*சபரிமலை கோவில் 18-ம் படிக்கு பிரதிஷ்டை

பதிவு செய்த நாள்

17
அக்டோபர் 2015
02:36


திருவனந்தபுரம்.அக்.17:கேரளாவில் பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் உள்ள 18-ம் படிக்கான பிரதிஷ்டை பூஜை நேற்று சிறப்பாக நடந்தது.

ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள். மாலை அணிந்து விரதமிருந்து சென்று,அங்கு உள்ள 18-ம் படி ஏறியே சாமிக்கு நெய் அபிஷேகம் செய்து தரிசிப்பது வழக்கம்.. . கோவிலின் புனிதமாக கருதப்படும் இந்த 18-ம் படி ஐம்பொன்னால் வேயப்பட்டு இருந்தது. இது பழுதுப்பட்டதால் இப்படியின் மீது புதியதாக ஐம்பொன் தகடு பதிக்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று இப்பணியை செய்தது. 2 நாட்களுக்கு முன்பு பணி முடிந்தது. 18 படியிலும் ஐம்பொன் தகடு பதிக்கப்பட்டு ஜெகஜ் ஜோதியாக ஜொலிக்கிறது.

இந்த படியில் பக்தர்கள் படி ஏறுவதற்கு  முன்பு அதற்கு சுத்தி பூஜையும், பிரதிஷ்டை நடத்துவதற்காக கோவில் நடை நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. மாலையில் கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் 18-ம்படிக்கு சுத்தி பூஜை நடத்தப்பட்டது.

நேற்று காலை 10 மணிக்கு மீண்டும் 18-ம்படிக்கு பிரதிஷ்டையும், கும்பாபிஷேகமும் நடந்தது. இதில் கோவில் மேல்சாந்தி எலிக்கோடு கிருஷ்ணதாஸ் நம்பூதிரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இப்பூஜைகள் முடிந்த பின்பு ஐய்யப்பனுக்கு விசேஷ பூஜைகளும் நடந்தன.

நாளை  ஐப்பசி மாதம் பிறப்பதால் மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை மாதம் தொடங்கியதும், மண்டல பூஜைக்கான விழா தொடங்கும்.

அதை தொடர்ந்து மகர விளக்கு பூஜை ஆரம்பமாகும். இந்த 2 விழாக்களின் போதும் அய்யப்பனை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் சபரி மலைக்கு வருவார்கள். அவர்களுக்கான அடிப்படை வசதி களை செய்து கொடுக்க கோவில் நிர்வாகம் நடவ டிக்கை எடுத்து வருகிறது