படித்ததில் பிடித்தது – 6 ஏவிஎம்60சினிமா– ஏவி.எம்.சரவணன்

பதிவு செய்த நாள் : 10 மே 2020

திரைப்படங்களை உலகம் முழுவது ரசிகர்கள் ரசிக்கிறார்கள். சினிமா செய்திகளுக்கு உலகமெங்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. நடிகர். நடிகையர் எழுதும் சுய – மற்றும் சரிதைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதே போல்தான் ஒவ்வொரு படத் தயாரிப்பிற்கு பின்னாலும் பல வலிதரும், மகிழ்ச்சியான, சுவையான கதைகள் இருக்கும். தமிழ் சினிமாவின் வரலாற்றில் சகாப்தமாக விளங்கிய பெரிய சினிமா நிறுவனங்களின் வரலாற்றை ஆய்வு செய்தால்  எத்தனை சுவையான தகவல்கள்.

ஏவிஎம் ஸ்டுடியோ தமிழ் சினிமா பார்க்கும் அனைவரும் அறிந்த பெயர். தமிழ் சினிமாவின் வரலாற்றை நடிக நடிகையர் பங்களிப்போடு நிறுவனங்களின் வரலாற்றுப் பின்னணியோடு  படு சுவாரஸ்யமான புத்தகம் ஏவிஎம். சரவணம் எழுதிய ஏவிஎம் 60 – சினிமா.

ஏவிஎம்மின் 60 ஆண்டையொட்டி எழுதப்பட்ட புத்தகம் இது. அவர்கள் தயாரித்த பல வெற்றிப் படங்கள் இன்னும் நம் நினைவை விட்டு அகலாதவை. அந்தப் படங்களுக்குப் பின்னால்தான் எத்தனை சுவையான கதைகள்

                       

ஏவி.எம். சரவணன் திரையுலகத்தில் தனது சம காலத்தில் வாழ்ந்த நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய துல்லியமான மதிப்பீடுகளை வைத்திருந்தார்.சந்திரபாபு, நடிகை பானுமதி, சினிமாவுக்கான விளம்பரங்கள் இப்படி எல்லாவற்றிலும் புது யுகக் கண்ணோட்டமுடையவர். திரைப்படம் தயாரித்தல்  ஏவிஎம் ஸ்டுடியோ வின் வேலை. இந்த வேலையில் வெற்றி என்பதற்கான விதிகள் நாளும் மாறக்கூடியவை. இதை தெளிவாக உணர்ந்தவர் அவரும் அப்பச்சியும். அதனால் அத்துறையில் துளிர்விடும் குருத்துகள் முதல் தொழில் நுட்பங்கள் வரை கருவிலேயே அவற்றின் திறனை அவரால் யூகிக்க முடிந்தது. இதை ஏவிஎம்60 நூல் முழுக்க படிக்கலாம். கரும்புத் துண்டுகள் சில ……

1960ம் வருடம் ஜனவரி மாதம் 20ம் தேதி ` பாவ மன்னிப்பு’ படத்திர்கு பூஜை போட்டோம். இந்தப் படத்தை  நாங்கள் பீம்சிங் அவர்களோடு சேர்ந்து கூட்டாகத் தயாரித்தோம். இந்தப் படத்தின் பின்னணியில் சில தகவல்கள் இருக்கின்றன.

 கோல்டன் ஸ்டுடியோவில் பீம்சிங் அவர்கள் சந்திரபாபுவை வைத்து ` அப்துல்லா’ என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடிவரை படம் வளர்ந்திருந்தது. ஒரு நாள் அவர் என்னை அழைத்து போட்டுக் காட்டினார். அந்தக் கதை சந்திரபாபு எழுதிய கதை. ஒருவன் ஹிந்துவாகப் பிறந்து, ஒரு முஸ்லீமால் வளர்க்கப்பட்டு ஒரு கிறிஸ்துவப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வது போல் கதை அமைந்திருந்தது.

` எவ்வளவு பண்ணியும் சரியா அமையல. முழுவையும் மறுபடியும் ரீ-டேக் பண்ணியாகணும் போலிருக்கு;’ என்று சற்று சலிப்பாகப் பேசினார்.

 எனக்கு அந்தக் கதையின் கரு மிகவும் பிடித்திருந்தது. அப்பச்சியிடம் (ஏவிஎம்.செட்டியார்) போய் ,` இந்தக் கதை புது விஷயமா இருக்கு. நாம் பார்டனர்ஷிப்ல எடுத்தா நல்லா வரும்னு எனக்குத் தோணுது’ என்றேன்.`

`சரி பீம்சிங்கை அழைத்து வா’ என்றார்.

  எல்லோரும் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது `மொத்தம் எவ்வளவு செலவாகும் ?’ என்று பீம்சிங்கை என் தந்தை கேட்டார்.

 ` நாலரை லட்சம் ஆகும் ‘’

` சரி.. நான் ஃபைனான்ஸ் பண்றேம். வர்ற லாபத்தைப் பாதியா பிரிச்சுக்கலாம் ‘ என்று அப்பச்சி சொன்னதை பீம்சிங் ஏற்றுக் கொண்டார். தான் சொன்ன நாலரை லட்சம் பட்ஜெட் தனது சம்பளம் இல்லாமல் மற்ற செலவுகள் மட்டுமே என்பதையும் பீம்சிங் சுட்டிக் காட்டினார். ஒப்பந்தம் கையெத்தானது.

 திரைக்கதை அமைக்கும் முயற்சிகளில் பீம்சிங் தீவிரமாக ஈடுபட்டார். எப்போதும் அவர் தன்னுடன் ஒர் எழுத்தாளர் குழுவையே வைத்திருப்பார்.

 இறைமுடிமணி, அரங்கண்ணல், வலம்புரி சோமநாதான், போன்றவர்கள் அவருடன் இருப்பார்கள். திரைக்கதையை தங்கள் பாணியில் ஒவ்வொருவரும் அலசுவார்கள். மொத்தக் கருத்தையும் திருமலை என்பவர் ஒரு ஷேப்புக்குக் கொண்டு வருவார். இப்படி பலரது முயற்சிகளில் திரைக்கதை வசனம் எழுதி, ` வசனம், சோலைமலை ‘ என்ற பெயரில் வெளிவரும். இதுதான் பீம்சிங் அவர்களின் வொர்க்கிங் ஸ்டைல்!

அப்துல்லா கதையும் அப்படித்தான் விவாதிக்கப்பட்டது. ஸ்கிரிப்ட் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நடிகர் திலகம் சிவாஜியின் தம்பி ஷண்முகம் அவர்களின் திருமணம் ஆபட்ஸ்பரியில் நடந்தது.

நான் போயிருந்தேன். பீம்சிங்கும் வந்திருந்தார்.

` அப்துல்லா படத்தின் கதை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது ?’ என்று நான் கேட்டேன்.

` ரொம்ப அருமையா வந்திருக்கு. ஹீரோ காரெக்டர் பிரமாதமா ஷேப் ஆகியிருக்கு. அதை சந்திரபாபு தாங்கமாட்டார். நாம சிவாஜிபாயை வச்சுதான் எடுக்கணும் ‘என்றார் பீம்சிங்.

 அவர் எப்போதும் நடிகர் திலகத்தை சிவாஜி பாய் என்றுதான் அழைப்பார். அதேபோல் சிவாஜி பீம்சிங்கை ` பீம்பாய்’ என்பார்.

` அதைப் பத்தி ஒண்ணுமில்லே. ஆனா கதை  சந்திரபாபுவுடையதுன்னு சொன்னீங்க. ஆனா அதில அவர் நடிக்கப் போறதில்லைங்கிற விஷயத்தை அவர்கிட்ட சொல்லணுமில்ல ‘என்று கேட்டேன்.

` நான் ஏற்கெனவே சொல்லிட்டேன் ‘ என்ற பீம்சிங்` இன்னொரு விஷயம்’ என்றார். தொடர்ந்து, ` நாம முன்ன போட்ட பட்ஜெட்டை ரீவொர்க் பண்ணனும் ‘ என்று தெரிவித்தார்.

 நாலரை லட்சமாக இருந்தது. பத்தரை லட்சமானது என் தந்தை` சரி’ யென்று சம்மதித்தார். சிவாஜியைப் போட்டு எடுப்பதால் அந்த அதிகச் செலவில் நியாயமிருந்ததை அவர் ஏற்றுக் கொண்டார்.

 எங்கள் திட்டப்படி 1960 அக்டோபர் 26 ந்தேதி பாவ மன்னிப்பை ரிலீஸ் செய்திருக்க வேண்டும். ஆனால் முடியும் நிலையில் இருந்தபோது நடிகை கண்ணாம்பா காலமாகிவிட்டார். பிறகு எம்.வி. ராஜம்மாவை வைத்து படத்தை முடித்தோம். அந்தப் படத்திற்கு இசையமைத்த மெல்லிசை  மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் திறமையைக் கண்டு நான் பலமுறை வியந்து போனேன்.

அவரும் கவிஞர் கண்ணதாசனும் இணைந்தால் அங்கே வரிகளுக்கும் ஸ்வரங்களுக்கும் பஞ்சமே இருக்காது. இரண்டு பேரையுமே நான் ஒவ்வொரு விதத்தில் ` மேதைக் குழந்தைகள்’ என்பேன். இப்போது கூட எங்கள் ஸ்டுடியோ வளாகத்தில் நான் ஆறாம் நெம்பர் அறையைக் கடந்து போகும்போதெல்லாம் கண்ணதாசனும், விஸ்வநாதனும் அங்கே பேசிக் கொண்டிருப்பது  போன்ற பிரமை வருகிறது. அவர்கள் இருவரும் ஒரு அற்புத காம்பினேஷன்.

 பாடல்கள் அனைத்தும் ஒலிப்பதிவானதும் ` மாதிரி இசைத்தட்டு ‘ வரும். சேம்பிள் ரிகார்ட். அதை ` வொயிட் ரிகார்ட் ‘ என்போம்.

` பாவ மன்னிப்பு ‘ படத்தின்` வொயிட் ரிகார்ட்’ வந்தவுடன், நான் அதை, எல். ஆர் நாராயணம் மூலம் அறிமுகமான எனது இனிய நண்பர் ரேடியோ சிலோன் அறிவிப்பாளர் மயில்வாகனன் அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். அந்தக் காலத்தில் வர்த்தக ஒலிபரப்பெல்லாம் கிடையாது. மயில்வாகனன் ` பாவ மன்னிப்பு ‘ பாடல்களை இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பிக் கொண்டே வந்தார். படம் வெளியாவதற்கு முன்பே எல்லாப் பாடல்களும் மிகவும் பிரபலமாகிவிட்டன.

` இப்படிப் பாடல்களை முன்கூட்டியே நிறைய தரம் நேயர்கள் கேட்டுவிட்டால் அப்புறம் படம் வெளியாகும்போது அவை `ஸ்டேல்’ ஆகிவிடும் அபாயம் உண்டு. எனவே போதும், பாடல் ஒலிபரப்பு இனி வேண்டாம் என்று சொல்லி விடுவோமே’ என்று நினைத்தார் பீம்சிங்.

 ` அப்படி எந்த அபாயமும் இல்லை. நாம் ஒலிபரப்பை நிறுத்தச் சொல்ல வேண்டியதில்லை. அப்படியே போகட்டும்’ என்று நான் உறுதியாகச் சொல்லிவிட்டேன்.

` அந்தக் காலத்தில் நெளஷத் இசையமைத்த ` கோஹினூர்’  போன்ற படப் பாடல்கள் வருஷக்கணக்கில் முன்கூட்டியே நேயர்கள் பலமுறை கேட்டும் அவர்களுக்கு சலித்ததில்லை ‘ என்று நான் எடுத்துக் காட்டினேன்.

  என் உறுதியில் அப்பச்சிக்கும் உடன்பாடு இருந்தது.

படம் வெளியானதும் தியேட்டரில் ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தோம். படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் நல்ல வரவேற்பு. குறிப்பாக பாடல் காட்சிகளின்போது ரசிகர்களின் கையொலியும் சந்தோஷக் குரல்களும் உச்சத்தில் இருந்தன.

 பல மாதங்களாக அந்தப் பாடல்களை ரேடியோவில் பல முறை கேட்டிருந்தும் ரசிகர்களின் காதுகளுக்கு அவை பழசாகிப் போய்விடவில்லை. அப்படி அந்தப் பாடல்களில் கண்ணதாசனும், எம்.எஸ்.வி. அவர்களும் தேன் கலந்திருந்தனர்.

` பாவ மன்னிப்பு’ படத்தை  சித்ரா தியேட்டரில்தான் ரிலீஸ் செய்யவேண்டும் என்று பீம்சிங்கும் மற்றவர்களும் கருதினார்கள். பொதுவாக அப்போது சிவாஜி படங்கள் சித்ரா, சயானி, கிரெளன் போன்ற சிறிய தியேட்டர்களிட்ல்தான் ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன.

 ஆனால் அந்தப் படத்தை சாந்தி தியேட்டரில் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் அப்பச்சிக்கு இருந்தது. பெரிய தியேட்டரில் சிவாஜி படத்தை வெளியிட வேண்டும் என்பது மட்டுமல்ல. அப்போது சாந்தி தியேட்டர் பால்கனிதான்  தியேட்டர்களிலேயே  மிகப் பெரிய பால்கனியாக இருந்தது. பால்கனியில் மட்டுமே 421 சீட்டுகள் இருந்தன. அதையும் சேர்த்து மொத்தம் 1212 சீட். அதைவிடப் பெரிய பால்கணியைக் கொண்ட தியேட்டர் இன்றுவரை தமிழ்நாட்டில் இல்லை என்றுதான் கருதுகிறேன். சாந்தி தியேட்டர் கட்டப்பட்டு அதில் வெளியான படங்கள் ஏதும் பிரமாதமான வெற்றி பெறவில்லை. அதுவரை நல்ல படங்களாக அந்தத் தியேட்டருக்கு அமையவில்லை.

` பாவ மன்னிப்பு ‘ மீது அப்பச்சிக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை, சாந்தியில் அதை ரிலீஸ் செய்யவேண்டும் என்ற ஆசையை அவருக்குள் ஏற்படுத்தியிருந்தது.

 சிவாஜியின் சகோதரர் சண்முகம் கூட ` சாந்தி’ யை விட சிறிய தியேட்டரில் போடலாமே என்று சொல்லிப் பார்த்தார்.

` சித்ராவில் போட்டால் நூறு நாள் நிச்சயம் ‘ என்று வேறு சிலரும் யோசனை சொன்னார்கள். ஆனால் அவற்றை அப்பச்சி உறுதியாக நிராகரித்து  ` சாந்தி’ யில்தான் வெளியிட்டார். படம் வெள்ளிவிழா கொண்டாடியது. அந்தத் தியேட்டருக்குப் பொருத்தமான நல்ல படம் அமையாமல் இருந்த குறையையும் ` பாவ மன்னிப்பு’ போக்கியது.

அந்தப் படத்துக்கான விளம்பரம் ஒரு தமிழ் சினிமாவரலாற்றில் ஒரு திருப்பம்.

 ஒரு ராட்சதப் பலூனை ஜப்பானிலிருந்து வரவழைத்து. சாந்தி தியேட்டரின் மேல் அந்த ` மெகா சைஸ்’  பலூனை பறக்க விட்டு, அந்தப் படத்திற்கான விளம்பரத்தில் ஒரு புதுமையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம். அந்தப் பலூனில் ` ஏவி.எம்’ என்ற எழுத்துக்கள் ஆங்கிலத்தில் பெரிதாகவும், வாலில் ` பாவ மன்னிப்பு’ என்ற எழுத்துக்கள் ஒன்றன் பின் ஒன்றாக தமிழிலும் அமைக்கப்பட்டிருந்தன. அன்றைய மவுண்ட் ரோடில் அந்தப் பலூனை அண்ணாந்து பார்த்து அதிசயிக்காதவர்கள் இல்லை. சென்னை மாநகர மக்களுக்கு அந்தப் பலூன் ஒரு வித்தியாசமான அனுபவம்.

 ஆனால் அந்த விளம்பரத்தைச் செய்ததில் எங்களுக்குக் கிடைத்தது வேறு விதமான அனுபவம்.

 சென்னையில் உயரத்தில் எந்த விளம்பரம் செய்வதாக இருந்தாலும் விமான நிலைய நிர்வாகத்திடமிருந்து முன் அனுமதி பெறவேண்டும் என்ற விதிமுறை இருப்பது அப்போது எங்களுக்கு உண்மையிலேயே தெரியாது.

 அதே போல ஹைட்ரஜன் சிலிண்டரின் உதவியால் பறக்கும் அந்தப் பலூனுக்காக சிலிண்டர் வைக்கவும் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். நாங்கள் இரண்டையும் செய்யவில்லை.

 விமான நிலைய அதிகாரிகளிடமிருந்தும், ` இன்ஸ்பெக்டர் ஆஃப் எக்ஸ்ப்ளோஸிவ்ஸ் ‘ அலுவலகத்திலிருந்தும் தனித் தனியாக எங்களுக்கு நோட்டீஸ்கள் வந்தன. நிலைமையை எப்படிக் கையாள்வது என்று அப்பச்சி படிப்படியாக அறிவுரை தந்தார். அதன்படி நடவடிக்கை எடுத்து பிரச்னையைப் பதற்றமின்றி தீர்த்தோம்.

` பாவ மன்னிப்பு’ வெளியாகி சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தபோது பாடல்களுக்க்கு இருந்த வரவேற்பையே ஒரு விளம்பர யுக்தியாக்க அப்பச்சி ஒரு ஐடியா தந்தார்.

 அதன்படி ` பாவமன்னிப்பு ‘ பாடல்கள் போட்டி ஒன்றை அறிவித்தோம்.

படத்தின் பாடல்களை நேயர்கள் தங்கள் ரசனைப்படி வரிசைப்படுத்தி எழுத வேண்டும் .பின்னர் நீதிபதிகள் ஒரு வரிசை தயாரிப்பார்கள். அதனுடன் ஒத்திருக்கும் விடையை தெரிவித்தவர்கள் எல்லோருக்கும் பரிசு. பெருமளவில் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

 பெரிய நோட்டுப் புத்தகங்கள், லெட்ஜர்களிலெல்லாம் பல்வேறு காம்பினேஷன்களில் பாடல்களை வரிசைப்படுத்தி அவர்கள் எழுதியனுப்பியவை ஒர் அறை முழுவதும் குவிந்து போயின. யாரும், எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம் என்று விளம்பரப்படுத்தியிருந்ததால் ரெஸ்பான்ஸ் பிரமாதமாக இருந்தது.

செளந்தரா கைலாசம் உள்ளிட்ட பெருமக்கள் நீதிபதியாக இருந்தார்கள்.

 ஸ்டுடியோ வளாகத்தில் திறந்த வெளியில் ஒரு கரும்பலகையில் ` தீர்மானிக்கப்பட்ட பாடல் வரிசை’ யை ( அந்த வரிசை காலம் பல கடந்து, அத்தான் – என்னத்தான் – வந்த நாள் முதல் – காலங்களில் அவள் வசந்தம் – பாலிருக்கும் பழமிருக்கும் – ஒவியம் கலைந்ததென்று – எல்லோரும் கொண்டாடுவோம் – சாயவேட்டி ) சாக்பீஸி எழுதிப் போட்டு எங்கள் ஊழியர்களிடன் நேயர்களின் கடிதங்களைப் பிரித்துத் தந்து சரி பார்க்கச் சொன்னோம். ஏதோ பெரிய தேர்வு ஒன்றில் கலந்து கொள்வது போல எங்கள் ஊழியர்கள் அமர்ந்து அப்பணியில் அமர்ந்து ஈடுபட்டார்கள். ஒரு திரைப்படத்தின் பாடல்களையும், ரசிகர்களையும் சம்பந்தப்படுத்தி, ஒரு போட்டி நடத்தப்பட்டது. அதுதான் தமிழில் முதல் தடவை என்று அனைவரும் பாராட்டினார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் பல்லாயிரம் பேர் பங்கு கொண்ட அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பரிசுத் தொகையான பத்தாயிரம் ரூபாயை பகிர்ந்து கொண்ட போது தபாலுக்குச் செலவு செய்த தொகை கூட அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவர்களுக்கு ஒரு ` த்ரில்’ இருந்தது.

` பாவ மன்னிப்பு ‘ படத்தைப் பார்த்தர் பிரபல ஹிந்திப் பின்னனிப் பாடகி லதா மங்கேஷ்கர். அவர் நடிகர் திலகம் சிவாஜியின் தீவிர ரசிகை. அதேபோல் சிவாஜியும் லதாவின் ரசிகர். படத்தைப் பார்த்த லதா மங்கேஷ்கர் ` எனக்கு இந்தப் படத்தின்  16 எம்.எம். பிரிண்ட் வேண்டும்’ என்று கேட்டு வாங்கிக் கொண்டு போனார். அந்த அளவுக்கு அவர் ` பாவ மன்னிப்பு ‘ படத்தை  ரசித்தார். அவர் அப்படிக் கேட்டபோது எங்களுக்குப் பெருமையாக இருந்தது.

           `அன்னை’ செய்த ஆர்ப்பாட்டம்!

 `  எங்கள் ஒவ்வொரு படத்திலும் எங்களுக்கு ஒரு அனுபவம் உண்டு. உதாரணமாக நாங்கள் தயாரித்த அன்னை படம்.

 எங்களுக்கு ஒரு அருமையான கதை கிடைத்தது. டாக்டர் நிரஞ்சன் குப்தா எழுதிய ` மாய ம்ருகா’ என்ற வங்காள மொழிக் கதை. முதலில் அதும் அந்த மொழியில் நாவலாக வந்தபோது மிகவும் புகழ் பெற்றது. பிறகு அது நாடகமாக்கப்பட்டு அதிலும் பெருவெற்றி கண்டது.

 இந்த நாடகத்தைப் பார்த்த அப்பச்சிக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்தக் கதைதான் தமிழ்ல் அன்னை படமானது.

 ஆனால் இந்தக் கதை பிடித்தவுடனேயே அப்பச்சி ஒரு விஷயத்தில் தீர்மானமாக இருந்தார்.   இந்த கதாபாத்திரத்திற்கு பானுமதியை தவிர வேறு யாரும் நடிக்க முடியாது என்பதுதான்.

 ஆனால் அதில் ஒரு சிக்கல் இருந்தது.  அப்போது எங்கள் நிறுவனத்திற்கும் பானுமதி சில கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதனால் எங்கள் ஸ்டுடியோ வளாகத்திற்குள் நுழைவதில்லை என்று பானுமதி முடிவெடுத்திருந்த நேரம்.

 ஆனால் தந்தை சொல்லிவிட்டதால், நானும், சகோதரரும் குமரனும் பானுமதியை சந்தித்தோம்  அவருக்கு எல்லா மொழிகளிலும் நண்பர்கள் உண்டு. அதனால் நாங்கள் கொடுத்த அந்த வங்காள நாவலை வாங்கி வைத்துக் கொண்டார்.

 தெரிந்துவர்கள் மூலமாக உடனே படிக்க வைத்து தெரிந்து கொண்டார். இரண்டு நாட்களில் எங்களுக்கு அழைப்பு வந்தது.` எனக்கு இந்த கதை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால் நான் உங்கள் ஸ்டுடியோவுக்கு வரமாட்டேன். வேற ஸ்டுடியோவில் வைத்து எடுப்பதாக இருந்தால் நடிக்கிறேன்.’ எங்களுக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. பெரும்பாலும் எங்கள் படங்களில் வெளிப்புறக்காட்சிகளை தவிர, வேறு இன்டோர் காட்சிகளை எங்கள் ஸ்டுடியோவில் தான் எடுப்போம். எங்களிடம் இல்லாத தொழில் நுட்ப வசதி வேறு ஸ்டுடியோக்களில் இருந்தால் மட்டுமே தொழில் நுட்பத்திற்காக அங்கே போவோம்.

` உங்களுக்கு எங்கள் நிறுவனத்தோடு கருத்து வேற்றுமை இருப்பதாக பரவலாக எல்லோருக்கும் தெரியும்.  இப்போது நாங்கள் எடுக்கும் படத்தில் நீங்கள் நடிக்கும்போது வெளி ஸ்டுடியோவில் பட்த்தை எடுத்தால் இந்தப் சாதாரணமாக பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டிய கருத்து வேற்றுமைகளை பூதாகரப்படுத்திவிடுவார்களே ‘ என்றோம். அதுவும் பணிவாக,

 காரணம் பானுமதியின் பிடிவாத குணம் எங்களுக்குத் தெரியும். சிறிது நேரம் யோசித்தார். அடுத்தது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

` சரி! நான் உங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து நடிக்க வேண்டுமானால் ஒரு நிபந்தனை ‘ என்றார்.

 அவர் முகத்தையே கலக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.

` இந்தப்  படம் முடியும்வரையில்  ஏவி.எம். செட்டியார் ஸ்டுடியோ பக்கமே வரக்கூடாது ‘

 எங்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவர் உருவாக்கிய ஒரு ஸ்தாபனத்திற்குள், அவர் நடத்திக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தில், அதுவும் அவர் முதலாளியாக இருந்து எடுக்கப்போகும் படத்தின்போது அவர் ஸ்டுடியோவுக்கு அவர் வரக்கூடாதா ?’

நாங்கள் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டு, ` தந்தையிடம் பேசிவிட்டு வருகிறோம்’ என்று வந்துவிட்டோம். `நமக்கு பிடிக்காததை நட்சத்திரங்கள் பேசினாலும் நாம் பொறுமையாக கேட்க வேண்டும். அவரோடு வாதம் செய்யக்கூடாது’ இது தந்தையார் எங்களுக்கு கற்றுக்கொடுத்த பாலபாடம்.

  கோபத்தோடு, தந்தையிடன் வந்து ` பானுமதி நடிப்பதாக இருந்தால் இந்த படமே நமக்கு வேண்டாம்’ என்றோம்.

நடந்தவற்றை எல்லாம் பொறுமையாக கேட்ட அப்பச்சி. அதனால் என்ன ? இரண்டு மாதத்தில் படத்தை முடிக்க மாட்டீர்களா ? இங்கே பார்க்கிற வேலையை நான் வீட்டில் இருந்து பார்த்துவிட்டு போகிறேன். நான் இல்லாமல் உங்களால் நிர்வகிக்க முடியாதா ? நான் வெளிநாடு போயிருப்பதாக நினைத்துக் கொள்ளுங்கள் ‘ என்றார்.

 அவருக்கு தன்னுடைய கெளரவம், என்பதை விட தன் ஸ்தாபனத்திற்கு நல்ல படம் வருவது தடைப்பட்டு போய்விடக்கூடாது.

 அதே போல் நடந்தது. படம் பெரும் வெற்றி பெற்றது. படத்தின் நூறாவது நாள் சென்னை நீயு உட்லாண்ட்ஸ் ஹோட்டலில் எஸ்.எஸ். வாசன் தலைமையில் நடந்தது.

 தந்தை  நடந்து கொண்ட விதம். படப்பிடிப்பின்போது நாங்கள் அவருக்கு அளித்த மரியாதை, படம் எடுத்த விதம், படம் கண்ட வெற்றி எல்லாமே பானுமதியின் மனதை உலுக்கிவிட்டது.

 படத்தின் நூறாவது நாள் விழாவில் பானுமதி பேசுவதற்கு முன்,  தந்தையோடு பேசாமல் இருந்த பானுமதி அவர் காலில் விழுந்தார். வயது காரணமாக அவர் செலுத்தும் மரியாதை என்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள். ஆனால் எங்களுக்கோ வியப்பு!

 பானுமதி பேசும்போது,` இந்தப் படத்தின் வெற்றிக்கு என் நடிப்பு தான் காரணம் என்று பலரும் காரணம்  பேசினார்கள். இல்லை இந்த வெற்றிக்கு முழுக் காரணம் ஏவி. எம் .செட்டியார். நான் விதித்த நிபந்தனைகளையெல்லாம் பொறுமையோடு ஏற்றுக்கொண்டார். ஆனால் நான் நடந்த விதம் குறித்து இப்போது வருத்தப் படுகிறேன். அதற்காக மன்னிப்பு கேட்பதிலும் நான் பெருமிதம் கொள்கிறேன்’என்றார்.

 பின்னார் அப்பச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது  சென்னை தொலைக்காட்சியில் ` அன்னை’ படம் போட்டிருந்தார்கள்.

 அதைப் பார்த்த தந்தை, ` இந்த மாதிரி கதையை நம்பி இப்ப படமே எடுக்க முடியலையேப்பா’ என்று வருத்தப்பட்டார்.கட்டுரையாளர்: சுதாங்கன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation