில் பணமும் இன்னொரு கையில் ஒரு காகிதமுமாக பட்டுக்கோட்டை யாருக்கு அஞ்சலி செலுத்தினார்.

பண்டரிபாய் தயாரிப்பில் வந்த `மகாலட்சுமி’ என்ற படத்துக்கு பட்டுக்கோட்டையார் எழுதிய பாடல் அந்த காகிதத்தில் இருந்தது.அவருக்கு அதற்காக தரவேண்டிய பணம் இன்னொரு கையில் இருந்தது.

தானா எவனும் கெட மாட்டான்

தடுக்கி விடாம விழ மாட்டான்

போனா எவனும் வரமாட்டான்-மேலே

போனா எவனும் வரமாட்டான்-இதப்

புரிஞ்சிகிட்டவன் அழ மாட்டான்

என்பதே அந்தப் பாடல். அதுவே திரைப்படத்திற்கு அவர் எழுதிய கடைசி பாடல். மாண்டவர் இனி மீண்டும் வர மாட்டார் என்பது அந்தப் பாடலின் கருத்தாக இருக்கலாம்.

ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் போன்ற சாகாவரம் பெற்ற பாடல்களைப் படைத்த கவிஞர்களுக்கு மரணம் ஏது?

அதனால்தான் பட்டுக்கோட்டையார் மறைவு பற்றி கவிதை எழுதிய ஜெயகாந்தன்

காலம் கவிஞரை கொன்றுவிடும்; அவர்

கவிதை காலத்தை கொன்று விடும் என்றார்!


கட்டுரையாளர்: சுதாங்கன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation