கொரோனா ஊரடங்கால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ. 400 கோடி நஷ்டம்

பதிவு செய்த நாள் : 11 மே 2020 16:54

திருப்பதி,

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.400 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க, தினசரி செலவுகளை மேற்கொள்ள போதிய பணம் இல்லாமல் அவதிப்படுவதாக தேவஸ்தானம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறுகையில் :

ஊழியர்களுக்கான சம்பளம், ஓய்வூதியம் மற்றும் அத்தியாவசிய செலவுகளை செய்ய இதுவரை ரூபாய் 300 கோடி வரை செலவு செய்துள்ளோம்.

தேவஸ்தான பணிகளுக்காக ஆண்டுதோறும் ரூ. 2,500 கோடி வரை  செலவாகி வருகிறது. ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் கொடுப்பதற்காக மட்டும் மாதம் ரூ. 120 கோடி தேவைப்படுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுகாதார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரூ.400 கோடி மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

2020-21ம் ஆண்டில் தேவஸ்தானம் சார்பில் நடந்து வரும் நற்காரியங்களுக்காக ரூ.1385.90 கோடி வரை செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

ஆனால் ஊரடங்கு காரணமாக ரூபாய் 400 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் தினசரி செலவுகளை மேற்கொள்வதற்கு போதிய பணம் இல்லை.

திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான தங்கம் மற்றும் நிலையான வைப்பு நிதியாக வங்கிகளில் இருக்கும்  ரூபாய் 14,000 கோடி ஆகியவற்றை எடுக்காமல் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே இரண்டாவது பணக்கார கோயிலாக கருதப்படும் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலுக்கு சுவமி தரிசனத்திற்காக தினமும் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.