10ம் வகுப்பு மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்து வர பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

பதிவு செய்த நாள் : 13 மே 2020 13:27

சென்னை

10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களை தேர்வு மையங்களுக்கு அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பின் அழைத்து செல்லவும் பேருந்து வசதிகளுக்கான ஏற்பாடுகளை  செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது  என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார்.

ஜூன் 1ம் தேதி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் என நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நேரத்தில் இன்று பதில் அளித்துள்ளார் அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கடம்பூர் பகுதி மலைவாழ் மக்கள் சுமார் 2,000 பேருக்கு அதிமுக சார்பில் அரிசி வழங்கும் நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மலைகிராம மாணவர்களை தேர்வு மையத்துக்கு அழைத்துச் செல்லவும் தேர்வு முடிந்ததும் அழைத்து வரவும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தேர்வு எழுதும் மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யப்பட்டிருக்கிறது.

மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வுக்கு வர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையத்திற்கு வருகின்ற மாணவர்கள் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களை அழைத்து வருவதற்கும்,

தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பேருந்து வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெரிவித்துள்ளார்.